ஆப்பிள் நிறுவனத் தந்தை ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவால் உலகெங்கும் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறையினர், தொழில் அமைப்புகள், இளம் விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருமே பெரும் சோகமடைந்துள்ளனர்.
இணையதளங்களில் ஜாப்ஸ் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியும், அவரது சாதனைகளைப் புகழ்ந்தும் செய்திகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
ஒரு இணையத்தில் இப்படி ஜாப்ஸ் புகழப்பட்டுள்ளார்.:
உலகை மூன்று ஆப்பிள்கள் மாற்றியமைத்தன. ஒரு ஆப்பிள் ஏவாளை மயக்கியது. இன்னொரு ஆப்பிள் நியூட்டனை விழித்தெழ வைத்தது. 3வது ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ் கைவசம் இருந்தது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் அவர் பால் பெரும் அன்பையும், மரியாதையையும், ஆச்சரியத்தையும் வாரியிறைத்துக் கொண்டுள்ளன.
ஸ்டீவ் மரணச் செய்திக்கு ட்விட்டர் மூலம் லட்சக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். விநாடிக்கு 10 ஆயிரம் ட்விட்டர்கள் அனுப்பப்பட்டு புதிய சாதனையும் படைக்கப்பட்டுள்ளது. இதுவரை இணையதள வரலாறு காணாத இரங்கல் தகவல் இது.
இதற்கு முன்பு அமெரிக்கப் பாடகி பியான்ஸுக்குத்தான் அதிக அளவிலான ட்விட்டர்கள் வந்திருந்தன. தான் கர்ப்பமாக இருப்பதாக அவர் அறிவித்தபோது அதற்குப் பாராட்டு தெரிவித்து விநாடிக்கு 8868 ட்விட்டர்கள் வந்திருந்தன.
அதேபோல பின்லேடன் மறைவின்போது 5000 ட்விட்டர்கள் வந்திருந்தன. ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமியின்போது 5530 ட்விட்டர்கள் வந்திருந்தன. ஆனால் அத்தனையையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
சாதாரண ஆளாக வளராமல், வாழாமல், ஒட்டுமொத்த உலக சமுதாயத்தின் முகத்தை மாற்றியமைத்து, மாடர்னைஸ் செய்து மறைந்து போன ஸ்டீவ் ஜாப்ஸ் மரணத்திற்குப் பிறகும் கூட சாதனையாளராக உருவெடுத்திருப்பது வியப்புக்குரிய ஒன்று. ஒவ்வொரு இளம் சாதனையாளர்களுக்கும், இளம் தொழிலதிபர்களுக்கும் ஜாப்ஸ் ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?