''புயல், வெள்ளம், பூகம்பம்னு இயற்கை சீற்றங்களால மக்கள் பாதிக்கப்படறப்போ, பணம், பழைய ஆடைகள்னு கொடுத்து உங்கள்ல பெரும்பாலானவங்க உதவி செஞ்சிருப்பீங்க. அப்படி ஒரு பேரிடியால அத்தனையையும் இழந்து, ஒரு காலத்துல அந்த உதவியை எதிர்பார்த்து கை நீட்டி நின்ன நாங்க, இன்னிக்கு ஐந்து பணியாளர்கள், ஆயிரத்தி ஐந்நூறு கஸ்டமர்கள்னு வளர்ந்து நிக்கறோம் எங்க கார்மென்ட்ஸ் தொழில்ல. இந்த முன்னேற்றத்துல எந்த மேஜிக்கும் இல்ல. உழைப்பு... உழைப்பு... உழைப்பு மட்டும்தான்!''
- நிதானமான பேச்சு சுப்புலட்சுமி கமலேஷுக்கு.
சுப்புலட்சுமியும் கமலேஷும் காதல் தம்பதி. இந்தத் திருநெல்வேலிப் பெண், குஜராத்காரரான கமலேஷை திருமணம் செய்து, பல தடுமாற்றங்களுக்குப் பின் வாழ்க்கையில் காலூன்றியபோது... குஜராத்தில் நிகழ்ந்த அந்த மாபெரும் பூகம்பம் சில நொடிகளில் அவர்களின் உயிரை மட்டும் விட்டுவிட்டு... வீடு, கார், தொழில், சேமிப்பு என அவர்களின் அத்தனை வருட உழைப்பின் பலனையும் சிதைத்துவிட்டது. அதிலிருந்து மீண்டு, இன்று பெரம்பூரில் 'கல்கி பொட்டீக்' என்ற கடைக்கு அவர்கள் முதலாளி ஆகியிருக்கும் கதை, இன்னுமோர் தன்னம்பிக்கை அத்தியாயம் நமக்கு!
''சென்னை எத்திராஜ் காலேஜ்ல நான் பி.ஏ. படிச்சிட்டிருந்தப்போ, கமலேஷ் ஏ.எம். ஜெயின் காலேஜ்ல பி.காம். படிச்சிட்டிருந்தாரு. ஒரே ஏரியாவுல வீடுங்கறதால... நட்பு, காதல்னு முன்னேறி, கல்யாணம் முடிச்சோம். சின்னதா ஒரு வாடகை வீட்டுக்குக் குடி போனோம். எங்களோட பி.ஏ., பி.காம் இதுக்கெல்லாம் சொல்லிக்கற மாதிரி எந்த வேலையும் கிடைக்காததால, சொந்தமா தொழில் செய்ய முடிவெடுத்தோம்.
மாமியார் வீடும் சென்னையிலதான். அவங்க வீட்டுக்குப் போகும்போதெல்லாம் நான் கத்துக்கிட்ட நார்த் இண்டியன் உணவு அயிட்டங்கள செஞ்சு, வீடு வீடா சப்ளை செய்ய ஆரம்பிச்சோம். நான் ஒரு சப்பாத்தி தேய்க்கறதுக்குள்ள... இவரு நாலு சப்பாத்தி தேய்ச்சுக் கொடுக்கற ஸ்பீடும் சப்போர்ட்டும் கைகொடுக்க,
அந்த கேட்டரிங் பிஸினஸ் நல்லாவே பிக்-அப் ஆச்சு. முதல் குழந்தை சிராஜ் பிறந்தான். இவரோட ஃப்ரெண்ட்ஸ§ங்க நிறைய பேர் குஜராத்துல இருந்ததால, 'இங்க வந்து சவுத் இண்டியன் உணவுகள் செஞ்சா தடதடனு முன்னேற்றம் இருக்கும்டா'னு கூப்பிட, நாங்களும் குடும்பத்தோட குஜராத்துக்கு ஷிஃப்ட் ஆனோம்!'' என்ற சுப்புலட்சுமி, கமலேஷைப் பார்க்க, அவர் தொடர்ந்தார்...
'ராத்திரிலதான் அங்க சௌத் இண்டியன் சாப்பாட்டுக்கு வரவேற்பு. இரவு எட்டு மணிக்குள்ள எல்லா வீட்டுக்கும் சப்ளை பண்ணிடுவோம். பகல்ல நிறைய நேரம் இருந்ததால, மார்க்கெட்ல புதுசா வர்ற புராடக்ட் பத்தி சர்வே எடுத்துக் கொடுக்கற வேலையையும் ஆரம்பிச்சோம். ரெண்டு பிஸினஸ§ம் மளமளனு பிக்-அப் ஆச்சு. கீழ் தளத்துல ஆபீஸ், மேல் தளத்துல வீடு. 45 பேரை வேலைக்கு வெச்சிருக்கற அளவுக்கு லட்சங்கள்ல கொழிச்சது எங்க வருமானம். மகிழ்ச்சியோட உச்சத்துல நாங்க இருக்க, அடுத்ததா எங்க பொண்ணு ருஷாலி பிறந்தா...'' என்றவர், அதன் பிறகு தங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றிப்போட்ட அந்த துயர சம்பவத்தைச் சொல்லத் தொடங்கும்போது அவரின் குரல் பதற்றமாகிறது...
''2001 ஜனவரி 26-ம் தேதி காலையில குடியரசு தின விழாவுக்காக எங்க பையனோட ஸ்கூலுக்கு குடும்பத்தோட போயிட்டிருந்தப்போ, கார்ல ஒருவித நடுக்கத்தை உணர்ந்தோம். சில நிமிஷங்கள்ல ஊரே சுடுகாடாகிப்போய்க் கிடக்க, ஓடிப்போய் எங்க வீட்டைப் பார்த்தா... செங்கல் குவியல்தான் மிஞ்சியிருந்துச்சு. உயிருக்கு உயிரா பழகின பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் மண்ணோட மண்ணா புதைஞ்சிருந்தாங்க. சாப்பாடில்ல, தூக்கமில்ல, அழக்கூட திராணியில்ல. நாலு நாள் நடு ரோட்டுல புழுதிலயே கிடந்தோம். 'முறைப்படி கட்டப்படாத பில்டிங்'னு சொல்லி எந்த நஷ்டஈடும் எங்களுக்கு கிடைக்கல. நிவாரணப் பொருட்களை வாங்கி பசியாத்திக்கிட்ட எங்க கையில அப்ப இருந்தது அஞ்சு ரூபாய் மட்டும்தான்!''
- குரல் கரகரக்கிறது கமலேஷுக்கு.
மறுபடியும் சென்னை... உறவுகள், நண்பர்கள் அடைக்கலப்படுத்த, மீண்டும் ஆதியிலிருந்து தொடங்க முடிவெடுத்திருக்கிறார்கள் இந்தத் தம்பதி.
''அதே கேட்டரிங் பிஸினஸ்தான். என் கணவோரட சகோதரர், நண்பர்கள் கொடுத்து உதவின பணம்தான் மளிகை வாங்க மூலதனம். 'எப்படியெல்லாம் இருந்தோம்'ங்கற சுயபச்சாதாபத்தை தூக்கிப் போட்டுட்டு, 'எப்படியும் எழுந்துடுவோம்'ங்கற நம்பிக்கையோட உழைச்சோம். முதல்ல டிபன் மட்டும்தான் போட்டோம். ஒரே மாசத்துக்குள்ள 50 ரெகுலர் கஸ்டர்மர்ஸ் கிடைக்க, மூணுவேளை சாப்பாடுனு முன்னேறினோம். ஒரு நிமிஷம்கூட நாங்க ரெண்டு பேரும் 'ஹப்பா'னு அலுப்பா உட்கார மாட்டோம். நண்பர் ஒருத்தர் எங்களுக்காக லோக்கல் சேனல்ல விளம்பரம் செஞ்சார். இப்படி எங்கள சுத்தி இருந்த நல்ல உள்ளங்கள் கை கொடுக்க, நாலஞ்சு வருஷத்துல பிஸினஸ் ஸ்திரமாகியிருந்தது'' எனும் சுப்புலட்சுமிக்கு, அடுத்து காத்திருந்திருக்கிறது ஒரு ஸ்பீட் பிரேக்கர்.
''யூட்ரஸ் பிரச்னையால எனக்கு உடம்புக்கு சரியில்லாமப் போக, முன்ன மாதிரி வேலைகள் பார்க்க முடியாமப் போயிடுச்சு. என்னோட கைப் பக்குவமும், அவரோட கூட்டு உழைப்பும்தான் எங்க வெற்றிக்கு காரணங்கறதால, அவரால தனியா சமையலை கவனிக்க முடியாம, ரொம்பச் சிரமப்பட்டார். 'இனி இந்த பிஸினஸ் சரிப்பட்டு வராது'ங்கற நிலமை வந்தப்போ, 'டெய்லரிங் யூனிட் வைக்கலாம்'னு முடிவு பண்ணினோம். ஆனா, எங்க ரெண்டு பேருக்குமே தையல் தெரியாது'' என்ற சுப்புலட்சுமியை நாம் ஆச்சர்யமாகப் பார்த்தோம். கமலேஷ் பேசினார்...
''நான் ஒரு பஞ்சாபி லேடிகிட்ட டெய்லரிங் கத்துக்கிட்டேன். குஜராத், பாம்பேனு போய் வெரைட்டியா, சீப்பா மெட்டீரியல் வாங்கிட்டு வந்து தைக்க ஆரம்பிச்சேன். சுடிதார், பிளவுஸ்னு டிரெண்டியா, அளவு கச்சிதமா இருந்த அந்த ஆடைகளுக்கு பெண்கள்கிட்ட ரொம்பவே வரவேற்பு. கஸ்டமர்கள் குவிஞ்சாங்க. சுப்புலட்சுமி கடையையும் கஸ்டமர்களையும் பார்த்துக்கிட்டாங்க. நான் டெய்லரிங் யூனிட்டை கவனிச்சுட்டேன். நம்பிக்கை தர்ற மாதிரி வருமானம் வர, பேங்க்ல 5 லட்சம் லோன் வாங்கி, 5 டெய்லர்களை வெச்சு கடையை விரிவுபடுத்தினோம்.
என் மனைவி புதுப் புது ஐடியா சொல்ல, நானும் அதைக் கிரியேட்டிவ்வா தைச்சேன். இப்ப 1,500 ரெகுலர் கஸ்டமர்கள் இருக்காங்க எங்ககிட்ட!'' என்று சந்தோஷப்படும் கமலேஷின் மகன் தற்போது பி.டெக் படிக்க, மகள் எட்டாவது படிக்கிறார்.
''கீழ விழுந்தப்போவெல்லாம்... 'இதுவும் கடந்து போகும்'னு நாங்க எழுந்தது, அயராது உழைப்பு, நல்ல நட்புகள்ங்கற காரணங்களோட... ஒவ்வொரு முறையும் நான் சோர்ந்து போனா இவரும், இவர் துவண்டு போறப்போ நானும் ஆத்மார்த்த ஆறுதலா இருந்ததும் முக்கிய காரணம்!''
- தொழிலிலும் அவர்களை ஜெயிக்க வைத்திருக்கிறது சுப்புலட்சுமி சொன்ன இந்த இல்லற சூத்திரம்!
நன்றி : அவள் விகடன்
http://tamil-paarvai.blogspot.com
http://tamil-paarvai.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?