ஆதிவாசி கிராமமான வாச்சாத்தியில் 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அட்டூழிய செயலுக்கு இன்றுதான் தீர்ப்பு கிடைத்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்டது வாச்சாத்தி கிராமம். இங்கு வசிப்பவர்களில் பெரும்பான்மையினர் மலை ஜாதியினர் .
இந்த கிராம மக்கள் காட்டுப் பகுதியில் உள்ள சந்தன மரங்களை வெட்டி, கடத்தி விற்பனை செய்வதாக 1992ம் ஆண்டு வனத்துறை வழக்குப் பதிவு செய்தது.
இதையடுத்து அந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வனத்துறை 155 பேர், போலீசார் 108 பேர், வருவாய்த் துறையினர் 6 பேர் என மொத்தம் 269 பேர் ஆகியோர் அடங்கிய கூட்டு குழு இந்த கிராமத்தில் சோதனை நடத்தியது.
வாச்சாத்தி கிராமத்தில் இவர்கள் வீடு, வீடாக சோதனை நடத்தினர். பின்னர் ஏரிப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தனக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் மீது வழக்குப் பதிவு செய்து, 133 பேரை கைதும் செய்தனர்.
ஆனால், இந்த சோதனைகளின்போதும், சோதனைகளைத் தொடர்ந்து நடந்த கைது நடவடிக்கைகளின்போதும் ஜெயா, செல்வி, சித்ரா, காந்தி, அபரக்கா, பாப்பாத்தி, காந்தி, மாரிக்கண்ணு, லட்சுமாயி, கம்சலா, முத்துவேதி, பூங்கொடி, மல்லிகா, சுகுணா, பாப்பாத்தி, முத்துவேதி, தேன்மொழி, பழனியம்மாள் உள்ளிட்ட 18 மலை கிராம பெண்களை கூட்டு குழுவினர் கற்பழித்ததாக புகார் எழுந்தது.
விசாரிக்க மறுத்த போலீஸ்
இது தொடர்பாக கிராம மக்கள் கூட்டு குழுவினர் மீது, அரூர் போலீஸில் தந்த புகாரை போலீசார் பதிவு செய்ய மறுத்து விட்டனர்.
இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொது செயலாளர் சண்முகம் மற்றும் சமூக நல அமைப்புகள் வாச்சாத்தி கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டு குழுவினரால் மலைவாழ் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் மற்றும் பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டதாகவும் வீடுகள் சூறையாடப்பட்டதாகவும், இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உச்சநீதிமன்றம் கொடுத்த சூடு
இதைத் தொடர்ந்து வாச்சாத்தி கிராமத்தில் கூட்டு குழு விசாரணையின் போது நடந்த சம்பவங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1992ம் ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது.
இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய தென் மண்டல ஆணையர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தப்பட்டு, அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யுமாறு அரூர் போலீசாருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரே, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சிபிஐக்கு மாறிய வழக்கு
ஆனாலும் போலீசார் முறையாக இந்த விவகாரத்தை விசாரிக்காததால் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி 1993ம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் கூட்டுக்குழுவினரின் அட்டகாசங்கள் வெளியில் வந்தன. இதையடுத்து அந்தக் குழுவைச் சேர்ந்த 269 பேரையும் சிபிஐ கைது செய்தது. மேலும் கடந்த, 1996ம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி கோவை நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
2006ம் ஆண்டு இந்த வழக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. பின்னர், 2008ம் ஆண்டு பிப்ரவரி, 17ம் தேதி தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. பெரும் இழுத்தடிப்புக்குப் பின் இந்த வழக்கு நடந்து முடிந்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?