இங்கு ஒரு சிறு முன்னுரை தேவைப்படுகிறது.
கம்பராமாயணப் பட்டி மன்றங்களில்,"சிறந்தவன் இராமனா,பரதனா" என்றோ,"வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் செய்தது சரியா" என்றோ வாதிடுவார்கள்.அவர்கள் வாதத்தில் முன்னிறுத்தப்படும் இராமன் ஒரு இலக்கியப் பாத்திரம் மட்டுமே.இந்துக்களின் கடவுள் என்ற நிலையிலிருந்து வேறு பட்ட ஒரு பார்வையே அது.அவர்கள் நோக்கம் இழிவு படுத்துவதல்ல.ஒரு இலக்கியப் பார்வை மட்டுமே.
அது போலத்தான் இதுவும்.
ஸ்ரீ ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ராம தத்துல்யம் ராமநாம வரானனே---(விஷ்ணு ஸஹஸ்ரநாமம்)
ஸ்ரீ ராம ராம என்று மனத்துக்கு இனியவனான ராமனிடத்தில் நான் ரமிக்கின்றேன்.அந்த ராம நாமம் ஸஹஸ்ரநாமத்துக்குச் ச்மம்.
....................
பல ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.
என் நண்பன் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
பேச்சு இராமாயணத்தைப் பற்றிக் குறிப்பாகக் கம்ப ராமாயணத்தை பற்றியது.
ராமனின் பெருமைகளைப் பற்றி நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.
கம்ப ராமாயணத்தில் வரும் ஒரு பாடலைப் பற்றிச் சொன்னேன்
"குகனோடும் ஐவர் ஆனோம் முன்பு; பின் குன்று சூழ்வான்
மகனொடும் அறுவர் ஆனோம்; எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய நின்னொடும் எழுவர் ஆனோம்
புகல் அரும் கானம்தந்து புதல்வரால் பொலிந்தான் நுந்தை''."
வேடனான குகனையும்,வானரமான சுக்கிரீவனையும்,அரக்கனான வீடணனையும்
தன் உடன் பிறப்புகளாக ஏற்றுக் கொண்ட அரசனான ராமனின் பெருந்தன்மை பற்றி,சமத்துவ மனப்பான்மை பற்றி உயர்வாக நான் சொல்லிக் கொண்டிருந்தேன். அரசர் குலத்தோன்றலாக இருந்தும்,தன்னை விடக் கீழான வேடனை, வானரனை, அரக்கனைத் தன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதன் மூலம் மனித வாழ்வில் உயர்வு தாழ்வில்லை என்பதை உணர்த்தியவன் ராமன் என்பதே என் கூற்று.
நண்பன் சிரித்தான்.
நான் கேட்டேன்"ஏன் சிரிக்கிறாய்.?"
அவன்கேட்டான்"குகன் யார்?"
"ஒரு வேடன்" நான்
"வேடர் கூட்டத்தைச் சேர்ந்த சாதாரண வேடனா?"
"இல்லை வேடர்களின் தலைவன்"
"அதாவது வேடர் குல அரசன்.சரி.சுக்கிரீவன் யார்?"
"ஒரு வானரம்"
"சாதாரண வானரமா?"
"இல்லை.வானரங்களின் அரசன்"
"சரி வீடணன் வெறும் சாதாரண அரக்கனா?"
"இல்லை. அரக்கர் வேந்தன் ராவணனின் தம்பி"
"அடுத்து அரசனாகப் போகிறவன்,அல்லவா?"
"ஆம்"
"ஆக,ராமன் உடன் பிறப்பாக ஏற்றுக் கொண்டதெல்லாம், அரசர்களைத்தான். சாதாரணமானவர்களை அல்ல. சொல்லின் செல்வன் எனப் பாராட்டிய அனுமனையும் ஒரு தொண்டனாகத்தான் ஏற்றுக் கொண்டான்.உடன் பிறப்பாக அல்ல.இதில் எங்கிருந்து வந்தது சமத்துவம்?"
எனக்குப் பதில் சொல்லத்தெரியவில்லை.
உங்களுக்குத் தெரியுமா?
நண்பனின் கருத்து சரியா,தவறா?
விவாத மேடை திறந்திருக்கிறது—கண்ணியமான.ஆரோக்கியமான விவாதத்துக்காக!
ராமாயணத்தை கரைத்துக் குடித்தவர்களும்,கம்பனில் ஊறித்திளைத்தவர்களும், மற்ற அனைவரும் வாருங்கள்.வெட்டியும் ஒட்டியும் கருத்துச் சொல்லுங்கள்!
வாங்கய்யா!உங்க கருத்தைச் சொல்லுங்க,இதோ வாராறு நம்ம முனைவரு,வாங்க.வந்து கலக்குங்க!
தமிழ் மணம் குறிப்பிட்டுள்ள அணுகு முறைகளில் ஒன்று--//மற்ற வலைப்பதிவர்கள் விவாதிக்க ஒரு மேடை அமைத்துக்கொடுக்கவும் முயலலாம்.//
இதோ மேடை!
http://tamil-friend.blogspot.com
http://tamil-friend.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?