திமுகவிலிருந்து விலகுவதாக நடிகர் தியாகு அறிவித்துள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில், ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்து வந்திருக்கிறேன். ஆனால் கட்சியில் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவே இல்லை. இதனால் மனவருத்தம் அடைந்துள்ளேன்.
எனக்கு பின்னால் வந்தவர்கள் எல்லாம் பதவி பெற்றுள்ளனர். கட்சியில் இல்லாதவர்கள் கூட திமுக தலைவரை துதி பாடியே பல்வேறு பதவிகளையும், வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ளனர். ஆனால் 33 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தும் எனக்கு எந்த அங்கீகாரமும் கட்சியில் கிடைக்கவில்லை.
என்னுடைய தாத்தா ராஜமாணிக்கம் பிள்ளை மிகச் சிறந்த வயலின் வித்வான். மூப்பனார் போன்ற தலைவர்கள் இந்த குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள். என் தாத்தா நினைவாக தபால் தலை வெளியிடுவதாக கூறினீர்கள். அதற்கான ஏற்பாடு எதுவும் செய்யவில்லை. நானும் உங்களிடம் (திமுகவிடம்) அது பற்றி கேட்கவில்லை.
இதிலிருந்து நீங்கள் என்னை எந்த இடத்தில் வைத்துள்ளீர்கள் என்பது புரிந்து விட்டது. இதுவரை கட்சியில் இருந்தது தவறு என்று புரிந்து கொண்டுள்ளேன். எனவே கடந்த 19ம் தேதி முதல் கட்சியிலிருந்து விலகி கொண்டுள்ளேன். எனது விலகல் கடிதத்தை கட்சியின் தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்பேன்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். தேர்தல் வாக்குறுதிகளாக சொன்னவற்றையெல்லாம் நிறைவேற்றி வருகிறார் என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?