சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களிடம் பெற்ற அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தராவிட்டால், இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் அல்லது வெளியிடும் எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று நடந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகள்:
திருப்பித் தரவேண்டிய முன்பணம் என்ற வகையில் சன் பிக்சர்ஸுக்கு இதுவரை திரையரங்குகள் சார்பில் தரப்பட்ட பணம் ரூ 2.60 கோடி திருப்பித்தரப்படவே இல்லை. கடந்த ஆட்சியிலிருந்தே இதனை திருப்பித் தரக் கோரி வருகிறோம். ஆனால் சன் பிக்சர்ஸ் கண்டுகொள்ளவே இல்லை.
எனவே இந்தத் தொகையை திருப்பித் தரும்வரை, சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களையோ, தயாரிக்கும் படங்களையோ திரையிடப் போவதில்லை.
ஆட்சி மாற்றம் காரணமாக இப்போது புகார் தரவில்லை. கடந்த ஆட்சியின்போதும் திருப்பிக் கேட்டோம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
திரையரங்குகளில் ஐம்பதுகளில் தினசரி 4 காட்சிகளுக்கு அனுமதித்தார்கள். அன்றைக்கு படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடும் வகையில் வந்தன. ஆனால் இன்றைக்கு 2 மணிநேரப் படங்கள்தான் வருகின்றன. எனவே காட்சிகளை 5 அல்லது 6 ஆக நீட்டிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும். நகர்ப்புறங்களில் ரூ 50 என உள்ள கட்டணத்தை, ரூ 80 ஆக உயர்த்த வேண்டும். இப்படி உயர்த்துவதால் எங்களுக்கு மட்டும் ஆதாயமில்லை. அரசு மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைக்கிறது. இதுகுறித்து முதல்வரைச் சந்தித்து முறையிடவிருக்கிறோம்," என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?