இம் மாதம்(செப்டெம்பர் 2011) 24 ந் தேதி ஐக்கிநாடுகள் சபையின் அறுபத்துஆறாவது ஆண்டுப் பொதுக்குழுவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள், உலகவல்லரசான அமெரிக்காவையும், ஏனைய ஐரோப்பிய நாடுகளையும் சாடும் வகையில் உரையாற்றி இருக்கிறார்.
"சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது"
எனக் கூறியதன் மூலம், அவர் மறைமுகமாக அமெரிக்காவையே சாடியிருக்கிறார் என்னும் கருத்து சர்வதேச ராஜதந்திரிகள் மத்தியில் உருவாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஈராக் மீதும் ஆப்கானிஸ்தான் மீதும் ஐக்கிய நாடுகளின் ஒப்புதல் இன்றியே அந் நாடுகளின்மீது படையெடுத்து அங்கு பெரும் மனித மற்றும் பிரதேச அழிப்புகளையே நடாத்திய அமெரிக்காவை அப்போது கண்டிக்காது விட்டுவிட்டு இன்று அந் நாட்டின் மீதும் அதன் நேச நாடுகள் மேலும் குற்றம் சுமத்தும் துணிவினை; இந்தியா பெற்றிருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும்.
அமெரிக்கா மட்டுமல்ல ,ஏனைய மேற்குலக நாடுகள் பலவும் இருபதாம் நூற்றாண்டின் நடுப் பகுதிவரை தங்கள் குடியேற்ற நாடுகளாகக் கருதியிருந்த கீழைத்தேய நாடுகளின் மீது கொண்டிருந்த ஒருவித 'கீழான' எண்ணத்தை ;இன்று அந் நாடுகள் சுதந்திரம் அடைந்துவிட்டன என்பதற்காக முற்று முழுதாக மாற்றிக் கொண்டுவிட்டதாக நம்பமுடியாது. அது தவிர,அன்று மேற்குலகிடம் அடிமைப் பட்டிருந்த நாடுகள் சிலவற்றில் ; இன்றைய பொருளாதாரத்தின் முதுகெலும்பாய் விளங்கும் எண்ணெய் வளம் சிக்கிக் கிடப்பதைச் சகித்துக் கொள்ள இவற்றால் இயலவில்லை!எனவேதான் பயங்கரவாத எதிர்ப்பு என்றும், ஜனநாயக மறுமலர்ச்சி என்றும் மிக நூதனமான கண்டுபிடிப்புகளை உருவாக்கி அதனையே சாக்காகக் கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளைப் 'பொருளாதார அடிமை'களாக்கும் செயலில் இவ் வளர்ந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
எனவே மன்மோகன் சிங் அவர்கள் இந் நாடுகளின் போக்கினைக் கண்டித்திருப்பது பாராட்டுக்கு உரியதே!
அதே சமையம், அவர் பாலஸ்தீனத்தை ஐ.நா பேரவை தனி நாடாக அங்கீகாரம் செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தி உள்ளார். இஸ்ரேலின் அடாவடித்தங்களில் இருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆயுதப் போரினையும், அதே சமையம் ; எண்ணெய் வளங் கொழிக்கும் அரபு நாடுகளின் தயவுக்காகக் காத்திருக்கும் சில மேற்கு நாடுகளின் ஆதரவினையும் பெற்ற பாலஸ்தீனம், நிச்சயம் தனி நாடாக உருவாவது காலத்தின் கட்டாயமே.
மத்திய கிழக்கில் உள்ள பல அரபு நாடுகளின் தார்மீக ஆதரவு பெற்றிருக்கும் பாலஸ்தீனத்தில்; இஸ்ரேல் புரிந்த வன் கொடுமைகளிலும் பலமடங்கு கொடுமைகள், இந்தியப் பெரு நிலத்தின் காலடியில்; ஓர் சுண்டைக்காய் அளவேயான இலங்கையில் அந் நாட்டின் தேசியச் சிறுபான்மை இனமான தமிழினம் அனுபவித்திருக்கிறது.
ராஜீவ் காந்தியின் ஆட்சியின் போதே அங்கு மிகப் பெரிய மனிதாபிமானப் பிரச்னை உருவானதும், அதனை நீக்கும் பொருட்டு அண்டை நாடான இலங்கயின் இறையாண்மை மீறப்பட்டு விட்டது என்னும் கூக்குரல் எழுந்தபோதும், தமிழர் வாழ்விடங்களில் விமான மூலம் உணவுப் பொதிகள் வீசப்பட்டதும், மன்மோகன் அவர்கள் அறியாததல்லவே!
அந்தச் சிறுபான்மைத் தமிழினம் 2009ல் மனிதாபிமானமற்ற வகையில்
அழிக்கப் படும்போது மட்டும் இவர் மௌனித்திருந்ததுதான் ஏனென்று புரியவில்லை!
அது மட்டுமின்றி, இந்த உரையில்கூட ஈழத்தமிழர்களது இன்றைய நிலை பற்றியோ, அதற்கு இந்தியா எவ்வகையில் உதவ முடியும் என்பது குறித்தோ ஓர் வரிதானும் கிடையாது.
இத்தனைக்கும், இந்தக் கூட்டத் தொடரில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசப்படவேண்டும் என உலகளாவிய மனித உரிமைஅமைப்புகளின் வற்புறுத்தல்கள் தீவிரமடந்திருந்த வேளையில்….. இலங்கையைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் தவிர்த்திருப்பது இந்திய நடுவு நிலைக் கொள்கைக்கு ஏற்புடையதாகப் படவில்லை.
சர்வசித்தன்
ஈழநேசன்
http://masaalastills.blogspot.com
http://masaalastills.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?