Saturday 8 October 2011

பைனலுக்கு முன்னேறியது பெங்களூரு அணி: கெய்ல், கோஹ்லி அபாரம்

 

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் கெய்ல், கோஹ்லி அபார ஆட்டத்தை வெளிப்படுத்த, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது.
மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்த முதலாவது அரையிறுதியில், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், நியூ சவுத் வேல்ஸ் (ஆஸ்திரேலியா) அணிகள் மோதின. "டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் வெட்டோரி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
கைப் வாய்ப்பு:
பெங்களூரு அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் சையது முகமது நீக்கப்பட்டு, முகமது கைப் சேர்க்கப்பட்டார். நியூ சவுத் வேல்ஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
ஸ்மித் அபாரம்:
முதலில் பேட்டிங் செய்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு ஷேன் வாட்சன் (3) ஏமாற்றினார். பின் இணைந்த டேவிட் வார்னர், டேனியல் ஸ்மித் ஜோடி அதிரடியாக ரன் சேர்த்தது. பெங்களூரு பந்துவீச்சை பதம்பார்த்த வார்னர், "சிக்சர்' மழை பொழிந்தார். அபாரமாக ஆடிய வார்னர், 40வது பந்தில் அரைசதம் அடித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டேனியல் ஸ்மித், பட்கல் வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரில், ஒரு இமாலய "சிக்சர்' அடித்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 146 ரன்கள் சேர்த்த போது டேனியல் ஸ்மித் (62 ரன்கள், 42 பந்து, 3 சிக்சர், 7 பவுண்டரி), அரவிந்த் வேகத்தில் "போல்டானார்'.
வார்னர் சதம்:
தொடர்ந்து அதிரடி காட்டிய வார்னர், 62வது பந்தில் சதம் அடித்தார். அரவிந்த் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் இரண்டு "சிக்சர்', இரண்டு "பவுண்டரி' உட்பட 23 ரன்கள் எடுத்த வார்னர், அணியின் ஸ்கோரை வலுவாக்கினார். நியூ சவுத் வேல்ஸ் அணி, 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. அபாரமாக ஆடிய வார்னர், 68 பந்தில் 11 "சிக்சர்', 6 "பவுண்டரி' உட்பட 123 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். பெங்களூரு சார்பில் தில்ஷன், அரவிந்த் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
கெய்ல் அதிரடி:
சவாலான இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு தில்ஷன் (4) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், விராத் கோஹ்லி ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. நியூ சவுத் வேல்ஸ் பந்துவீச்சை வெளுத்துவாங்கிய கெய்ல், 20 பந்தில் அரைசதத்தை பதிவு செய்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த கோஹ்லி, தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். கம்மின்ஸ் வீசிய ஆட்டத்தின் 14வது ஓவரில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்து பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்ட கெய்ல் (92 ரன்கள், 41 பந்து, 8 சிக்சர், 8 பவுண்டரி) அதே ஓவரில் அவுட்டானார்.
கோஹ்லி நம்பிக்கை:
அடுத்து வந்த சவுரப் திவாரி (0), மயங்க் அகர்வால் (7) சோபிக்கவில்லை. தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி, அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஸ்டீவன் ஸ்மித் வீசிய ஆட்டத்தின் 19வது ஓவரில், தொடர்ந்து இரண்டு பவுண்டரி அடித்த கைப் (13*), அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு அணி 18.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (84 ரன்கள், 49 பந்து, 3 சிக்சர், 10 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் பெங்களூரு அணி, முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் தொடரின் பைனலுக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருதை பெங்களூரு அணியின் கோஹ்லி பெற்றார்.

வார்னர் சாதனை

பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில் 68 பந்தில் 123 எடுத்து அவுட்டாகாமல் இருந்த, நியூ சவுத் வேல்ஸ் அணியின் டேவிட் வார்னர், தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். முன்னதாக இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 69 பந்தில் 135 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் "டுவென்டி-20′ அரங்கில் அடுத்தடுத்து இரண்டு சதம் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார்.

200வது "சிக்சர்'

மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20′ தொடரின் 200வது சிக்சரை, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் கிறிஸ் கெய்ல் அடித்தார். நேற்று நடந்த நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதியில், ஸ்டூவர்ட் கிளார்க் வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரின் 4வது பந்தில் ஒரு இமாலய "சிக்சர்' அடித்த கெய்ல், தொடரின் 200வது சிக்சரை பதிவு செய்தார்.
* தொடரின் முதல் சிக்சரை அடித்த பெருமை கிறிஸ் கெய்ல்லை சேரும். இதனை வாரியர்ஸ் அணிக்கு எதிராக அடித்தார். தொடரின் 100வது சிக்சரை மும்பை இந்தியன்ஸ் வீரர் போலார்டு, கேப் கோப்ராஸ் அணிக்கு எதிராக அடித்தார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger