Thursday, 22 September 2011

தேமுதிக எங்கே?; கண்ணை கட்டிவிட்ட நிலையில் விஜய்காந்த்!

 
 
 
 
 
 
தங்களிடம் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்து ஒரு பக்கம் பேசிக் கொண்டே, இன்னொரு பக்கம் அந்தப் பதவிகளுக்கான வேட்பாளர்களை அதிமுக தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டிருந்தாலும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து அதிமுகவுடன் பேச்சு நடத்தி வருகின்றன.
 
நேற்று இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 3வது கட்டமாக அதிமுக தரப்புடன் பேச்சு நடத்தின. ஆனால், சட்டசபை தேர்தல் பிரச்சாரத்துக்குப் பின் தமிழக பிரச்சனைகள் குறித்து அதிகமாக பேசுவதையே தவிர்த்து வரும்தேமுதிக தலைவர் விஜய்காந்த், இதுவரை அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.
 
கடந்த 16ம் தேதி காலையில் அதிமுக 10 மாநகராட்சிகளிலும் போட்டியிடும் மேயர் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு மாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சு வார்த்தையை நடத்தியது.
 
போயஸ் கார்டனில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் டி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினர்.
 
இதைத் தொடர்ந்து மேலும் பல உள்ளாட்சிப் பதவிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துக் கொண்டே இந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் அதிமுக இரண்டாவது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது.
 
இதனால் ''எங்களுக்கு எந்த இடங்கள் கிடைக்கப் போகின்றன என்பதே தெரியாமல் பேச்சுவார்த்தை நடத்துவது கஷ்டம் அம்மா'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மட்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனுக்கு அப்படி எந்தக் கவலையும் இல்லையோ என்னவோ, அதிமுகவின் தவறை சுட்டிக் காட்டாமல் அமைதியாக இருந்து தனது அதிமுக அபிமானத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.
 
இந் நியைலி நேற்றிரவு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் 3வது கட்ட பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தியது. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ, தங்கவேல் எம்.எல்.ஏ, மாநில செயற்குழு உறுப்பினர் சம்பத் ஆகியோர் அதிமுக குழுவினருடன் 2 மணி நேரம் பேசிவி்ட்டு வந்தனர்.
 
ரொம்ப திருப்தியாக இருந்தது-சிபிஎம்:
 
பேச்சு முடிந்து வெளியே வந்த கே.பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில், பேச்சுவார்த்தை திருப்திகரமாகவும், சுமுகமாகவும் இருந்தது. நாங்கள் போட்டியிட விரும்பும் மாநகராட்சிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி இடங்களையும் பட்டியலாக கொடுத்து இருக்கிறோம். பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 
பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருப்பதால் கால தாமதம் ஆகி வருகிறது. வியாழக்கிழமை சுமுகமான முடிவு ஏற்படும் என்று நம்புகிறோம் என்றார்.
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பழனிச்சாமி, சிவபுண்ணியம் மற்றும் ஸ்டாலின் குணசேகரன்
ஆகியோர் அதிமுக குழுவுடன் பேசிவிட்டுச் சென்றனர்.
 
தேமுதிக எங்கே?:
 
ஆனால், அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான விஜய்காந்தின் தேமுதிக இதுவரை அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு குறித்து எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இதனால் அந்தக் கட்சி அதிமுக கூட்டணியில் தான் உள்ளதா என்பது அந்தக் கட்சியினருக்கே குழப்பமாக உள்ளது.
 
தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வராததைக் கூட பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தனது இஷ்டத்துக்கு வேட்பாளர்களை அறிவித்து வரும் முதல்வர் ஜெயலலிதாவிடம், தாங்கள் கேட்கும் இடங்கள் கிடைக்குமா என்ற பெரும் குழப்பத்தில் விஜய்காந்த் இருப்பதாகத் தெரிகிறது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger