2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் இழைத்ததாக மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட 17 பேர் மீது புதிய குற்றச்சாட்டை சி.பி.ஐ. திங்கள்கிழமை பதிவு செய்தது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என்று சட்ட நிபுணர்கள் தெரிவித்தனர்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மோசடி, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக ஆ. ராசா, கனிமொழி, சரத்குமார் உள்பட 17 பேர் மீது சி.பி.ஐ. ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி. சைனி முன்பு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றப் பதிவுக்கு முன், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதங்களைத் தனித்தனியாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர். இது சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக நடைபெற்றது. இதற்குப் பின்னர் சி.பி.ஐ. தனது விளக்கத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து, சிறப்பு நீதிமன்றம் விரைவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய உள்ளது.
இந் நிலையில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராகப் பதவி வகித்த ஆ. ராசா, அவரது தனிச் செயலாளர் சண்டோலியா, மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் பெகுரா ஆகியோர் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்திருப்பதாகக் கூறி பிரிவு 409, சதித் திட்டம் தீட்டியதாக பிரிவு 120-ன் படி புதிய வழக்கை சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்ததாக கனிமொழி, சரத்குமார், பல்வா உள்ளிட்ட 14 பேரும் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடும் தண்டனை: ராசா மீது முன்னர் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை மட்டுமே தண்டனை கிடைக்கும். ஆனால், இப்போது சுமத்தப்பட்டிருக்கும் நம்பிக்கைத் துரோகம் தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராசா உள்ளிட்டோருக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை அல்லது அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள புதிய குற்றச்சாட்டு மனு மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் செப்டம்பர் 30-ல் பதில் மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனர். அதன் பின்னர் இது தொடர்பாக வாதம் நடைபெற உள்ளது.
குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படாதவரை குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று சி.பி.ஐ. எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. குற்றச்சாட்டுகள் பதிவில் காலதாமதம் ஏற்படும் என்று தெரிகிறது. இதனால் கனிமொழி உள்ளிட்டோருக்கு ஜாமீன் கிடைப்பதிலும் மேலும் காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
ப. சிதம்பரத்தை சாட்சியாகச் சேர்க்க கோரிக்கை: ஆ. ராசாவின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுசீல் குமார், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சாட்சியாகச் சேர்க்க வேண்டும் என்று வாதாடினார்.
2ஜி ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்றதாகக் கூறப்படும் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்கள் தாங்கள் பெற்ற 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆலோசனை வழங்கினார்.
அவரை நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அப்படியொரு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதா, அதில் அவர் ஆலோசனை கூறினாரா என்பது குறித்து நீதிமன்றம் கேட்டறிய வேண்டும். அவரைச் சாட்சியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று வழக்குரைஞர் சுசீல் குமார் கேட்டுக் கொண்டார்.
தூதுவரா?
பாஜகவில் இருந்து காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் திங்கள்கிழமை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்தார். மதியம் வரை நீதிமன்றத்தில் இருந்த அவர், ராசா, கனிமொழி ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இந்த வழக்கு நடைபெறும்போது சிறப்பு நீதிமன்றத்துக்கு வருவது இதுவே முதல்முறையாகும். சிதம்பரத்தின் ஆதரவாளராக திருநாவுக்கரசர் காங்கிரஸில் இணைந்தார். இப்போது சிதம்பரத்தையும் விசாரிக்க வேண்டும் என்று ராசா தரப்பு வலியுறுத்தி வருகிறது. இந் நிலையில் சிதம்பரத்தின் ஆதரவாளரான திருநாவுக்கரசர், ஆ. ராசா, கனிமொழியைச் சந்தித்துப் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
"6 மாதங்களாக ராசா, கனிமொழியை சந்திக்கவில்லை. அவர்களை சந்திப்பதற்காக மட்டுமே நீதிமன்றம் வந்தேன்" என்று செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
கனிமொழி விசாரணை முடிந்தது
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி, சரத்குமார் ஆகியோர் ஜாமீன் கேட்டு கடந்த 16-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு சி.பி.ஐ. திங்கள்கிழமை பதில் மனு தாக்கல் செய்தது.
அதில், கனிமொழி மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை முடிந்து விட்டது. குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் முன்பு ஜாமீன் வழங்கப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதை சி.பி.ஐ. சுட்டிக் காட்டியுள்ளது.
(di)
Filed under: Hot News Tagged: இந்திய அரசியல், இந்தியா, ஊழல், சமூக பிரச்சனைகள்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?