Thursday, 1 September 2011

எழுத்தறிவித்தவன் ---சிறுகதை--



ராமசாமி இறந்து போய் விட்டார்!

பெரிய செல்வந்தர்.எனவே வீட்டின் உள்ளும்,வெளியிலும் நல்ல கூட்டம்-உறவினர்கள், குடும்ப நண்பர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் என்று.

அவருக்கு ஒரே மகன்.அவன் அவர் பேச்சைக் கேட்காமல் வேறு மதப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதால் அவன் உறவையே வெட்டி விட்டார்.

எனவே அவரது தம்பியே ஈமச்சடங்குகள் செய்ய வேண்டும் எனத் தீர்மானிக்கப் பட்டது.

வந்திருந்தவர்கள் சின்னச்சின்னக் குழுக்களாகக் கூடி நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் யாருக்கும் தெரியாது.ராமசாமியின் ஆத்மா அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும் என்பது.

(ஒரு சிறு பிறிது மொழிதல்(digression).சமீபத்தில் கேட்டது.ஒருவர் இறந்தவுடன் ஆன்மா நேரடியாக எமலோகம் செல்கிறதாம்.அங்கே எமதர்மன் தன் தண்டத்தை அதன் தலையில் வைக்கிறான்.உடனே அது பிறந்தது முதல் மரணம் வரை தான் வாழ்வில் செய்த புண்ணிய பாவங்களைச் சொல்லி விடுகிறது.அந்த ஆன்மாவுக்கு உலக ஆசை இன்னும் நீங்கவில்ல. எனவே எமன்அதை,ஆசை அகன்ற பின் வரச் சொல்லித் திருப்பி அனுப்பி விடுகிறான். ஆன்மா திரும்பி வருகிறது.உடலுக்குள் நுழைய முடியாது எனவே அங்கேயே அழுது கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறது..நம்புகிறவர்கள் நம்பலாம்!)

அப்படி ஒரு குழுவில் இருந்த கணேசன் தாழ்ந்த குரலில் சொன்னார்"என்னத்தைத் தலயில் கட்டிக் கொண்டு போனார்?அறுந்த விரலுக்குச் சுண்ணாம்பு கொடுக்காத மனிதன். எத்தனை முறை அநாதை ஆசிரமத்துக்கு நன்கொடை கேட்டிருப்பேன்! ஒரே ஒரு முறை பிச்சைக்காசு 100 ரூபாய் கொடுத்தான்!"

அந்த ஆன்மா கத்தியது"பாவி !நீ ஒரு திருடன் என்பது எனக்குத் தெரியாதா? நன்கொடை வாங்கி அதை முழுவதும் ஆசிரமத்துக்கா உபயோகித்தாய்?உன் பங்களா எப்படிக் கட்டினாய்? உனக்கு ஏனடா நான் கொடுக்க வேண்டும்?"

வேலாயுதம் சொன்னார்"ஆமாங்க!நானும் கோவில் கும்பாபிஷேகத்துக்குப் பணம் கேட்டேன்.ஒரு பைசா தரவில்லையே.பெரிய பணக்காரர்,பக்தர்.தினமும் கோவிலுக்குப் போகிறவர் .ஆனால் கும்பாபிஷேகத்துக்குக் கொடுக்க மனமில்லை.பிரபுதான்;கஞ்சப்பிரபு!"

ஆன்மா அலறியது"டேய்,பொம்பளைப் பொறுக்கி!நீ வசூல் பண்ணின பணத்திலிருந்து உன் ஆசை நாயகிக்கு நகை வாங்கியது எனக்குத் தெரியும் .அதுக்காகப் பொய்க்கணக்கு எழுதியவன்தானேடா நீ!"

பொதுவான அனைவரின் கருத்தும் அவர் தருமம் செய்யாத கஞ்சர் என்பதாகவே இருந்தது!

உடலை எடுக்கும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.

அப்போதுதான் அவன் வந்தான்.வயது 18 இருக்கும்.சோகம் தோய்ந்த முகம். வெளியில் இருந்தவர்களைத் தாண்டி உள்ளே போனான்.பிணத்தின் முன் வணங்கினான்.கால்களைத் தொட்டுத் தன் கண்களிலொற்றிக் கொண்டான்.கண்ணீர் வடித்தான்.

அங்கிருந்த பெரிய மனிதர்களுகுச் சந்தேகம்"யார் இவன்? ராமசாமிக்கு வேறு பெண்ணிடம் தொடர்பு இருந்ததோ? அவள் மகனோ?"

அவன் வெளியேறும் போது அவனை நிறுத்திக் கேட்டனர்".யாரப்பா நீ?" அவன் சொன்னான்.

"ஐயா!நான் ஓர் ஏழை.பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கையில் பணம் இன்றிக் கஷ்டப் பட்டேன். ஒரு நாள் கோவிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தேன். அப்போது இவர் அங்கு வந்து என்னை விசாரித்தார்.பின் எனக்குப் பண உதவி செய்தது மட்டுமின்றி என் மேற்படிப்புக்கு உதவித்தொகை கிடைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்.இன்று நான் படிப்பது அவர் தயவில்தான்."

அனைவரும் திகைத்து நின்றனர்.

அவன் சொன்னதைக் கேட்க அந்த ஆன்மா அங்கில்லை.

அவன் அவர்பாதங்களை த்தொட்டுக் கண்ணீர் விட்ட போதே ,அந்த ஆன்மாவின் பாதங்கள் சுவர்க்கம் செல்லும் வலிமை பெற்றன.வழி திறந்தது!

"அன்ன சத்திர மாயிரம் வைத்தல்
ஆல யம்பதி நாயிர நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல் "—பாரதி!






http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger