தினமும் ரூ.32 செலவு செய்ய முடிந்தவர்கள் ஏழைகள் அல்ல. அவர்கள் வறுமைக்கோட்டுக் கீழ் வர மட்டார்கள் என திட்டக் கமிஷன் துணைத் தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா அளித்த அறிக்கையால் நாடு வெகுண்டெழுந்திருக்கிற இந்த நேரத்தில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு ரூ.6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட, அதிநவீன, ஹைடெக் பென்ஸ் கார் வாங்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதியின் கார் மாற்றப்பட்டுள்ளது என்று செய்திகள் பரவினாலும், ராஷ்டிர பதி பவனோ, மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனமோ இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது.
அப்படி என்ன தான் இந்த காரில் விசேஷம் என்று பார்ப்போம். ஜனாதிபதிக்காக வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் காரின் மாடல் எண்: மெர்சிடீஸ் பென்ஸ் S 600 L புல்மேன். ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காரைப் போல, இந்தக் காரில் ஆங்காங்கே அதிநவீன ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளனவாம். புல்லட் புரூப் வசதி, சிறிய தானியங்கி துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் சிற்சில வெடிபொருட்கள் எல்லாம் காரிலேயே பொருத்தப்பட்டுள்ளன. ஏதாவது பாதுகாப்பு நெருக்கடி ஏற்படும் போது சமாளிக்கத்தான் இத்தனை வசதிகள் என்று கூறப்படுகிறது. இது மட்டுமல்ல பிளாட் டயர் வசதி, தீயணைப்புக் கருவிகள் என இன்னும் பல வசதிகளும் இருக்கின்றனவாம்.
கடந்த ஜூன் மாதம் இந்தக் கார் வாங்கப்பட்டதாகவும், அதன் பின் தேவைக்கேற்ப நிபுணர் குழு பரிந்துரையின் படி பாதுகாப்பு உபகரணங்கள் ஃபிட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பாதுகாப்பு மட்டுமல்ல சொகுசு அம்சங்களும் தாராளமாக புகுத்தப்பட்டுள்ளன இந்தக் காரில். 517 ஹார்ஸ் பவர் கொண்ட r 12 சிலிண்டர் பயோ டர்போ இன்ஜின் பொருத்தப்பட்டு எத்தகைய அபாயகரமான சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மினி மீட்டிங் நடத்தும் அளவுக்கு ஸ்பேஸ் இருக்கிறதாம். வழக்கமாக எல்லா சொகுசு கார்களிலும் இருக்கும் டி.வி., தவிர அதிநவீன தொலைதொடர்பு சாதனங்களும் இருக்கிறதாம்.
கடந்த 2010ம் ஆண்டு டில்லியில் நடத்தப்பட்ட மெர்சிடீஸ் பென்ஸ் எக்ஸ்போவில் தான் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காருக்குள் விஷ வாயுவை செலுத்தினால் கூட அதை சுத்திகரித்து நல்ல சுத்தமான காற்றை அளிக்கும் படிக்கு, ஏர் கண்டிஷனரும் பொருத்தப்பட்டுள்ளதாம். இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் 550 சிறப்பு உபகரணஙகள் காரில் பொறுத்தப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி, சூப்பர் சோனிக் விமானத்தில் பயணித்த முதல் பெண் ஆகிய பல பெருமைகளுடன், சூப்பர்சோனிக் காரிலும் பயணப்பட இருக்கிறார் பிரதிபா பாட்டீல்.
இத்தகைய ஸ்பெஷல் கார் குறித்த செய்தி கசிந்ததில் இருந்து பல்வேறு தரப்பினர், 6 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட கார் அனாவசியமானது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பிலிபிட் தொகுதி பா.ஜ., எம்.பி., வருண் ட்விட்டர் சமூக வலைதளத்தில் " 6 கோடி ரூபாய் செலவில் அதிநவீன கார் வாங்கப்பட்டுள்ளதாம், அதில் இருக்கும் வசதிகளைப் பார்த்தால், அது ஜனாதிபதிக்கா இல்லை பேட்மேனுக்கா என தெரியவில்லை" என கூறியுள்ளார்.
(dm)
Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், இந்தியா
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?