"உச்சிதனை முகர்ந்தால்" – இந்தமாதம் (நவம்பர்) 25ம் தேதி வெளியாகிறது. தமிழ்த் திரையுலகின் பெருமைக்குரிய முன்னணி நிறுவனமான ஜெமினி நிறுவனம் உலகெங்கும் வெளியிடுகிறது என்கிற மகிழ்ச்சியையும், மாவீரர்களின் நினைவை உலகே போற்றுகிற வாரத்தில் வெளியாகிறது என்கிற நெகிழ்ச்சியையும் இந்த நேரத்தில் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
உச்சிதனை முகர்ந்தால்… தீபாவளி தினத்தன்றே வெளியாகி இருக்கவேண்டும். தணிக்கைவாரியம் அனுமதித்தபிறகும், கிளியைக் கூண்டுக்குள் காட்டியிருப்பதாய்க் குற்றஞ்சாட்டி தணிக்கைச் சான்றிதழைப் பெற தடையாயிருந்தது பாரத பிராணிகள் நல வாரியம். இங்கிருந்து 26வது மைலில் ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொந்தங்கள் விலங்குகள்போல் முள்வேலிகளுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பது பற்றிய கவலையே இல்லாமல் ராட்சசன் ராஜபட்சேவுக்கு நாக்கு வழிக்கும் இந்தியாவுக்கு, கூண்டுக் கிளிகளைப் பற்றி எவ்வளவு அக்கறை பாருங்கள்!
வெளியீட்டுத் தேதி முடிவாகிவிட்ட இந்த நிலையில் நம்முடைய பொறுப்பும் கடமையும் கூடுதலாகியிருக்கிறது ஏகலைவன். உச்சிதனை முகர்ந்தால் – ஒரு அழுத்தமான படைப்பு. இப்படியொரு திரைப்படத்தை வெளியிடும் தகுதியும் நேர்மையும் திறனும் கொண்ட பொருத்தமான நிறுவனம், ஜெமினி நிறுவனம். இந்த வாய்ப்பை முழுமையாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் நாம் மேற்கொண்டாக வேண்டும்.
சென்னை ஆல்பட் திரையரங்கில் சென்ற வாரம் நடந்த "உச்சிதனை முகர்ந்தால்" சிறப்புக்காட்சியை உங்களைப் போலவே என்னாலும் மறக்கமுடியவில்லை ஏகலைவன். இந்தப் படம் மக்களிடம் எந்தமாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைத்தானே, அந்தக் காட்சி முடிந்ததும் கண்ணெதிரில் காண முடிந்தது! கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், புனிதவதியாக நடித்திருக்கும் சிறுமி நீநிகாவைக் கட்டிப்பிடித்து அழுத நூற்றுக்கணக்கான சகோதரிகளின் கண்ணீர்த் துளியிலும், தெரிந்தது மனிதநேயமன்றி வேறென்ன? படம்பார்க்கும் ஒவ்வொருவரும் மட்டக்களப்பு தேவதை புனிதவதியைத் தங்கள் குழந்தையாகவே பாவிப்பார்கள் என்பதைத்தான் அந்தக் கண்ணீர் நமக்கு உணர்த்தியது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாளில் நீங்களும் நானும் பேசிக்கொண்டது இப்போதும் என் நினைவில் இருக்கிறது ஏகலைவன். பொழுதுபோக்குவது அல்ல… அழுது தீர்ப்பது தான் இந்தப் படத்தின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று நாம் பேசிக்கொண்டோம். அந்த நோக்கம் நிறைவேறியிருப்பதைத்தான், ஆல்பட் திரையரங்க சிறப்புக்காட்சி நிரூபித்தது.
அழுவதற்காக யாராவது திரையரங்குக்கு வருவார்களா – என்று என் திரையுலகத் தோழர் ஒருவர் ஒருவாரமாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறார். அவரும் நல்லபடம் தான் எடுக்கிறாராம்… எனினும் அதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க ஒரு குத்துப்பாட்டு இல்லாமல் எடுப்பதில்லையாம். தமிழன் எப்படித் தடுமாறுகிறான் பாருங்கள்.
சரியான நோக்கத்துடன் படத்தைத் தொடங்கினோம்… அதே நோக்கத்துடன் படத்தை முடித்தோம். இன்று அதைப் பார்த்து அழுகிற சகோதரிகளின் கண்ணீரில்தான் நம்முடைய வெற்றியின் முகவரி இருக்கிறதே தவிர, குத்துப்பாட்டுகளின் குதூகலத்தில் அல்ல! இதுதான் நமது நியாயமான அடையாளமாக இருக்கும் ஏகலைவன்! இதற்காகப் பெருமைப்படாமல் நாம் வேறு எதற்காகப் பெருமைப்படமுடியும்?
அன்றைக்கு ஆல்பட் திரையரங்கில் படம்பார்த்த நூற்றுக்கணக்கான குடும்பங்களில் ஓவியர் அரஸ் குடும்பமும் ஒன்று. அவர்தான் ஒய்.புனிதவதி எப்படியிருப்பாள் என்று முதல் முதலில் வரைந்து காட்டியவர். அவரையே உலுக்கியிருந்தாள் நீநிகா. "தீபாவளி தினத்தன்று நள்ளிரவில் சென்னை நகர வீதிகளில் புனிதவதி தன்னந்தனியாக நடந்து செல்கிற காட்சிகளில், அவளைப் பின்தொடர்ந்து நானும் நடந்து செல்வதாக உணர்ந்தேன்" என்று அரஸ் சொன்னபோது தான், பெண்களை மட்டுமல்ல, ஆண்களின் மனசையும் புனிதவதி உருக்கியிருக்கிறாள் என்பதை உணரமுடிந்தது.
ஆல்பட்டில் சிறப்புக்காட்சி நடத்துவதென்றும், ஆயிரத்துநூறு பேரை அழைப்பது என்றும் முடிவெடுத்தபோது நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்டார்கள்… அவ்வளவு பேரை அழைக்கவேண்டுமா – என்று. "அழைக்கவேண்டும்" என்று உறுதியுடன் சொன்னேன். அதற்குக் காரணம், அது வெறும் சிறப்புக்காட்சி மட்டுமல்ல – அது ஒரு லிட்மஸ் டெஸ்ட். நாம் எந்த உணர்வுடன் படத்தை எடுத்தோமோ அதே உணர்வை பார்வையாளர்களிடம் படம் ஏற்படுத்துகிறதா – என்பதை அறிந்து கொள்வதற்கான லிட்மஸ் டெஸ்ட். இந்தச் சோதனையில் நாம் பெற்ற வெற்றிதான், மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
எப்படி எடுக்கவேண்டும் என்று நினைத்தோமோ அப்படித்தான் இந்தப் படத்தை நாம் எடுத்தோம். எந்த உணர்வை இந்தப் படம் ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தோமோ அந்த உணர்வை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மிக மிக வலுவான ஒரு நிறுவனத்தின் – ஜெமினி என்கிற அந்த நிகரற்ற நிறுவனத்தின் பக்கபலம் இந்தப் படத்துக்குக் கிடைத்திருக்கிறது. இலக்கு தெளிவாக இருந்தால் பயணம் எளிதாக இருக்கும் என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு விஷயத்தை உங்களிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளாமல் இருக்கமுடியவில்லை சென்னையில் மட்டுமின்றி கோவை, திருச்சி, நெல்லை – என்று பல பகுதிகளிலிருந்தும் விளம்பர பேனர்கள் வைக்கப் போவதாகத் தெரிவிக்கும் நண்பர்களின் உற்சாகம்தான் இப்போது என்னை அளவுக்கதிகமாகக் கவலையடைய வைத்துள்ளது. படம் வெளியாகும் 25ம் தேதியிலிருந்து நாலைந்து நாட்களுக்குள் திரையரங்குக்குக் குடும்பத்தோடு வந்து படத்தைப் பார்ப்பதுதான் இப்படியொரு முயற்சிக்கு அவர்கள் தரும் மரியாதையாக இருக்குமே தவிர, பேனர் வைப்பது அல்ல! இதை நண்பர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லவேண்டும். உங்களால்தான் அது முடியும்.
தொடர்ந்து ஒருவாரம் முன்பதிவு செய்து குடும்பம் குடும்பமாக படத்தைப் பார்த்தார்களென்றால், அது "உச்சிதனை முகர்ந்தால்" வெற்றியாக மட்டும் இருக்காது. இந்த இனத்தின் வெற்றியாக இருக்கும். இன்றைக்கு இப்படியெல்லாம் படம் எடுக்கப் பயந்து மசாலாப் படம் எடுக்கும் பிரபல கலைஞர்கள் கூட நமக்காக நான்கு படம்… ஏன் நானூறு படம் எடுக்க முன்வரலாம்! இந்த இனத்துக்கு அந்த எழுச்சி தேவைதானே ஏகலைவன்! எனவே, நண்பர்களிடம் இப்போதே சொல்லிவையுங்கள்… எந்தத் திரையரங்குகளில் உச்சிதனை முகர்ந்தால் வெளியாகிறது என்பது அறிவிக்கப்பட்டவுடன் முன்பதிவு செய்யும்படி!
புனிதவதி என்கிற அந்தப் புனிதநதிக்கு நேர்ந்த கொடுமையை ஏழரைக் கோடி தமிழரும் தெரிந்துகொள்ளவேண்டும் ஏகலைவன். அதற்காகத்தானே படமெடுத்தோம்! அவள் யாருடைய குழந்தையோ அல்ல… தமிழராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் மகள். ஒவ்வொரு தமிழரிடமும் அவளைக் கொண்டுபோய்ச் சேர்ப்போம். உங்களிடம் கேட்கும் இந்த உதவியைத் தான் நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்கிறேன் ஏகலைவன். இந்தக் கடமையைத் தவற விட்டுவிட்டு புகழேந்திக்கு பேனர் வைப்பதால் என்ன சாதிக்கப் போகிறார்கள் என் நண்பர்கள்?
புகழேந்தி தங்கராஜ்
http://kathaludan.blogspot.com
http://worldnews24by2.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?