2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த அனைத்தும் பிரதமருக்கும், ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என கோர்ட்டில் ஒவ்வொரு முறையும் கூறி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, பிரதமர் தனக்கு அனுப்பிய ஒரு ஒப்புகைக் கடிதத்தை வைத்து அனைவரையும் திசை திருப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் ராசா. அதில், பிரணாப் முகர்ஜியை தான் சந்தித்து மொபைல் லைசென்ஸ் குறித்த கொள்கை வகுப்பு குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். அப்போது பிரணாப் முகர்ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முடிவுகளைக் கையாளும் உயர் மட்ட அமைச்சர்கள் குழுவின் தலைவராக இருந்தார்.
பதிலுக்கு 2008ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார். அதில், உங்களது கடிதம் பெற்றேன் என்று கூறியுள்ளார் சிங்.
இதைத் தொடர்ந்து 2008ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி தொலைத் தொடர்புத்துறைக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் ராசா. அதில், பிரதமரின் 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை மேற்கோள் காட்டி, லைசென்ஸ் தொடர்பான கொள்கை முடிவு எடுக்க பிரதமர் அனுமதித்துவிட்டதைப் போல சொல்லி, முடிவுகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது பிரதமருக்குத் தான் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் அனுப்பிய 'அக்னாலட்ஜ்மென்ட்' கடிதத்தை பதிலை, பிரதமரின் அனுமதி போல திரித்து தொலைத் தொடர்புத்துறையைத் திசை திருப்பியுள்ளார் ராசா.
மேலும் 122 லைசென்ஸ்களை வினியோகிப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்புதான் தொலைத் தொடர்புக் கொள்கையையும் திருத்தியுள்ளனர். தொலைத் தொடர்பு ஆணையத்தின் ஒப்புதல் பெறாமலேயே இது நடந்துள்ளது.
இதுகுறித்து விசாரித்த, நீதிபதி சிவராஜ் பாட்டீல் தலைமையிலான ஒரு நபர் கமிஷன், எந்தவித ஒப்புதலும் பெறாமல் தொலைத் தொடர்புக் கொள்கை திருத்தப்பட்டதாக தெளிவாகக் கூறியுள்ளது.
முதலில் வருவோருக்கு முதலில் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை வினியோகிப்பது என்றுதான் இருந்தது. ஆனால் இதை மாற்றிவிட்டார் ராசா. முதலில் வருவோருக்கு அல்லது முதலில் விண்ணப்பிப்போருக்கு என்று இல்லாமல், அனைத்து நிபந்தனைகளையும் யார் ஏற்கிறார்களோ அவர்களுக்கு என்று மாற்றி விட்டார் ராசா.
2008ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி, ஸ்பெக்ட்ரம் உரிமம் கோரிய நிறுவனங்களுக்கு சில மணி நேர அவகாசம் மட்டுமே தரப்பட்டு காசோலைகள், விருப்பம் ஆவணம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. ராசாவின் திட்டத்தை முன்கூட்டியே 'அறிந்த' சில நிறுவனங்கள் காசோலைகள் உள்ளிட்டவற்றுடன் தயாராக இருந்துள்ளன. அவற்றுக்கு உடனடியாக லைசென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களைச் சேர்ந்த சிலர்தான் தற்போது ராசாவுடன் சேர்ந்து திஹார் சிறையில் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களது கடிதம் வந்தது என்ற ஒரு வரி பிரதமரின் பதிலை வைத்து மிகப் பெரிய திசை திருப்புதலை செய்துள்ளார் ராசா என்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?