டைட்டில் போட துவங்கியதுமே படத்தில் வரும் அத்தனை கேரக்டர்களையும் அறிமுகப்படுத்த ஆரம்பிக்கிறார் டைரக்டர் வடிவுடையான். 'அதோ, டி- ரோவுல நீல சட்டையுடன் உட்கார்ந்திருக்கிறாரே, அவர்தான் அந்தணன்' என்று அறிமுகப்படுத்துவாரோ என்கிற அளவுக்கு அச்சம் வருகிறது. நல்லவேளையாக எடுத்த எடுப்பிலேயே அரிவாள், ரத்தம், வெடிகுண்டு என்று கதைக்குள் போய்விடுகிறார் மனுஷன். அந்த வகையில் நன்றி தோழா…
போலீசும் குற்றவாளிகளும் சேர்ந்து கொண்டு உயிர் பலியாட்டம் நடத்துகிற அந்த முதல் பத்து நிமிடங்கள் முடிந்ததுமே ஜிவ்வென்ற பனிக்காற்றுடன் ஆரம்பிக்கிறது காதல் எபிசோட். அஞ்சலியின் கதை பேசும் கண்களும், கரணின் ரவைப் பல் சிரிப்புமாக அலாதியான நிமிடங்கள்தான் அது. பஸ்சில் டிக்கெட்டுக்கு பணம் எடுக்கும் கரண் தனது ஸ்பெஷல் ஒரு ரூபாய் நாணயத்தை தவறவிட, அது கரெக்டாக அஞ்சலியின் ஜாக்கெட்டுக்குள் தஞ்சம் புகுகிறது. அது போதாதா காதல் பற்றிக் கொள்ள? ஒரு கட்டத்தில் இந்த அஞ்சலி யாருடைய மகள் என்பதை காட்டுகிறார்கள். நமக்கு ஜிவ்வென்கிறது. தேன் கூட்டுக்குள் கையை விட்ட கரணும், அதுவரை தேனாகவே வழிந்த அஞ்சலியும் என்னவானார்கள்? விறுவிறுப்பான இரண்டாம் பாதி.
வெற்றிலைச்சாறை வேட்டியெல்லாம் துடைத்த மாதிரி ஆங்காங்கே ரத்தக் கறையுடன் நகர்கிறது படம். முடிவில் 'உன்னை ராணி மாதிரி பார்த்துக்கிறேன்' என்று வாக்குறுதி கொடுத்த கரண் என்ன முடிவெடுத்தார் என்பதுதான் கண்ணீர் வரவழைக்கும் க்ளைமாக்ஸ்.
கரணின் கேரியரில் இது முக்கியமான படம். எவ்வளவு திணித்தாலும் சுமக்கிற அளவுக்கு தோள் பலமும் கொண்டவராச்சே! பல காட்சிகளில் அநாயசம் தெரிகிறது. அதிலும் சிலுவையிடம் பேச வருகிற அந்த காட்சியில் அவரது சாதுர்யமான டயலாக்கும், யதார்த்தமான பாடி லாங்குவேஜும் அருமை. தன்னையறியாமல் தவறுக்கு பிள்ளையார் சுழி போடும் அந்த லாரி சேசிங் காட்சிக்கு தியேட்டரே ஸ்பீடா மீட்டராகிறது. அவ்வப்போது எம்ஜிஆர் மாதிரி இமிடேட் பண்ணுவதுதான் பொருந்தலேங்க பிரதர்.
அஞ்சலியின் ரசிகர் மன்ற எண்ணிக்கை இந்த படத்திற்கு பிறகு இன்னும் கூடலாம். 'ஹோய்… அந்த குட்டி சுவத்துல உட்காருவதை விட்டுட்டு என்னை லவ் பண்ணலாம்ல' என்று ஒரு மின்னலை வீசிவிட்டு எஸ்கேப் ஆகிற அழகுக்கு பஞ்சுமிட்டாயாக உருகுவான் ஒவ்வொரு ரசிகனும். நடிக்கவும் நிறைய ஹோப் தருகிறார்கள் இவருக்கு. கூடவே ஒட்டி திரிந்த அந்த தோழி (யாருங்க அது, தனியா ஒரு படமே கொடுக்கலாம் போலிருக்கு) அவரது அப்பாவாலேயே வெட்டிக் கொல்லப்படுவதை கண்டு பொங்குகிறாரே, அந்த கோழிமுட்டை கண்களில் அப்படியொரு கொள்ளிக்கட்டை அனல்.
அப்புறம் நமது கவனத்தை ஈர்ப்பது இருவர். ஒருவர் படத்தின் தயாரிப்பாளர் ஜே.எஸ். இன்னொருவர் 'சித்தப்பு' சரவணன். பருத்தி வீரனுக்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு படம் இது. உடம்பெல்லாம் கவரிங் நகையோடு பில்டப் கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். காமெடி அநாயசமாக வருகிறது இவருக்கு. இனிமேலாவது ஒரு கை பார்க்கலாமே தலைவா?
சிலுவை(யை) என்ற மிகப்பெரிய கேரக்டரை சுமந்திருக்கிறார் தயாரிப்பாளர் ஜே.எஸ். அந்த வட்டாரத்துக்கேயுரிய கோபத்தையும், கூர்மையையும் அப்படியொரு வேகத்துடன் வெளிப்படுத்தியிருக்கிறார் மனுஷன். ஏதோ வில்லன் என்பதற்காகவே இவரை கத்தி வீச வைக்காமல், காரண காரியத்தோடு உலவ விட்டிருக்கிறார் டைரக்டரும். இந்த புதிய வில்லனுக்கு இனிமேல் நிறைய படங்கள் கிடைக்கலாம்.
ஒரு அழுத்தமான படத்தில் வசனத்தின் வேலை அபாரமானது. அதை உணர்ந்து முழங்கியிருக்கிறார் பா.ராகவன். படித்தவனுக்கு வேலை கிடைக்கலைன்னா இந்த சமுதாயம் பாழாப் போயிடும் என்று அனல் கக்குகிற அவரது பேனா, ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ்கிரீமை வழிய விடுகிற அழகையும் சொல்லியாக வேண்டும்!
இசை- வித்யாசாகர். இப்படி ஒரு டைட்டிலை பார்த்து எத்தனை நாளாச்சு? ஆனால் இந்த ஆவலை ஓரளவுதான் நிறைவேற்றியிருக்கிறார் வித்யா. பச்…
அரசு வேலைக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் இந்நாளில் அது கிடைக்காமல் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்பதே அபத்தம். அந்த வகையில் அவர் சரவண சுப்பையா அல்ல, 'சறுக்குன' சுப்பையா!
ஒளிப்பதிவாளர், எடிட்டர் என்று அவரவர் வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார்கள். அடங்காத ரவுடிகளை கூட போட்டுத்தள்ளுகிற ஒரே ஆயுதம் காதல்தான்! அதை 'வடிவம்' தப்பாமல் சொல்லியிருக்கிறார் வடிவுடையான்.
தம்பி 'ஹிட்'டோத்தி சுந்தரம்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?