Thursday, 22 September 2011

உள்ளாட்சித் தேர்தல்: தேமுதிக -காங்கிரஸ் திடீர் ரகசியப் பேச்சு

 
 
 
 
 
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவால் கிட்டத்தட்ட கழற்றி விடப்பட்டு விட்ட தேமுதிகவுக்கும், திமுகவால் கழற்றி விடப்பட்டு விட்ட காங்கிரஸுக்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தேமுதிக கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அதிமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அதிமுக தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தேமுதிகவுக்கு ஷாக் கொடுத்தது.
 
பின்னர் சமரசப் பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அதிமுக ஆட்சியைப் பிடித்தது. தேமுதிகவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து, இன்று எதிர்க்கட்சியாகியுள்ளது.
 
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் இடப் பங்கீட்டுக்காக கூட்டணிக் கட்சிகள் காத்திருந்த நேரத்தில் அத்தனை இடங்களுக்கும் அதிரடியாக தனது வேட்பாளர்களை அறிவித்து கதவை மூடி விட்டார் ஜெயலலிதா. இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சியில் மூழ்கியது. தேர்தல் தேதி அறிவித்து, வேட்பு மனு தாக்கலும் தொடங்கி விட்டதால் என்ன செய்வது, எங்கு போவது, எப்படிப் போவது என்பது தெரியாமல் தேமுதிகவினர் குழப்பத்தில் உள்ளனர்.
 
தற்போது இடதுசாரிகளை மட்டும் அழைத்து அதிமுக பேசி வருகிறது. அதிலும் உடன்பாடு ஏற்பட்டதாக தெரியவில்லை.
 
இந்த நிலையில் தேமுதிக தரப்பிலிருந்து, காங்கிரஸ் தரப்புடன் ரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. காங்கிரஸும் திமுக கூட்டணியில் இருந்து வந்தது. ஆனால் திமுக திடீரென தனியாகப் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டதால் காங்கிரஸ் குழம்பிப் போய் நிற்கிறது. இரு கட்சிகள் சார்பிலும் யார் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இப்படி திமுக, அதிமுகவால் திராட்டில் விடப்பட்ட காங்கிரஸும், தேமுதிகவும் திடீரென பேசத் தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுக்கள் கனிந்து, புதுக் கூட்டணி உருவாகுமா, அதில் இடதுசாரிகள் இணையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger