ஷாரூக்கானின் ரா ஒன் படத்தில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்தக் காட்சியில் அவர் நடிப்பாரா இல்லையா என பலத்த சந்தேகம் நீடித்தது.
ஆனால் கடைசியில், அந்த சந்தேகத்தையெல்லாம் தூளாக்கிவிட்டு, மும்பையில் மூன்று மணிநேரம் இந்தப் படத்துக்காக நடித்துக் கொடுத்துள்ளார் ரஜினி.
ஆரம்பத்தில் இந்தப் படத்தில் ரஜினி நடிக்க கூடாது என்றே அவரது குடும்பத்தினர் கூறிவந்தனர். ஆனால் ஷாரூக்கானே ரஜினியிடம் போனில் இதுகுறித்துக் கேட்டுள்ளார்.
டாக்டர்கள் இன்நும் ஒரு மாதம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்கிறார்களே என ரஜினி நாசூக்காக அப்போது சொன்னாராம். ஆனால் சில தினங்கள் கழித்து ரஜினி மகள் சௌந்தர்யாவே ஷாரூக்கானைத் தொடர்பு கொண்டு, அந்தக் காட்சி எப்படி வர வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே ஷாரூக்கும் அதுகுறித்த வீடியோவை அனுப்ப, இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி ராவ் சிட்டியில் அக்டோபர் 4-ம் தேதி நடத்த திட்டமிட்டிருந்தார்களாம்.
ஆனால் கடைசி நேரத்தில் ரஜினியின் விருப்பப்படி மகாத்மாவின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதியே மும்பையில் உள்ள இயக்குநர் சுபாஷ் கய்யின் பிலிம் இன்ஸ்டிட்யூட் நிறுவன வளாகத்தில் உள்ள ஸ்டுடியோவில் வைத்து இந்தக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் காட்சியை எடுத்து முடிக்க சரியாக மூன்று மணி நேரம் பிடித்துள்ளது. இந்த மூன்று மணி நேரமும் ரஜினி மிக இயல்பாக, தனக்கே உரிய ஸ்டைலில் நடித்துக் கொடுத்துள்ளார்.
வில்லன்களிடம் நிராயுதபாணியாக சிக்கும் ஷாருக்கானை ரஜினி திடீரென வந்து காப்பாற்றுவது போல் அக்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது.
தீபாவளிக்கு இப் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். ரஜினி நடிக்காவிட்டால் என்ன செய்வது என்று குழம்பிய படக்குழுவினர் ரஜினி போன்ற தோற்றம் உடைய "டூப்" ஒருவரை வைத்து அக்காட்சியை எடுத்து விட்டனர். இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி திடீரென மும்பை சென்று "ராஒன்" படத்தில் சம்பந்தப்பட்ட காட்சியில் நடித்து கொடுத்து விட்டு திரும்பியுள்ளார். காந்தி ஜெயந்தியன்று ரஜினி நடித்த காட்சியை படமாக்கியுள்ளனர்.
இந்த தகவலை ஷாருக்கான் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, ரஜினி சார் செட்டுக்குள் நடந்து வந்ததை என்னால் மறக்கவே முடியாது. எங்கள் கனவை நனவாக்கிய சவுந்தர்யாவுக்கு நன்றி. "ராஒன்" நிறைவடைந்துள்ளது. ரஜினி சார் அதை ஆசிர்வதித்தார். என்ன சொல்வது என் கண்ணில் ஆனந்த கண்ணீர். அவர் எப்போதும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன் என்றார்.
மும்பையில் உள்ள பிரபல தயாரிப்பாளர் சுபாஷ் கையின் "விஷ்லிங் உட்ஸ்" ஸ்டூடியோவில் இக்காட்சியை எடுத்துள்ளனர். "ராஒன்" படத்தில் சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றும் ரசூல்பூக் குட்டி கூறும்போது, "ராஒன்" படத்தில் ரஜினி நடித்தது மகிழ்ச்சியான விஷயம். ஒரே பிரேமில் இரண்டு சூப்பர் ஸ்டார் என்பது சாதாரண விஷயமல்ல. ஷாருக் மேல் உள்ள மதிப்புக்கும் அழைப்புக்கும் கட்டுப்பட்டுதான் ரஜினி இதில் நடித்துள்ளார்" என்றார்.
இதைத் தொடர்ந்து ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரா ஒன்னை தீபாவளி திரை விருந்தாகவே அவர்கள் கருத ஆரம்பித்துள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?