Thursday, 1 September 2011

கனடாவில் ஜாக் லே���்டனின் இறப்பு ஈ��ு செய்ய முடியாத ��ழப்பு!



புற்றுநோய் என்கிற கொடிய நோய் எவருக்கும் உயிர்ப் பிச்சை கொடுக்காது. இந்த நோய்க்கே பலியாகிவிட்டார் கனேடிய மத்திய அரசியலில் வலுமிக்க செல்வாக்கைப் பெற்றவரும் தற்போதைய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழர்களின் வாழ்வியலை மேம்படுத்த தன்னை முழுமையாக ஈடுபடுத்தியவருமான புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜாக் லேய்டன்.

திங்கட்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 4.45 மணியளவில் தனது 61-ஆவது வயதில் ஜாக் காலமானர் என்கிற செய்தியை அவரது குடும்பத்தினர் அறிவித்தவுடன், பதறிப்போனார்கள் அவரது கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் இவரை நேசித்த பல்லாயிரம் மக்கள். ஈழத்தமிழருக்காக கனேடியப் பாராளுமன்றத்தில் உரத்துக் குரல் கொடுத்த மாமனிதர் ஜாக் லேய்டன்.

தமது தாயகத்தில் அடக்கப்பட்ட இனமாக இருந்த தமிழர்கள், குடியேறிய கனேடியத் தேசத்திலும் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ அனுமதிக்க முடியாதெனவும், அவர்கள் தமது விருப்பு வெறுப்புக்களை கனேடிய அரசியலில் தெரிவிக்க வழி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை நேரடியாகவே தெரிவித்து வந்த ஒரு உத்தம தலைவரே ஜாக் லேய்டன். இப்படிப்பட்ட தலைவரை பிரிந்துள்ளார்கள் ஈழத்தமிழர்கள்.

கியுபெக் மாநிலத்தில் ஒரு சாதாரண மனிதனாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ஜாக் லேய்டன்இ அரசியல் விஞ்ஞானத்தில் இளநிலைப் பட்டத்தைப் பெற்ற பின்னர் முதுநிலைப் பட்டத்தையும் பின்னர் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். அரசியல் விஞ்ஞானத்துறைப் பேராசிரியராகவும் இவர் கடமை புரிந்தார். 1950-ஆம் ஆண்டு பிறந்த இவர், இரு தடவைகள் திருமணம் செய்து கொண்டவர். தனது 19-ஆவது வயதில் சாலி ஹல்போர்ட் என்பவரை 1969-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மைக்கேல் மற்றும் சாரா என்கிற இரு பிள்ளைகள் பிறந்தார்கள். ஜாக்கின் முதல் திருமணம் 1985-ஆம் ஆண்டில் முடிவுற்றது.

கல்விச் சபையின் அறங்காவலராக இருந்த ஒலிவியா சோவ் என்கிற கொங்கொங்கை சேர்ந்த பெண்ணுடன் நட்புறவு ஏற்பட்டது. இருவரும் 1988-ஆம் ஆண்டில் திருமணம் செய்து டொராண்டோவில் வசிந்து வந்தார்கள். 1982-இல் ஜாக் லேய்டன் டொராண்டோவின் நகரசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு, மக்களுக்கு பல நல்ல விடயங்களை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கணவனின் அரசியல் பிரயாணத்திற்கு உறுதுணையாக இருந்ததுடன், தானும் அவர் சார்ந்த கட்சியுடனே சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் ஒவிலியா சோவ் என்பது குறிப்பிடத்தக்கது.


கட்சிக்கு பெருமை தேடித்தந்த வரலாற்று நாயகன்

தான் 2003-ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பதவியை அலெக்ஸ்சா மச்டோனோவிடம் இருந்து பெறும்போது வெறும் 13 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியை 2004-ஆம் ஆண்டில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 19 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யுமளவு உயத்தினார். 2006-ஆம் ஆண்டில் மீண்டும் இடம்பெற்ற தேர்தலில் 29 உறுப்பினர்கள் வெல்லும் வகையில் செயற்பட்டார். 2008-ஆம் ஆண்டில் இடம்பெற்ற தேர்தலில் 37 ஆசனங்களைப் பெறுமளவு உழைத்தார். நான்காம் இடத்திலிருந்த கட்சியை மே 2011-இல் இடம்பெற்ற தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு உயர்த்தி 103 ஆசனங்களை கைப்பற்றி பிரதான எதிர்க்கட்சியென்கிற இடத்தை தக்க வைத்தார் ஜாக் லேய்டன்.

எதிர்கட்சித் தலைவராக பதவியேற்று இரு மாதங்களுக்குள்ளாகவே தனது பதவியை தற்காலிகமாக இராஜினாமா செய்தார் ஜாக் லேய்டன். கடந்த மாதம் 25-ஆம் நாளன்று தனது பதவியிலிருந்து தற்காலிகமாக விலகி, தன்னை அழிக்க குடிகொண்ட புற்றுநோய்க்கு எதிராக போராடி வெல்லப்போவதாக அப்போது அறிவித்தார். கட்சியை இமாலய வெற்றிக்கு இட்டுச் சென்ற ஜாக் லேய்டனினால் தன்னை அழித்துக்கொண்டிருந்த புற்றுநோயை வெல்ல முடியாமல் போய்விட்டது.

மக்களுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த அற்புதமான மாமனிதருக்கு அடக்குமுறைக்கு எதிராக போராடும் அத்தனை மனிதர்களும் வீரவணக்கத்தை செலுத்துகிறார்கள். கனேடிய அரசும் இவரின் மரணச் சடங்கை அரச மரியாதையுடன் செய்தது என்பதை வைத்துப் பார்க்கும் போது இவரின் பணியினை ஸ்டீபன் ஹார்பர் தலைமயிலான பழமை தழுவும் கட்சி கூட எதிர்க்கட்சி தலைவரை உன்னதமான இடத்திலேயே வைத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பாராளுமன்றத்திற்குள் இரு தினங்கள் ஜாக்கின் பூதவுடல் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் டொரோண்டோ நகரிலும் வைக்கப்பட்டு கடந்த சனிக்கிழமையன்று அவரது பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. பல்லாயிரம் மக்கள் தமது உன்னத தலைவனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்கள். ஜாக் மறைந்தாலும் அவரது கடந்த கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளை ஒருவரும் மறக்க மாட்டார்கள். இவரது பணிகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு வரலாற்றில் நிரந்தர இடம் பெறுவார் என்பதில் கடுகளவேனும் சந்தேகமில்லை. பிற இனத்தவர்களுடன் சேர்ந்து கனேடியத் தமிழர்களும் மறைந்த தலைவருக்கு மரியாதையைச் செலுத்தினர். கடந்த வெள்ளிக்கிழமையன்று நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நூற்றுக்கணக்கில் தமிழர்கள் திரண்டு தமது கண்ணீர் அஞ்சலிகளை செலுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கனேடியத் தமிழர்களின் உற்ற நண்பன்.

சிங்கள ஆட்சியாளர்களினால் ஏவப்பட்ட இனவழிப்பு போரின்போது பல சொல்லொனாத்துயரை அனுபவித்தார்கள் ஈழத்தமிழர்கள். விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறிவிட்டு அரச பயங்கரவாதத்திற்கு உறுதுணையாக நின்றார்கள் பல நாடுகள். தமிழ் மக்கள் பலியாகும் பொழுது, சிங்கள அரசு தான் ஏதோ புலிகளைத்தான் கொலை செய்வதாக பிரச்சாம் செய்து வந்தது. இதை நம்பியது ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான பழமை தழுவும் கட்சி. தமிழர்களுக்கு எதிராக நஞ்சையே கக்கியது இக்கட்சி.

தமிழர்களுக்கு ஆதரவாக பேசினால் பயங்கரவாதச் சட்டத்தின் மூலமாக கைது செய்து விடுவார்களோ அல்லது தமக்கிருக்கும் அரசியல் செல்வாக்கு மழுங்கடித்து விடுமோ என்று பல கனேடிய வேற்றினத்தினர் தயங்கி ஒதுங்கினார்கள். இப்படியான ஒரு சூழ்நிலையில்தான் தமிழர்களுக்கு அரணாக இருக்க முன்வந்தார் ஜாக் லேய்டன். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜாக் லேய்டனும் அவரது புதிய ஜனநாயகக் கட்சியும் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிய வேண்டி கனேடியப் பாராளுமன்றத்தில் ஒரு அவரச விவாதப் பிரேரணயை கொண்டுவந்து ஈழத்தமிழர்களின் அவலத்தை பிற பாராளுமன்ற உறுப்பினர்களும் அறிய வழி வகுத்தார்.

வன்கூவர் நகரில் நடந்த புதிய ஜனநாயகக் கட்சியின் கொள்கை மகாநாட்டில் சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு நடந்துகொண்டிருக்கும் துர்ச்செயல்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாரபட்சமற்ற விசாரணைக் குழுவை நியமிக்கவேண்டுமெனவும் தீர்மானம் எடுத்தனர். ஈழத்தமிழர்கள் இன்னற்பட்ட பொழுதுகளிலெல்லாம் நேர காலம் பாராது உழைத்ததுடன் தனது அரசியல் வாழ்வின் எதிர்காலம் பற்றிய விடயங்களைக் கருத்திலெடுக்காது மக்களின் குரலாகச் செயற்பட்டவர் ஜாக் லேய்டன் என்றால் மிகையாகாது.

கனேடியத் தமிழர்களின் சகல அமைப்புக்களுடன் உளமார்ந்த முறையில் உறவாடி அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு தன்னால் இயன்ற வழிகளிலெல்லாம் உழைத்த ஒரு தலைமைத்துவப் பண்பாளரான ஜாக் அவர்கள் தமிழர்களுடன் இருபது வருடங்களிற்கு மேலான நேரடித் தொடர்பைப் பேணியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாக் லேய்டன் அவர்களின் வழிகாட்டுதல், உதவி, மற்றும் உற்சாகப்படுத்தலில்தான் ராதிகா சிற்சபைஈசன் என்ற முதற் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரை கனேடியத் தமிழர்களிற்கு தந்தது என்பதனை யாரும் ஒருபோதும் மறந்துவிடப் போவதில்லை.

மக்களுக்காக வாழ்பவர்கள் மரணிப்பதில்லை என்பதற்கிணங்க உயரிய சிந்தனைகளைக் கொண்ட ஜாக் லேய்டன் அவர்களின் மறைவும் வரலாற்றில் மரணிக்கப் போவதில்லை. ஜாக் லேய்டன் கூறிய கூரிய வசனம் அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. அவர் கூறியதாவது, 'எனது நண்பர்களே! கோபத்தைவிட அன்பு மேன்மையானது. பயத்தைவிட நம்பிக்கை மேன்மையானது. விரக்தியைவிட நன்னம்பிக்கை மேன்மையானது. எனவே அன்புடனும் நன்னம்பிக்கையுடனும் வாழ்ந்து இவ்வுலகில் ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்.'

ஜாக் லேய்டன் அவர்களுடைய இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக இருந்தாலும், அவருடைய உயர்ந்த சிந்தனைகளை உள்வாங்கி அவருடைய கோட்பாடுகளுக்கு புத்துயிர் கொடுப்பதுவே அவருக்கு நாம் செலுத்தும் கண்ணீர் அஞ்சலியாக இருக்க முடியும். இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அனலை நிதிஸ் ச.குமாரன்

nithiskumaaran@yahoo.com

http://naamnanbargal.blogspot.com




  • http://naamnanbargal.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger