கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் சோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்எம்எஸ் வருகைப் பதிவு திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
நேற்று நடந்த கலெக்டர்கள் மாநாட்டின்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
நேற்று நடந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியின்போது முதல்வர் ஜெயலலிதா 43 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் இதுவும் ஒன்று.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,கடலூர் மாவட்டத்தில் எஸ்எம்எஸ் மூலம் ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்யும் முறை சோதனை ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், ஆசிரியைகள், தங்களது வருகையை தலைமை ஆசிரியருக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும். அவர்அதைப் பெற்று யார் யார் வந்துள்ளனர், யார் வரவில்லை என்பதை காலை 9. 30 மணிக்கு (பள்ளி தொடங்கும் நேரம்) உதவித் தொடகக் கல்வி அதிகாரிக்கு அனுப்பி வைப்பார். அவர் அதைப் பெற்று கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்புவார்.
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளிலிருந்து இதுபோல வரும் தகவல்கள் தொகுக்கப்பட்டு கலெக்டரின் பார்வைக்கு வைக்கப்படும். அவர் அந்தப் பட்டியலைப் பார்வையிட்டு எத்தனை பள்ளிகளில் ஆசிரியர்வருகை முழுமையாக உள்ளது, எங்கு ஆசிரியர்கள் வருகை குறைவாக உள்ளது என்பதைத் தெரிந்து கொண்டு பள்ளிகளில் ஆசிரியர்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பார்.
இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, ஆசிரியர்களும் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு வருவது அதிகரித்தது. இதையடுத்து தற்போது இந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?