இது கூத்தாடும் நேரம்...
வா கூத்தடிப்போம் என்று
கூவி அழைக்கும் நண்பா...
உன்னை பிடித்திருக்கும் அளவுக்கு
உன் அழைப்பு எனக்கு பிடித்திருக்கவில்லை
என்பதை ஏன் உணர மறுக்கிறாய்?
நான் ஒன்றும் புத்தன் இல்லை என்றாலும்,
ஒரே மணித்துளியில்
சித்தார்த்தனின் மரணமும்,
புத்தனின் பிறப்பும் நிகழ்ந்ததை
போல..,
ஒரே கணத்தில் மரணித்து,
அதே கணத்தில் புதிதாய் பிறந்தவன் நான்..
அதுவும் அதிக முறை.
ஒரு பக்கம் அன்பென்ற சிவத்தையும்,
மறு பக்கம் அது இல்லா சவத்தையும்
தாய் தந்தையென
ஒரே வீட்டில்
பார்த்து பார்த்து வளர்ந்த
துயர சுகங்கள்
போல
ஏராளம்
என்னுள் இருக்கிறது.
சின்னதொரு சந்தோஷம்
மூளைக்கு
சென்று சேரும் முன்
இதயம் கிழிபடும்
கள்ளிக்காட்டு சருகு நான்..
பீட்ஸா, பர்கர், பீர் , ரம் என்று
"பார் இது தான் என் உலகம்" என
நீ காட்டும் உலகிற்கும்
எனக்கும் வெகுதூரம்..
எதுவும் தப்பில்லை என்ற
இன்றைய யுகத்தில்,
குடித்தால் மட்டுமே ஆண்பிள்ளை
என்றால்
நான் "அப்படியே" இருந்து விட்டு போகிறேன்...
ஆனால் நட்பென்பது
தன் "தீயப்பழக்கத்தின்
நிழல்" கூட நண்பன் மீது விழாமல்
பார்த்து கொள்வதில் தான்
பூர்ணமடைகிறது
என்பதை உணர்ந்து கொள்...
டிஸ்கி:
தன்னை குடிக்க அழைத்த நண்பனை பற்றிய ஒரு பதிவினை படிக்க நேர்ந்தது. அதன் தாக்கமே இந்த பதிவு...
Pokkiris என்னும் பதிவரின்..., அந்த பதிவிலிருந்த வரிகள் உங்களுக்காக...
"ஆம்பளைனா குடிக்கனும்ல?" என்றான். அது அவனின் லாஜிக். அவனுக்கு தெரியுமா, நான் என் தாயை இழந்தது, இக்குடியினால், எனது இளமை பருவம் பெரும்பாலும் குடிக்கு எதிரான போராட்டத்தால் கழிந்தது என்றும், வாந்தியின் நாற்றத்தை வைத்து ஹாட்டா, ரம்மா, ஸ்காட்சா, பீரா என்று என்னால் சொல்லமுடியும் என்று (இதுவரை வைராக்கியத்தால் முகர்ந்துகூட பார்த்திராதவன்).
ஆம். எனது தந்தை ஒரு குடிகாரன். அவர் படித்த காலத்தில், எல்லையில் வெற்றி பெற்றுவிட்டு, நான் கணக்கில் 91/100 வாங்கியதால், தண்ணி அடித்துவிட்டு மப்பில் அடித்ததை என்னால் இன்றும் ஜீரணம் செய்யமுடியவில்லை. சாதாரண நிலையில் அடித்திருந்தால் ஒப்பு கொண்டிருப்பேன்.
வாழ்க்கையை வாழத்தெரியாமல், துணையை தொலைத்து இன்றளவில் அவர் படும் வேதனை, சொல்லில் அடங்காது. பளீரென ஒளிர்ந்த கண்ணாடி பாத்திரத்தை உடைத்த பெருமைக்கு சொந்தக்காரர். தன் மனைவியின் பிறந்தநாள் சத்தியத்தை மீறியவர். சத்தியத்தை மீறிய வேகத்தில் மனைவி உடலில் ஊற்றிய மண்ணென்னையை சட்டை செய்யவில்லை போதையில். கணவனை மிரட்ட நினைத்த பேதைக்கு தெரியவில்லை, கட்டுக்கடங்கா தீ விழுங்கிவிடும் என்று. ஒரு நொடி தாமதத்தில் அக்னி ஜுவாலை இரண்டு ஆள் மட்டத்திற்கு. பூனை வாயில் மாட்டிய எலி போல அவள், மெல்ல தீக்கிரையாகிறாள்.
நான் அவளை சந்தித்தது ஆஸ்பத்திரியில் 100% தீக்காயங்களுடன். எனது தாயை கண்டுபிடிக்க என்னால் இயலவில்லை. இதனை எழுதும்போது கண்களில் நீர் கோர்க்கிறது நண்பர்களே.
இரண்டு நாள் இருந்த உயிர், ஒரு நாள் அதிகாலையில் பிரிந்தது. அவள் இறப்பதற்கு முன் கூறியனவற்றில் முக்கியமானவை தந்தையை மன்னிக்க வேண்டும், இளவலை அடிக்கக்கூடாது. மிகவும் முக்கியமானது நான் பட்ட இத்துயரத்தை உனது மனைவிக்கு கொடுத்துவிடாதே, தயவுசெய்து குடித்துவிடாதே. குடி குடியை, மகிழ்ச்சியை, குடித்தனத்தை கெடுத்தது நண்பர்களே.
இப்போது கூறுங்கள் நான் குடித்து ஆண்மகனென்று நிரூபிக்க வேண்டுமா?
விடுமுறையானால் குடிப்பதைப் பற்றி பெருமையடிக்கும் கீச்சர்களுக்கு, சக கீச்சரின் வாழ்வில் நிகழ்ந்த துயரம் என்ற வரிகளோடு.., இந்த பதிவினை பற்றிய இணைப்பினை நல்கிய
@karaiyaan அவர்களுக்கு நன்றிகள்..
http://tamilsmsgalatta.blogspot.com
http://tamilsmsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?