உசிலம்பட்டி அருகே கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவாக வேட்புமனுவை வாபஸ் பெற சென்றபோது, தேமுதிகவினரே அவரை தடுத்து தாக்கி நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்துள்ள அல்லிக்குண்டம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேமுதிக சார்பில், போட்டியிடுபவர் கண்ணன். இவர் அதே பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு தெரிவித்து, வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றுள்ளார்.
அப்போது பணம் பெற்றுக்கொண்டு மனுவை திரும்பப் பெற வந்துள்ளதாக கூறி, தேமுதிகவினர் கண்ணனை தடுத்து நிறுத்தினர். இதை மீறி சுவர் ஏறி குதித்து வேட்புமனுவை வாபஸ் பெற முயன்றார் கண்ணன். அப்போது கண்ணனை தேமுதிகவினர் சுற்றி நின்றுக்கொண்டு தாக்கியதால் பரபரப்பு நிலவியது.
அதையும் மீறி கண்ணன் வேட்பு மனுவை வாபஸ் வாங்குவதாக அதிகாரிகளிடம் சென்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கான நேரம் முடிந்துவிட்டதால், இனி வேட்பு மனுவை வாபஸ் பெற முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உள்ளாட்சி தேர்தலில் தேர்வாகும் தேமுதிகவினர் ஊழலில் ஈடுபட்டால் தாமே முன்வந்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அந்தக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஊர் ஊராக பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி தேமுதிக வேட்பாளர் தேர்தலுக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொண்டு வேட்பு மனுவை வாபஸ் பெற முயன்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?