உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்கள் இன்றைக்குள் மனுக்களைத் திரும்பப் பெறலாம். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இதையடுத்து தங்களை எதிர்த்துப் போட்டியில் நிற்கும் அதிருப்தி வேட்பாளர்கள், போட்டி வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்ளிட்டோரை விலை பேசும் பணியில் பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் படு ஜரூராக உள்ளனராம்.
வரலாறு காணாத வகையில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும். மேயர் பதவிக்குப் போட்டியிடுபவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முடியாது. எனவே பலர் இன்று மனுக்களைத் திரும்பப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். மேலும் வேட்பாளர்களுக்கு சின்னங்களும் ஒதுக்கப்படும்.
இறுதிப் பட்டியல் வெளியாகி, சின்னங்களும் ஒதுக்கப்பட்ட பின்னர் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு சின்னம் பிரச்சினை இல்லை என்பதால் அவர்கள் ஏற்கனவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டனர். சின்னத்திற்காக காத்திருப்போர் மட்டுமே இன்னும் தொடங்காமல் உள்ளனர்.
இதற்கிடையே, பல்வேறு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், பணத்தைக் காட்டி பிற வேட்பாளர்களை வளைக்கும் வேலையில் படு தீவிரமாக இறங்கியுள்ளனர். தங்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்துள்ள போட்டி வேட்பாளர்கள், அதிருப்தி வேட்பாளர்கள், பலம் வாய்ந்த சுயேச்சைகளை பணத்தைக் காட்டி அவர்கள் பேரம் பேசி விலை பேசி வருகின்றனராம்.
பணத்தை வாங்கிக்குங், ஜெயித்து வந்ததும் நிறைய கவனிக்கிறேன், எனக்கு ஆதரவாக செயல்படுங்கள், மனுவை வாபஸ் பெறுங்கள் என்று அவர்களிடம் பேரம் பேசி வருகிறார்களாம். தமிழகம் முழுக்க இந்த பண பேரம் படு ஜரூராக நடந்து வருகிறதாம்.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் அத்தனை கட்சிகளுமே தனித் தனியாக போட்டியிடுகின்றன. தேமுதிக மற்றும் பாஜக மட்டுமே கூட்டணிகளை அமைத்துள்ளன.
தனித்துப் போட்டியிடும் திமுக, அதிமுக, காங்கிரஸ் என எல்லாக் கட்சிகளிலும் போட்டி வேட்பாளர்கள் நீக்கமற நிறைந்துள்ளனர். இவர்கள் வாபஸ் பெற்று கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுமாறு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்தே தற்போது போட்டி வேட்பாளர்களை வாபஸ் பெற வைக்கும் முயற்சிகளில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் பணபலம் உள்ளிட்டவற்றைக் காட்டி பேரம் பேசி வருகின்றனராம்.
இன்று மாலை 3 மணிக்குள் மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என்பதால் பேரம் பேசும் வேலைகள் படு துரிதமாக நடந்து வருகின்றன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?