ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நியூயோர்க் சென்றிருந்த மகிந்த ராஜபக்ஷ டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹொஸ்டன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் பிரதி ராஜாங்க அமைச்சர் ரொபேர்ட் ஓ பிளேக்கிடம் வெளி விவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முறையிட்டுள்ளார். இந்த முறைப்பாடு தொடர்பில் பதிலளித்த ரொபேர்ட் ஓ பிளேக் மகிந்த ராஜ பக்ஷவுக்கு நியூயோர்க்கில் மட்டுமே ராஜதந்திர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ஷ நியூயோர்க்குக்கு வெளியே செல்லும் போது ஏற்படக் கூடிய சட்டரீதியான நடவடிக்கைகளில் தலையீடு செய்வதற்கு அமெரிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை எனவும் அவர் பீரிஸிடம் கூறியுள்ளார். அமெரிக்காவின் குயின்ஸ்லாந்து பெளத்த விகாரையில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்த மகிந்த ராஜபக்ஷவிடம் நீதிமன்ற அழைப்பாணையை கையளிக்க அமெரிக்க அதிகாரிகள் காத்திருப்பதாக தெரிய வந்ததைத் தொடர்ந்து அவரால் அங்கு செல்ல முடியவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
கேணல் ரமேஷின் படுகொலை, வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக இருந்தவர் என்ற அடிப்படையிலேயே மகிந்த ராஜபக்ஷ மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வன்னியில் இடம்பெற்ற இறு திக்கட்டப் போரின் போது சிறீலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஷின் துணைவி வத்சலா தேவியின் சார்பில் இவ்வழக்கு கடந்தமாதம் 22ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://tamilhot.blogspot.com
http://tamilhot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?