வரும் டிசம்பர் 12 -ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள். இந்த நாளை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாகக் கொண்டாட சென்னை மாவட்ட ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.
உடல்நிலை சீரடைந்து, புதுப்பிறவி எடுத்து வந்துள்ள ரஜினிக்கு, மிகப் பிரமாண்டமாக இந்த விழாவை எடுப்பதற்கான ஏற்பாடுகளில் சென்னை மாவட்ட ரஜினி மன்றத் தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் இறங்கியுள்ளனர்.
டிசம்பர் 12-ம் தேதி ரசிகர்கள் அந்தத்தப் பகுதியில் எளிமையாக ரஜினி பிறந்த நாளைக் கொண்டாடுவதென்றும், அதற்கடுத்த நாள் டிசம்பர் 13-ல் வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பங்குபெறும் பெரிய நலத்திட்ட விழாவாக நடத்துவதென்றும் ரஜினி மன்றங்கள் முடிவு செய்துள்ளன.
இந்த விழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கவிருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதி ரசிகர் மன்றமும், தங்கள் பெயரிலேயே இந்த உதவிகளை வள்ளுவர் கோட்டத்தில் வைத்து வழங்கலாம்.
ரஜினிக்கும் அழைப்பு
ரஜினி சிங்கப்பூரிலிருந்து திரும்பிய பிறகு, ரசிகர்களைச் சந்திக்க திட்டமிட்டிருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியிருந்தனர். ஆனால் போயஸ் தோட்ட இல்லத்தின் பணிகள் மற்றும் ரஜினியின் ஓய்வு கருதி இதுவரை அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
எனவே, ரஜினி ரசிகர்களை அழைத்துச் சந்திப்பதைவிட, ரசிகர்கள் ஒன்று திரளவிருக்கும் அவரது பிறந்த நாள் விழாவுக்கே வருகை தந்து அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டால், ரசிகர்களின் மனக்குறை தீரும் என்ற நோக்கத்தில், ரஜினியையே விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளனர்.
ஏற்கெனவே இதுகுறித்து லதா ரஜினியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அழைப்பாக இல்லாமல் ஒரு கோரிக்கையாக ரஜினியின் முன் வைத்துள்ளனர்.
ஒருவேளை இந்த விழாவுக்கு ரஜினி வரவில்லை என்றால், அவர் ரசிகர்களுக்கு விடுக்கும் பிறந்த நாள் செய்தியை வீடியோவாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட ரஜினி மன்ற தலைவர் என் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் ஆர் சூர்யா, கே ரவி, சைதை ரவி உள்ளிட்டோர் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?