2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் நிதியமைச்சகம் குற்றம் சாட்டியதையடுத்து நேற்று முன் தினமே தனது பதவியை ராஜினாமா செய்ய சிதம்பரம் முன் வந்தார். ஆனால், அவரை பிரதமர் மன்மோகன் சிங் தடுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் துணை இயக்குனர் பி.ஜி.எஸ். ராவ், பிரதமர் அலுவலகத்தின் இணை இயக்குனர் வினி மகாஜனுக்கு கடந்த மார்ச் மாதம் இந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்குப் பிறகே இந்தக் கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்தை ஆர்டிஐ சட்டப்படி பெற்று, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தவுடன், அமெரிக்காவுக்குச் சென்று கொண்டிருந்த பிரதமரை சிதம்பரம் தொடர்பு கொண்டு, தனது நேர்மை சந்தேகிக்கப்படுவதால் பதவி விலக விரும்புவதாகக் கூறினார்.
அப்போது பிராங்பர்ட்டில் இருந்த பிரதமர், இந்த விவகாரத்தில் நான் நாடு திரும்பும் வரை அமைதி காத்திடுங்கள். எந்த அவசர முடிவும் எடுக்க வேண்டாம். உங்களது நேர்மையை நான் உள்பட யாரும் சந்தேகிக்க முடியாது என்று கூறியதோடு, இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும் பேசுவதாக உறுதியளித்தார்.
மேலும் நான் டெல்லிக்குத் திரும்பும்வரை இது தொடர்பாக உங்களது கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதனால் தான் இதுவரை சிதம்பரம் இது குறித்து எந்த விளக்கமும் தர மறுத்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் சிதம்பரத்தின் பெயரைக் கெடுக்க நடந்துள்ள இந்த முயற்சிக்கு காங்கிரஸ் பணியக் கூடாது என்று சோனியா காந்தியும் கூறிவிட்டதாகத் தெரிகிறது. இதனால் சிதம்பரத்துக்குப் பின்னால் அந்தக் கட்சி அணி திரண்டு வருகிறது.
இது குறித்து தன்னுடன் விமானத்தில் அமெரிக்கா பயணித்த நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 2ஜி விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து விரிவாக பேச முடியாது. ஆனால், ப.சிதம்பரத்தின் நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாது. அவர் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அவருக்கு எனது முழு ஆதரவும் உண்டு.
இந்தக் கடிதத்தை வைத்துக் கொண்டு மத்திய அமைச்சர்களிடையே மோதல் நடப்பதாக நீங்களாக யூகித்துக் கொள்வதும் தவறு என்றார்.
சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அரசுத் துறைகளின் நடைமுறைகளை திசை திருப்பி ஊழல் போல காட்ட எதிர்க் கட்சிகள் காட்ட முயல்வது அபாயகரமானது என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், பல்வேறு அரசியலமைப்பு அமைப்புகளுக்கிடையே பிளவை உண்டாக்கும் மோசமான முயற்சி நடந்து வருவது நல்லதல்ல என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?