Thursday, 22 September 2011

உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு '; 2 கட்டமாக நடக்கிறது

 
 
 
 
 
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவும், 19ம் தேதி 2வது கட்ட வாக்குப் பதிவும் நடைபெறவுள்ளது.
 
திருச்சி தவிர மற்ற 9 மாநகராட்சிகளுக்கும் அக்டோபர் 17ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். திருச்சிக்குப் பின்னர் தேர்தல் நடத்தப்படும்.
 
தேர்தல் தேதி குறித்து சமீப நாட்களாக பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தேர்தல் விரைவில் வரப் போகிறது என்பதை அறிவிக்கும் விதமாக அதிமுக தரப்பிலிருந்து அலை அலையாக வேட்பாளர் பட்டியல் வெளியாகிக் கொண்டிருந்தது.
 
இருப்பினும் திருச்சி மாநகராட்சியுடன், திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருந்தது. நேற்று முற்பகலில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து மாலையில் தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர்.
 
இதுகுறித்து அவர் கூறுகையில்,
 
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி மற்றும் 19-ந் தேதி ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22-ந் தேதி தொடங்குகிறது.
 
வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 29-ந் தேதி.
 
வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை மறுநாள் 30-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 3-ந் தேதி கடைசி நாள்.
 
முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 17-ந் தேதியும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு 19-ந் தேதியும் நடைபெறும்.
 
திருச்சிக்கு இப்போது தேர்தல் இல்லை
 
சென்னை, மதுரை, கோவை, நெல்லை, சேலம், தூத்துக்குடி, வேலூர், ஈரோடு, திருப்பூர் ஆகிய 9 மாநகராட்சிகளுக்கும் முதல் கட்ட தேர்தல் நடக்கும் 17-ந் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும்.
 
திருச்சி மாநகராட்சிக்கு இப்போது தேர்தல் நடைபெறாது. அதற்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
 
21ம் தேதி வாக்கு எண்ணிக்கை
 
2 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
 
தேர்ந்து எடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் 25-ந் தேதி நடைபெறும். தேர்தலில் நேரடியாக தேர்ந்து எடுக்கப்பட்ட மேயர்கள், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் அன்றைய தினம் பதவி ஏற்றுக் கொள்வார்கள்.
 
மறைமுகமாக தேர்ந்து எடுக்கப்படும் அதாவது உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்து எடுக்கப்படும் ஊராட்சி ஒன்றிய தலைவர், மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாநகராட்சி துணை மேயர், நகராட்சி துணைத் தலைவர் போன்றோர் 29-ந் தேதி பதவி ஏற்றுக்கொள்வார்கள்.
 
நகர்ப் பகுதிகளில் வாக்குப் பதிவு இயந்திரம்
 
முதல் முறையாக இந்த உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற பகுதிகளில் வாக்குப்பதிவுக்கு மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருக்கும். அதாவது மேயர் அல்லது தலைவர் பதவி வாக்குப்பதவிக்காக ஒரு எந்திரமும், வார்டு உறுப்பினர் பதவி வாக்குப்பதிவுக்காக மற்றொரு எந்திரமும் வைக்கப்பட்டு இருக்கும்.
 
மேலும் இந்த உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக ஆன்லைன் மூலம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
 
புகைப்படத்துடன் கூடிய பூத் சிலிப்பை அரசு ஊழியர்கள் வீடு வீடாக சென்று வழங்குவார்கள். பூத் சிலிப்பை பெற்றுக்கொண்டதை உறுதி செய்யும் வகையில் கையெழுத்தும் பெறுவார்கள். வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று அந்த பூத் சிலிப்பைக் காட்டி வாக்களிக்க வேண்டும்.
 
அரசு ஊழியர்கள் பூத் சிலிப் வழங்குவதற்காக வரும் போது சிலர் வீட்டில் இருக்கமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் வாக்குச்சாவடியின் முன் இருக்கும் அரசு பணியாளரிடம் இருந்து `பூத் சிலிப்'பை பெற்றுக்கொண்டு வாக்கு அளிக்கலாம்.
 
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தேர்தல் பார்வையாளராக பணியாற்றுவார். மேலும், மாவட்ட கலெக்டர்கள் அவர்களுக்கு உதவி செய்வதற்காக துணை கலெக்டர் அந்தஸ்தில் துணை பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு வீடியோ மூலம் பதிவு செய்யப்படும்.
 
சட்டசபை தேர்தலுக்கான அனைத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் உள்ளாட்சி தேர்தலுக்கும் பொருந்தும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன என்றார் சோ. அய்யர்.
 
எத்தனை இடங்களுக்குத் தேர்தல்?
 
1,18,983 ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கும், 13,418 நகர்ப்புற உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கும், தேர்தல் நடைபெறவுள்ளது.
 
655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 6471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 12,524 சிற்றூராட்சி தலைவர் பதவியிடங்கள் , 99,333 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள், 9 மாநகராட்சி மேயர்கள், 755 மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், 125 நகராட்சித் தலைவர்கள், 3697 நகராட்சி உறுப்பினர்கள், 529 பேரூராட்சித் தலைவர்கள், 8303 வார்டு உறுப்பினர்கள் பதவியிடங்களுக்குத் தேர்தல் நடைபெறுகிறது.
 
முதல் கட்டமாக அக்டோபர் 17ம் தேதி 9 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடைபெறும்.
 
2வது கட்டமாக அக்டோபர் 19ம் தேதி, 65 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்குத் தேர்தல் நடைபெறும்.
 
86,104 வாக்குச் சாவடிகள்
 
உள்ளாட்சித் தேர்தலையொட்டி 86,104 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். இதில்நகர்ப்பகுதிகளில் 25,590 வாக்குச் சாவடிகளு்ம், ஊரகப் பகுதிகளில் 60,518 சாவடிகளும் அமைக்கப்படும். சென்னையில் மட்டும் 4876 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
 
இத்தேர்தலில் 4,63,37,379 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி படைத்தவர்கள் ஆவர். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2,32,98,838 பேர் ஆவர். பெண்களின் எண்ணிக்கை 2,30,37,930 பேர் ஆவர். திருநங்கைகள் 611 பேர் உள்ளனர்.
 
இலவசத் திட்டங்கள் நிறுத்தி வைப்பு
 
உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழக அரசின் இலவசத் திட்டங்களான மிக்சி கிரைண்டர், ஆடு மாடு, மின்விசிறி, லேப்டாப் உள்ளிட்டவற்றை வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்படும்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger