Thursday, 1 September 2011

கடவுள் கேட்கும் ���ரம்!....கவிதை



இந்த வார நட்சத்திரமாக விளங்க அழைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமும் , கௌரவமும் அளித்த தமிழ்மணத்துக்கு முதற்கண் என் நன்றி!
.............................
எதையுமே கடவுள் வாழ்த்துடன் தொடங்குவதுதானே மரபு!இதோ--

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா !"

நான் கேட்டுவிட்டேன்,கடவுள் என்ன சொல்கிறார்?!-----இதோ

உனக்கு வேண்டுவன எல்லாம் என்னிடம் கேட்கின்றாய்
எனக்கு வேண்டுவ தென்ன வென்று நீ கேட்டதுண்டா?

பண்டிகைகள் கொண்டாடி படையல் படைக்கின்றாய்
உண்பதற்கு விதவிதமாய் செய்து மகிழ்கின்றாய்

பிள்ளையாராய்க் கும்பிட்டுக் கொழுக்கட்டை படைக்கின்றாய்
பிரப்பம் பழம் விளாம்பழமெனப் பலபழமும் கொடுக்கின்றாய்

கண்ணனாய் வணங்கி வெண்ணைய் வைக்கின்றாய்
எண்ணெய்ப் பலகாரம் பலவும் படைக்கின்றாய்.

கோவில்களில் எனக்கு பால் தயிர் பன்னீர் என்று
ஓய்வில்லாமல் அபிஷேகம் பலவும் செய்கின்றாய்.

உண்டியல் தேடிப் போய் பணம் நகை எனப் பலவும்
கொண்டு போய் நீ தவறாமல் கொட்டுகின்றாய்.

திருக் கல்யாணம் என்று சொல்லி யெனக்குத்
தினம் தினம் திருமணம் செய்விக் கின்றாய்

பட்டு வேட்டிப் புடவை கழுத்தில் தாலியெனப்
பலவும் வாங்கி யெனக்கு நீ அணிவிக்கின்றாய்


நான் உன்னை என்றுமே கேட்டதில்லை
எனக்கு இவையெல்லாம் கட்டாயம் வேண்டுமென்று

இன்று நான் சொல்கின்றேன் கேள் மனிதா
என் விருப்பம் என்னவென்று நீ அறிய.

நான் என்றுமே கொடுப்பவன்தான்,கேட்பவன் அல்ல!

படைக்கின்ற பழங்களெல்லாம் பசித்தவர்க்குக் கொடு
உடைக்கின்ற தேங்காயெல்லாம் நலிந்தவர்க்கு உண்ணக் கொடு.

குடம் குடமாய்க் கொட்டுகின்ற பாலெல்லாம் கொண்டு போய்
குடிக்கக் கஞ்சி கூட இல்லாக் குழந்தைகளுக்குக் கொடு.

எனக்குப் போர்த்துகின்ற வேட்டி சேலை இவை எல்லாம்
கனக்கின்ற குளிரில் வாடும் கணக்கற்றோருக்குக் கொடு.

கட்டுக்கட்டாய் உண்டியலில் கொட்டுகின்ற பணத்தில் நீ
கட்டித்தா இலவச கல்விச்சாலை,மருத்துவமனை இவையெல்லாம்.

திருக் கல்யாணம் செய்விக்கும் செலவினிலே
திக்கற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து வை!

என்னிடம் எப்போதும் நீ வரம் வேண்டி நிற்பாய்
இன்று நான் கேட்கின்றேன் இந்த வரம் நீ தா!


டிஸ்கி--(இந்தக் கவிதைக்கான விதை பல ஆண்டுகளுக்கு முன் விழுந்தது.அப்போது கரூரில் இருந்தோம்.ஒரு நாள் அம்மன் கோவில் சென்று திரும்பியவுடன் என் தாயார்(தற்போது வயது 93) சொன்னார்கள்."குடம் குடமாப் பாலபிஷேகம் பண்ணினா.அப்ப எனக்குத் தோணித்து இப்படிப் பாலெல்லாம் வீணாப்போறதே.இதுக்குப் பதிலா யாராவது பசித்த ஏழைக் குழந்தைகளுக்குக் குடுக்கக் கூடாதான்னு.உடனே சந்நிதியில் நின்னு இப்படி யோசிக்கறது தப்புன்னு அம்மன் கிட்ட மன்னிப்பும் கேட்டுண்டேன்"

நான் சொன்னேன் "தவறில்லை.உன்னை அப்படி யோசிக்க வைத்ததே அந்த அம்மன்தானே!")



http://tamil-friend.blogspot.com




  • http://tamil-friend.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger