சொல்பேச்சுக் கேட்காமல் இருட்டுக்குள் இறங்கிவிட்டு சிங்களவர் ஏமாற்றி விட்டார்கள் என்று கூட்டமைப்பு இனியும் கூறக்கூடாது...
தேர்வுக்குழு அமைத்து ஆறு மாதங்களில் தமிழர்களுக்கு தீர்வை தந்துவிடுவோம் என்று பசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார். இந்தத் தடவை கண்டிப்பாக ஏமாற்றமாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.
அறுபது ஆண்டுகளாக ஏமாற்றும் ஓர் இனவாத அரசு ஆறு மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறதென்றால் அந்த ஆறு மாதங்களை அகல்வித்துப் பார்க்க வேண்டியது கூட்டமைப்பின் கடமை.
தற்போது சனல் 4 காணொளி ஏற்படுத்தி வரும் தாக்கம், அமெரிக்கா உட்பட மேலை நாடுகள் கொடுக்கும் அழுத்தம் யாவும் பலம் குன்றி சுரத்து கெட்டுப்போக இந்த ஆறுமாதங்கள் போதும் என்பதை கூட்டமைப்பு கருத்தில் எடுக்க வேண்டும்.
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது தேவையில்லை இப்போது இருக்கும் உரிமைகளே போதுமானது என்று கோத்தபாய கூறியுள்ளார். ஆக பசில் ராஜபக்ஷவுக்கும் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் இடையில் அடிதலையான முரண்பாடுகள் காணப்படுகின்றன.
இன்னொரு புறம் கெகலிய ரம்புக்கவெல அமெரிக்காவின் அழுத்தத்தை நாம் அசட்டை செய்யவில்லை என்று கூறிவருகிறார். அதேவேகத்தில் மகிந்த ராஜபக்ஷ சீனாவின் காலடியில் விழுந்து, சர்வதேச அழுத்தத்தில் இருந்து தம்மை காப்பாற்றும்படி கேட்டுள்ளார். இதில் நான்கு விடயங்கள் உள்ளன :
01. தமிழ் மக்களுக்காக பசில் ராஜபக்ஷ பேசியுள்ளார்.
02. சிங்கள கடும்போக்காளருக்காக கோத்தபாய பேசியுள்ளார்.
03. அமெரிக்க தரப்பை தணிக்கும் முயற்சியில் கெகலிய ரம்புக்கவெல இறங்கியுள்ளார்.
04. சீனாவை துணைக்கிழுத்து தம்மை காப்பாற்ற மகிந்த முயன்றுள்ளார்.
மேற்கண்ட நான்கு விடயங்களில் ஓர் ஒழுங்கு காணப்படவில்லை. சிங்கள அரசு தமிழ் மக்கள் பிரச்சனையை நேர்மையாக அணுகியிருந்தால் அதனுடைய நடவடிக்கைகள் ஒரு நேர் கோட்டில் இருந்திருக்கும். ஆனால் நான்கு தலை நாகம் ஆடுவதுபோல பல தலைகளில் அது ஆடுகிறது. ஏதாவது ஒரு தலை போக வழி கிடைத்தாலே போதும் தப்பி ஓடிவிடலாம் என்பதே அதன் நோக்கமாக இருக்கிறது.
கூட்டமைப்பு இதை ஆழமாகச் சிந்திக்க வேண்டும். வன்னிப்போரை மட்டும் இரண்டு ஆண்டுகள் தாமதித்திருந்தால் சிங்கள இனவாதத்தின் மீது நேட்டோ படைகள் குண்டு வீசும் நிலை உருவாக்கியிருக்கும். இப்போது லிபிய சர்வாதிகாரி மீது விழும் குண்டுகள் இரண்டு ஆண்டுகள் தாமதித்திருந்தால் சிங்கள இராணுவத்தின் மீதும் விழுந்திருக்கும்.
மேலும் ஆறு மாதங்கள் தாமதிக்கவும், அரசின் குழு அமைத்தலுக்கும் உடன்பட்டு கூட்டமைப்பு வளைந்து கொடுக்கத் தயாரானால்..
21 ம் நூற்றாண்டு மாற்றங்களை விரைவாக செய்யும் உலக அரங்கின் பார்வையில் இருந்து ஈழத் தமிழினத்தை வெகு தூரம் கொண்டு சென்ற தவறை கூட்டமைப்பே செய்து முடிக்க நேரலாம்.
தூரப்பார்வையுள்ள, நன்கு கற்ற, சர்வதேச அறிஞர்களை கூட்டமைப்பு தொடர்பு கொண்டு ஆலோசனை செய்ய வேண்டும். அவர்கள் தமிழர்களாகவும், இந்தியர்களாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
சொல்பேச்சுக் கேட்காமல் இருட்டுக்குள் இறங்கிவிட்டு சிங்களவர் ஏமாற்றி விட்டார்கள் மேலை நாடுகளில் உள்ள தமிழர்களே ஊர்வலம் போங்கள் என்று கூட்டமைப்பு கேட்கக்கூடாது.
இந்த வாரம் கூட்டமைப்பின் தெளிவான பதில் வெளிவர வேண்டும்.
ஆளையாள் கட்டிப்பிடித்துக் கொண்டு கூட்டாக இருப்பவர்கள் ஒருவர் முகத்தை மற்றவரே பார்க்க முடியும், தூரப்பார்க்க முடியாது. தூரப்பார்வை இல்லாமல் முன்னைய கூட்டணி விட்ட தவறை இன்றைய கூட்டமைப்பும் விடக்கூடாது.
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிக்காலத்தில் டெல்லியில் உலாவிய குரங்கு மனிதன், தமிழகத்தில் உலாவிய வண்டலூர் செக்ஸ் புலி போன்றவற்றை யார் ஏவினார்கள் ஏன் ஏவினார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். சிறீலங்கா கிறீஸ் மனிதன் கதை சனல் 4 ஐ மூடி மறைக்கவந்த இன்னொரு வண்டலுர் செக்ஸ் புலியா என்றும் ஏன் எண்ணக்கூடாது..
கூட்டமைப்பு தனது எண்ணங்களை மேலும் அகல்விக்க வேண்டும்.
இளவாலை க.புவனசுந்தரம் 12.08.2011
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?