செங்கல்பட்டு, பூந்தமல்லியில் சிறப்பு முகாம்களில் உள்ள 29 இலங்கை அகதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, செங்கல்பட்டு, பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 ஈழத் தமிழ் அகதிகளில் 15 பேரை தமிழக அரசு விடுதலை செய்துள்ளது பாராட்டிற்குரியது.
ஈழத்தில் இனப்படுகொலை உச்ச கட்டத்தில் இருந்தபோது, அங்கே படுகாயமுற்றுக் கிடந்த மக்களுக்கு மருந்துவப் பொருட்களையும், மண்ணெண்ணை உள்ளிட்ட சில அத்யாவசியப் பொருட்களையும் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் போரில் இங்குள்ள பல ஈழத் தமிழ் அகதிகளை தமிழக போலீசார் கைது செய்து, சிறப்பு முகாம்கள் என்று பெயரில் சிறையை ஏற்படுத்தி தடுத்து வைத்தனர்.
அவர்களுக்கு எதிரான வழக்குகளில், பிணை விடுதலை உள்ளிட்ட சட்ட ரீதியான நிவாரணங்களைக் கூட பெறுவதற்கு அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று தமிழின அமைப்புகள், அரசியல் கட்சிகள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றன.
மேலும், சிறப்பு முகாம்களில் அடைப்பட்டுக் கிடந்தவர்கள் பல முறை பட்டினிப் போராட்டம் நடத்தி தங்களை உடனடியாக விடுவித்து, தமிழகத்தில் உள்ள இதர முகாம்களில் வசிக்கும் தங்கள் உறவினர்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களில் 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இன்னமும் 29 பேர் பூந்தமல்லி, செங்கல்பட்டு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் அனைவரும் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறை வைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு இப்பிரச்சனையை தமிழக அரசு அணுகி, மீதமுள்ள 29 பேரையும் உடனே விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?