பத்திரிகைகளுக்கு நான் பயப்பட மாட்டேன் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செவிலியருக்கான படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.
பல்வேறு விதமான பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். அவ்வாறு பயந்துகொண்டிருந்தால் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் ஏராளமான குப்பை பத்திரிகைகள் வெளியாகின்றன என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் பத்திரிகைகளில் வரும் செய்திகளை அப்படியே நம்பிவிடாமல் அவற்றின் உண்மைத் தன்மையை ஆராய்வது அவசியம் என்றார் அவர்.
இலங்கையில் சமீப காலமாக பல பத்திரிகைகளை ராஜபக்சே அரசு தடை செய்துவிட்டது. பத்திரிகையாளர்களைத் துன்புறுத்துவதில் உலகிலேயே முன்னணியில் உள்ள நாடுகளில் இலங்கையும் ஒன்று.
அரசை எதிர்த்து எழுதியதற்காக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே கொடூரமாக கொல்லப்பட்டதில் ராஜபக்சே மற்றும் அவரது தம்பி கோத்தபாயவுக்கு தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது.
புலிகளை ஆதரித்ததாகக் கூறி திசநாயகம் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்களை ராஜபக்சே அரசு துன்புறுத்தியது.
இரு தினங்களுக்கு முன்பும்கூட 5 செய்தி இணையதளங்களை மூட உத்தரவிட்டது ராஜபக்சே அரசு என்பது நினைவிருக்கலாம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?