உலகிலேயே மிகவும் பழமையான தொழில்நுட்பத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு மின் நிலையத்தின் சுற்றுப்புறங்களில் அணுக் கதிர் வீச்சால் எத்தனை பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது. எத்தனை பேர் வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இல்லையேல் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக அறிவித்துள்ளது.
புதிய அரசியல், புதிய நம்பிக்கை, புதிய பாதையில் பாமக என்ற தலைப்பில் பாமம சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள இளைஞர்கள் பொதுக்கூட்ட நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் தொடங்கியது. இதில் பேசிய பாமக இளைஞர் சங்கத் தலைவர் டாக்டர் அன்புமணி கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள கட்சிகளில் வித்தியாசமான கட்சியாக பாமக திகழ்கிறது. 44 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் முன்னேற்றம் அடையவில்லை. திராவிட கட்சிகளுக்கு ஒரே மாற்று பாமகதான். மாற்றம் விரைவில் வரும், தமிழகத்தில் பாமக ஆட்சி விரைவில் மலரும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பாமக உண்மையான வெற்றியை பெற்றுள்ளது. 15 வட மாவட்டங்களில் பாமக பெரும் செல்வாக்கினைப் பெற்ற கட்சியாக உள்ளது. தனித்துப் போட்டி என்று பாமக முதலில் அறிவித்து, அதனை செயல்படுத்தி தனது தனிப் பெரும் செல்வாக்கை நிரூபித்துள்ளது.
சினிமா, சாராயம் உள்ளிட்ட போதையில் தமிழக மக்கள் மூழ்கி உள்ளனர். புதிய பாதை, புதிய நம்பிக்கை என்ற வழியில் தமிழக மக்களை பாமக அழைத்துச் செல்லும். தமிழகத்தில் தமிழ்வழிக் கல்வி இல்லை. மது விற்பனையை அரசாங்கம் நடத்துகின்றது. ஆனால் அரசாங்கம் மக்களுக்கு இலவசமாக தர வேண்டிய கல்வி தனியார் வசம் அளிக்கப்பட்டு தனியார்கள் கொள்ளையடிக்கிறார்கள்.
கூடங்குளம் அணுமின் நிலையம் வந்தால் அப்பகுதியே வளமாகிவிடும் என்று மத்திய அமைச்சர் வி.நாராயணசாமி கூறி வருகிறார். ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் கல்பாக்கத்தில் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு அணு மின் நிலையம் அமைக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அங்கு என்ன வளம் ஏற்பட்டு விட்டது?.
உலகிலேயே மிகவும் பழமையான தொழில்நுட்பத்தில் கல்பாக்கம் அணு மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தை பற்றி அப்துல் கலாம் போன்றவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் கல்பாக்கம் அணு மின் நிலையத்தை பற்றி யாரும் கருத்து தெரிவிப்பதில்லை.
இந்த அணு மின் நிலையத்தை பார்த்து வெள்ளைக்காரர்களே பயப்படுகின்றனர். கல்பாக்கம் அணு மின் நிலையத்தின் சுற்றுப்புறங்களில் அணுக் கதிர் வீச்சால் எத்தனை பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ளது. எத்தனை பேர் வேறு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இல்லையேல் இந்த அணு மின் நிலையத்தை எதிர்த்து விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும்.
உர விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரியே காரணம். உர விலை உயர்வைக் கண்டித்து வருகிற 21ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பாமக ஆட்சிக்கு வந்தால் கல்வி, மருத்துவ வசதி மற்றும் விவசாயிகளுக்கு இடு பொருட்கள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இது தீவிர மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றார்.
இனிவரும் தேர்தலில் பாமக தனித்து தான் போட்டியிடும். திராவிட கட்சிகளுடன் கூட்டணி கிடையாது. தமிழகத்தில் புதிய அரசியலையும், புதிய மாற்றத்தையும் பாமக ஏற்படுத்தும். தமிழகத்தை பாமகசிங்கப்பூராக மாற்றப் போவதில்லை. தமிழகத்தை போல் நமது ஊர் மாற வேண்டும் என்று சிங்கப்பூர் மக்கள் நினைக்கும் அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த மற்றும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் எவ்வளவு நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களில் 50 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கும், 40 சதவீதம் தொழிற்சாலை தொடங்கப்பட்ட மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். மீதமுள்ள 10 சதவீதம் மற்றவர்களுக்கு வழங்கலாம் என்றார் அன்புமணி.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?