கிட்டத்தட்ட நாடெங்கும் ஏதேனும் ஒரு போராட்டம் தீவிரமாய் பற்றி எரியும் சூழ்நிலைதான் இப்போது இருக்கிறது.
அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தும், மரண தண்டனைக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில் "வலிமையான லோக்பால்" கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் அன்னாவின் உண்ணாவிரதம் இன்று காலை பத்து மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது. (ஏம்பா காங்கிரஸ் கனவான்களே... ஊழலுக்கு எதிரான போராடும் அன்னாவிடம் ,பிரதமரின் தூதராக அனுப்ப உங்களுக்கு ஆதர்ஷ் ஊழலில் சிக்கிய விலாஸ்ராவ் தேஷ்முக் தான் கிடைத்தாரா?)
இந்த இரண்டு பிரச்சனைகளிலும், வேறுபட்ட மனநிலையை தமிழக மக்கள் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வடநாடு முழுமைக்கும் பெரும்பான்மையான ஆதரவு கிடைத்திருக்க, தமிழகத்தைப் பொறுத்த வரை, அன்னா ஹசாரேக்கு பின் "காவி" வண்ணம் இருக்குமோ? என்ற எண்ணம் பெரும்பானவர்களை முழுமனதுடன் அதரவு தருவதை பின்னுக்கு தள்ளுவதாகவே இருந்தது.
இந்த தேசத்தில், ஊழல் என்பது வேரடி மண்ணாக மாறிவிட்ட நிலையில், அண்ணா ஹசாரே செய்திருப்பது ஒரு நல்ல முன் முயற்சி. பாராட்டிற்குரியது. அதிகம் ஈர்ப்பு இல்லாத 74 வயது முதியவர், தேசத்தின் இளைஞர்கள் தெருவில் வந்து போராட வைத்திருப்பது இந்த தேசத்திற்க்கு நல்ல செய்தி தான்.
ஆனால் இந்த முயற்சிகள், எந்த அளவுக்கு அரசியல் தலைவர்களின் சித்து விளையாட்டினை தாண்டி, எந்த அளவுக்கு "இறுதி வெற்றி" பெறும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளதை மறுக்கமுடியாது.
அன்னாவின் கோரிக்கை வெற்றிக்களிப்பை நோக்கி சென்றுக்கொண்டிருக்க.., தமிழர்கள் என்னும் வகையில், நமக்கு இன்னும் பேரறிவாளன் பிரச்சனை மிச்சமிருக்கிறது.
பெரும்பாலான பதிவர்கள் இந்த இரண்டு விஷயங்களை பற்றி, உறுதியான நிலைப்பாட்டுடன், கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.
பொதுவாக சாமானிய தமிழர்களிடம், மரண தண்டனை பற்றி குழப்பமான மனநிலையே இன்னும் இருக்கிறது.
பேரறிவாளன் உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை தடுக்கப்பட வேண்டும் என்று என்னும் "தமிழன்" என்னும் மனநிலை.., நாடு விட்டு நாடு வந்து, ஒரு பாவமும் அறியாத நம் கொன்று குவித்து, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்பை மன்னித்து விட்டு விட தயங்குகிறது. (இங்கே இந்தியன் என்னும் மனநிலை தடுக்கிறது)
நான் இந்தியனா, தமிழனா என்று கேள்வியோடு, அடையாளக்குழப்பம் எழும்போதெல்லாம் , நான் தமிழன் என்று சொல்லவே உள்மனதிலிருந்து தீர்ப்பாகிறது. இது சரியா என்று தெரியவில்லை.
அப்சல் குரு மற்றும் கசாப் ஆகியோரை இணைத்து குழம்பிக்கொண்டிருந்த நானும் கூட, மரண தண்டனைக்கு எதிரான மனநிலைக்கு வந்து விட்டேன்.
மனிதம் என்ற கணக்கில் இனி தூக்கு தண்டனை என்பதே இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற நிலைப்பாடு தான் சரி எனத்தோன்றுகிறது. (என்னது ராஜபக்சே-வா? அது எந்த வகை ஜீவராசி என்று தெரியவில்லையே?)
தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள், சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை நிறைவேற்றக்கூடாது என்று போராட்ட களத்தில் குதித்துள்ளனர். கல்லூரி மாணவர்கள் போராட்டம் அடுத்தடுத்த நாள்களும் கட்டாயம் தொடரும் என்றே தெரிகிறது.
தமிழக முதல்வர் நினைத்தால், சட்டமன்றத்தில் இந்த மூவரின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க முடியும் என்று வரலாற்று ஆதாரங்களையும், சட்ட விதிகளையும் சுட்டிக்காட்டி சன் டிவி.., ஜெயலலிதாவுக்கு "செக்" வைத்திருக்கிறது. இன்னும் எந்த விதமான சமிக்கையும் தமிழக அரசிடமிருந்து இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர்கள் பிரச்சனை, தமிழக மீனவர்கள் அடிக்கடி இலங்கை மீனவர்களால் தாக்கப்படுதல் அகிய தமிழர்நலன் சார்ந்த விஷயங்களில் உறுதியான நிலைப்பாடுகளை எடுத்த தமிழக முதல்வருக்கு, பேரறிவாளன் விஷயத்தில் ஏன் முடிவெடுக்க, அதிக தேவைப்படுகிறது என்று தெரியவில்லை.
உண்ணா ஹசாரேவின் போராட்டம் முடிவுற்ற நிலையில், பேரறிவாளன் மற்றும் மூவரை மரண தண்டனையிலிருந்து மீட்க, தமிழர்கள் தங்கள் முழுகவனத்தை செலுத்த வேண்டும் என்பதே எம் எதிர்பார்ப்பு.
http://tamilsmsgalatta.blogspot.com
http://tamilsmsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?