Thursday, 22 September 2011

2ஜி ஊழலில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு?: பிரதமருக்கு பிரணாப் அனுப்பிய `பகீர்' கடிதம்

 
 
 
 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை விவகாரத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுவதைத் தடுக்க அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று நிதியமைச்சகம் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளது.
 
இது தொடர்பாக நிதியமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இப்போதைய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுடன் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதன்மூலம் பிரணாப் முகர்ஜி- ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதல் வெளியே தெரியவந்துள்ளது.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 2007ம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த இப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தக் கோரி ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனு மீது நீதிபதிகள் சிங்வி, கங்குலி ஆகியோர் முன்னிலையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிதம்பரத்துக்கு எதிரான ஒரு கடிதத்தை சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்தார்.
 
இந்தக் கடிதம் கடந்த மார்ச் 25ம் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டதாகும். நிதியமைச்சகத்தின் Economic Affairs பிரிவின் துணை இயக்குனர் பதவியில் இருக்கும் ஒரு மூத்த அதிகாரி எழுதிய அந்தக் கடிதம் பிரணாப் முகரிஜியின் முழு ஒப்புதலுடன் பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
 
அந்த 14 பக்க கடிதத்தில், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் மூலம் விற்பனை செய்ய நிதியமைச்சக அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஆனால், அதை நிராகரித்து விட்டு 2001ம் ஆண்டு விலையிலேயே, முதலில் வந்தவர்களுக்கு முதலில் என்ற முறையில், 2007ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரத்தை விற்க அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா எடுத்த முடிவுக்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்துள்ளார்.
 
ராசாவைத் தடுத்து, ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் மட்டுமே விற்க வேண்டும் என்று சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால் ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.
 
ஆனால், அவரைத் தடுக்காததால் செல்போன் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ரூ. 1,600 கோடிக்கு மட்டுமே விற்கப்பட்டது. 2007ம் ஆண்டில் விற்பனைக்கான அனுமதி தரப்பட்டாலும், ஸ்பெக்ட்ரத்தை விற்றது 2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான்.
 
இந்த இடைப்பட்ட காலத்தில், சிதம்பரம் நினைத்திருந்தால், இந்த விற்பனையை ரத்து செய்திருக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்தக் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்ததன் மூலம், அதில் இடம் பெற்றுள்ள கருத்துக்களை பிரணாப் முகர்ஜி முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதும் தெளிவாகிறது.
 
இதன்மூலம் மத்திய அரசுக்குள் மூத்த அமைச்சர்களான பிரணாப் முகர்ஜி-ப.சிதம்பரம் இடையே நடந்து வரும் மோதலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 
நிதியமைச்சகம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பிய இந்தக் கடிதத்தை தகவல் அறியும் மூலம் விவேக் கார்க் என்பவர் பெற்றுள்ளார். அதை உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்துள்ளார். இந்த முக்கியமான கடிதத்தை உச்ச நீதிமன்றமும் ஏற்று பதிவு செய்து கொண்டுள்ளது.
 
இந்த கடிதம் குறித்து விவேக் கார்க் கூறுகையில், நிதியமைச்சகம் மற்றும் இதர அமைச்சகங்களின் தொடர்பு இல்லாமல் இவ்வளவு பெரிய ஊழல் நடந்திருக்க சாத்தியமில்லை. சிதம்பரத்துக்கும் வேறு சிலருக்கும் இந்த ஊழலில் தொடர்புள்ளதை இந்த கடிதம் தெளிவாகக் குறிப்பிடுகிறது என்றார்.
 
கருத்து கூற பிரணாப் மறுப்பு:
 
இந் நிலையில் இந்தக் கடிதம் குறித்து கருத்துக் கூற நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார்.
 
இந்திய- அமெரிக்க முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயார்க் சென்றுள்ள அவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற முடியாது என்றார்.
 
அதே நேரத்தில் ஊழலை ஒழிக்க தகவல் அறியும் சட்டத்தை கொண்டு வந்ததே நான் தான் என்றும் அவர் கூறினார்.
 
சிதம்பரம் பதவி விலக பாஜக கோரிக்கை:
 
இது குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் கூறுகையில், பிரதமருக்கு பிரணாப் முகர்ஜி எழுதிய கடிதம் மூலமாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் தொடர்பு அம்பலமாகி விட்டது. நிதியமைச்சகமும், தொலைத்தொடர்பு அமைச்சகமும் ஸ்பெக்ட்ரம் விலை விவகாரத்தில் உடன்பட்டதால்தான், அதை செயல்படுத்த ஒப்புக்கொண்டதாக ஏற்கனவே பிரதமரும் கூறியுள்ளார்.
 
ஸ்பெக்ட்ரமுக்கு விலையை நிர்ணயிப்பதில் ராசா பின்பற்றிய வழிமுறையை முதல் நாளில் இருந்தே ப.சிதம்பரம் ஆதரித்தார். ஆனால், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளோ, 2001ம் ஆண்டு விலைக்கு ஸ்பெக்ட்ரமை ஒதுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் நிலைப்பாட்டை ப.சிதம்பரம் ஏற்றிருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது.
 
ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது கூட்டணி கட்சியின் ஊழல் என்றும், ராசாவே தனியாக எடுத்த முடிவு என்றும் நாடு நம்ப வேண்டும் என்று ப.சிதம்பரம் விரும்புகிறார். ஆனால், பிரணாப் முகர்ஜியின் கடிதம் மூலம், இந்த ஊழலில் காங்கிரசுக்கும் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றார்.
 
சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல-இந்திய கம்யூனிஸ்ட்:
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலில் ப.சிதம்பரத்தின் நிலைப்பாடு ஏற்கத்தக்கதல்ல. அவரது தொடர்பு பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும், பிரதமரிடம் ஆலோசனை நடத்தியே அனைத்து முடிவுகளும் எடுத்ததாக ராசா கூறி வருவதால், இதில் பிரதமரும் பதிலளிக்க வேண்டும் என்றார்.
 
சிதம்பரத்துக்கு எதிரான குற்றச்சாட்டு-காங்கிரஸ் நிராகரிப்பு:
 
இந் நிலையில் இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.
 
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், எந்த வகையிலும் சுப்ரமணிய சாமியின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. சிதம்பரத்தின் நேர்மையை யாராலும் சந்தேகிக்க முடியாது. உச்ச நீதிமன்றத்தில் சாமியால் எழுப்பப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. விசாரணை முடிவடைவதற்குக் காத்திருக்காமல் சாமியோ அல்லது வேறு எவருமோ சிதம்பரம் தவறு செய்திருப்பதாக முடிவுக்கு வருவது ஆட்சேபத்துக்குரியது என்றார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger