புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார்.
ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.
அந்த நண்பர்கள் மூலம் இன்னும் பலருக்கும் தகவல் பரவ, அடுத்து வந்த நாட்களில் தினசரி நண்பர்கள் அவரது பாலோ ஆல்டோ இல்லத்துக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள்.
குறிப்பாக அவர் தனது ராஜினாமாவை அறிவித்த நாளிலிருந்து ஏராளமான நண்பர்கள் வர ஆரம்பித்துவிட்டனராம். ஸ்டீவுடன் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவருக்கு பிரியா விடை கொடுத்துச் சென்றவண்ணம் இருந்தனராம் இந்த நண்பர்கள்.
தான் வாழும் காலத்திலேயே எல்லாருக்கும் நல்ல முறையில் குட்பை சொன்ன திருப்தி ஸ்டீவுக்கு. வருகிற நண்பர்களை வரவேற்று, நன்றி சொல்லி அனுப்பக் கூட முடியாத அளவுக்கு களைத்துப் போனாராம் ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லூரென்.
இறுதி நாள் நெருங்க நெருங்க, தன் வீட்டில் நடமாடக்கூட முடியாத அளவுக்கு மெலிந்து பலவீனமாகிவிட்டாராம் ஸ்டீவ் ஜாப்ஸ்.
ஆனாலும் யார் யாருக்கெல்லாம் தன் இறுதிப் பயணம் குறித்த சொல்லி விடைபெற வேண்டும் என்பதை மனதுக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொண்டாராம். தனது நெருங்கிய நண்பரும் உடல்நல ஆலோசகருமான டீன் ஆர்னிஷை ஒரு நாள் இரவு உணவுக்கு அழைத்து விருந்து கொடுத்தாராம். தனது மற்றொரு நண்பரும் வென்சர் கேபிடலிஸ்டுமான ஜான் டோர், ஆப்பிள் போர்டு உறுப்பினர் பில் கேம்ப்பெல், டிஸ்னி நிறுவன தலைமை நிர்வாக ராபர்ட் ஏ ஐகர் என ஒவ்வொரு நாளும் ஒருவரை அழைத்து தன் மனதிலிருப்பதைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஆப்பிள் ஐஃபோனின் லேட்டஸ்ட் பதிப்பான 4 எஸ் மாடலை வடிவமைத்தவர்கள், நிர்வாகிகளையும் அழைத்து அதை எப்படி அறிமுகப்படுத்த வேண்டும் என கடைசியாக அறிவுரைகள் தந்துள்ளார்.
ஆனாலும் தனது பெரும்பாலான நேரத்தை தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் செலழித்துள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை எழுத வால்டர் ஜஸாக்ஸன் என்பவரையும் பணித்திருக்கிறார்.
இன்று ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி மற்றும் குழந்தைகள் 6.5 பில்லியன் டாலர் சொத்துக்கு சொந்தக்காரர். கூடவே உலகின் மிகப்பெரிய முன்னோடி மனிதரான ஒருவரின் சாம்ராஜ்யத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு வந்திருக்கிறது.
அவரது இறுதி நாட்கள் குறித்து டாக்டர் ஆர்னிஷ் கூறுகையில், "ஸ்டீவ் ஒரு நிமிடத்தைக் கூட வீணடித்ததில்லை. காரணம் ஏற்கெனவே அவரது வாழ்நாளின் முடிவு தெரிந்து விட்டதால், தனக்கு வேண்டாத ஒரு விஷயத்திலும் மனதைச் செலுத்தியதில்லை. கடைசி நாள் வரை, தன் வாழ்க்கை தனது கட்டுப்பாட்டில் இருக்கும்படியும், தான் செய்ய விரும்பியதைச் செய்து முடிக்கும் வகையிலும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்," என்கிறார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் கேன்சரில் பாதிக்கப்பட்டு, விடுமுறையில் இருந்தபோது, அவருக்கு பல விருதுகள் மற்றும் பாராட்டு விழாக்களுக்கு ஏற்பாடு செய்து அழைத்துள்ளனர். ஆனால் அவை எதையும் ஏற்க மறுத்துவிட்டாராம் ஸ்டீவ்.
நண்பர்கள் தொடர்ந்து அவரைப் பார்த்து வந்தாலும், இறுதி வாரங்களில் ஸ்டீவ் ஜாப்ஸின் வீடு முழுக்க செக்யூரிட்டிகள் மயமாக இருந்ததாம். கேட் பூட்டப்பட்டு, எப்போதும் இரு கறுப்பு நிற சொகுசு வாகனங்கள் தயாராக இருந்தன. வேறு யாராலும் அவரைப் பார்க்க முடியவில்லை.
ஆனால் வியாழனன்று கேட் திறக்கப்பட்டு வாகனங்கள் அகற்றப்பட்டன. அந்த இடம் முழுக்க மலர்கள், ஒரு வாய் கடிக்கப்பட்ட ஆப்பிள்கள், மலர் வளையங்கள் என நிரம்ப ஆரம்பித்துவிட்டன!
"ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை ஒரு பெரிய சாதனையாளராக, கண்டுபிடிப்பாளராக கருதி நடந்து கொண்டதே இல்லை. ஒரு சாதாரண மனிதனை விட பல மடங்கு இயல்பாக அனைவரிடமும் நடந்து கொண்டார். அன்பு காட்டினார். அவர்களின் தேவைக்கேற்ற கண்டுபிடிப்புகள் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதுதான் இந்தத் துறையில் யாருக்கும் கிடைக்காத புகழ், பெருமை, மக்களின் அன்பை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்துள்ளது", என்கிறார் டாக்டர் ஆர்னிஷ்.
நூறு சதவீதம் உண்மையான வார்த்தைகள்!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?