தமிழ் ஒருங்கமைப்புக்குழு (Tamil Solidarity) குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்து, மாலை 3:30 மணி முதல் 7:00 மணிவரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தூக்குத் தண்டனை பெற்றுள்ள கைதிகளில் ஒருவரான முருகனின் சகோதரி, சகோதரன் உட்பட்ட குழுவினர் தூதரகத்திற்குள் சென்று தூக்குத் தண்டனையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவைக் கையளித்தனர்.
இந்த மனுவைப் பெற்றுக்கொண்ட தூதரக அதிகாரி, இவ்வாறு மனு கையளிக்க வரும்போது, மனுதாரரை வரவேற்று அந்த மனுவைப் பெற்றுக்கொள்ளுமாறு இந்திய அரசாங்க மேல்மட்டத்தில் இருந்து தமக்கு முன்னரே அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும், குறித்த மனுவை இந்திய அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்போம் எனவும் தூதரக அதிகாரி கூறினார்.
மனுக் கையளிப்பைத் தொடர்ந்து மூன்று உறவுகளின் விடுதலைக்காக தனது உயிரை ஈகம் செய்த தியாகச்சுடர் செங்கொடி அவர்களுக்கான அக வணக்கமும், மலர் வணக்கமும் இடம்பெற்றது.
இதனையடுத்து முருகனின் சகோதரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் செயலாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தூக்குத் தண்டனைக் கைதிகளுடன் சிறையில் இருந்த குணா உட்பட பலர் உரையாற்றினர்.
ஏற்கனவே பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் அடங்கிய மனு இந்தியத் தூதரகத்திடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்களிடமும் மனுவுக்கான கையொப்பங்கள் பெற்றப்பட்டதுடன், மக்கள் தொடர்ச்சியாக மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மூன்று மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஆர்ப்பாடத்தில் கலந்துகொண்டவர்கள் தூக்குத் தண்டனைக்கு எதிராகவும், இந்திய அரசாங்கும் தூக்குத் தண்டனையை முற்றாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது படங்கள் அடங்கிய பதாகைகளுடன், ஈகச்சுடர் வீரமங்கை செங்கொடி அவர்களின் திருவுருவப் படத்தையும் தாங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது.
தூக்குத் தண்டனை, மரண தண்டனைக்கு எதிரான வேற்றின மக்களும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த அதேவேளை, வீதியால் சென்ற வேற்றின மக்கள் பலர் இந்தத் போராட்டம் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டதுடன், அவர்கள் மத்தியில் துண்டுப் பிரசுரங்களும் வழங்கல் செய்யப்பட்டன.





http://naamnanbargal.blogspot.com
http://naamnanbargal.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?