சன் பிக்சர்ஸ் மற்றும் சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிவிட்டதாக தனது வழக்கறிஞர் மூலம் ஹன்ஸ்ராஜ் சக்சேனா அறிவித்துள்ளார்.
சன் குழுமத்தில் மிகவும் பலம் வாய்ந்த மனிதராக உலா வந்தவர் ஹன்ஸ்ராஜ் சக்சேனா. சன் குழுமம், தனியாக சன் பிக்சர்ஸ் என்ற திரைப்பட வர்த்தகப் பிரிவை தொடங்கியபோது, அதன் தலைமைப் பொறுப்பேற்றார். சன் பிக்சர்ஸ் தயாரித்த எந்திரன் படத்ன் நிர்வாகத் தயாரிப்பாளராக இருந்தார் சக்சேனா.
ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பல்வேறு மோசடி, மிரட்டல் வழக்குகளில் சக்சேனாவைக் கைது செய்தது அதிமுக அரசு.
கடந்த மூன்று மாத காலமாக ஏராளமான வழக்குகளில் அடுத்தடுத்து கைதாகி, நீதிமன்ற காவல், போலீஸ் காவல் என தொடர் சிறைவாசம் அனுபவித்து வந்தார் சக்சேனா.
இந்த நிலையில், அனைத்து வழக்குகளிலும் நிபந்தனை ஜாமீன் பெற்று இப்போது வெளியில் வந்துள்ளார். இனி அவர் சன் குழுமத்தில் தொடர்வாரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் நீடித்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர்.
சன் பிக்சர்ஸ் ஏற்கெனவே சக்சேனாவின் இடத்தில் தற்காலிகமாக செம்பியன் என்பவரை சிஇஓவாக நியமித்தது. அதன் பிறகுதான் மங்காத்தா படத்தை வெளியிட்டு வசூலை அள்ளியது. தொடர்ந்து வெடி, நண்பன், ஏழாம் அறிவு என மெகா பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளது.
ஆனால் சக்ஸேனாவின் நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் சன் குழும தலைவர் கலாநிதி மாறனைத் தொடர்பு கொண்ட சக்சேனா, தன் மீதுள்ள வழக்குகளால் நிறுவனத்துக்கு தேவையற்ற கெட்ட பெயர் வரக்கூடாது என்பதால், சன் குழுமத்தின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகிக் கொள்வதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தையும் அவர் கலாநிதி மாறனுக்கு அனுப்பி வைத்தார். அக்கடிதத்தை கலாநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இத்தகவல்களை சக்சேனாவின் வழக்கறிஞர் இன்று தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?