அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஜெயலலிதா கட்சித் தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ளார்.
''தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழ்ந்து காட்டியவர் பேரறிஞர் அண்ணா. சரித்திரம் படிப்பவர்களுக்கு மத்தியில் சரித்திரம் படைத்துக் காட்டிய சாதனையாளர்.
மிகச் சிறந்த இலக்கியவாதி, புகழ்மிக்க பேச்சாளர், தன்னலம் கருதா மனித நேயர், ஏழைகளின் பிரதிநிதி பேரறிஞர் அண்ணா அவர்களின் 103வது பிறந்த நாள் நமக்கெல்லாம் ஒரு பொன்னாள். இந்த நன்னாளில் அவரவர் தமக்கு விருப்பமான முறையில் பேரறிஞர் அண்ணாவுக்கு தங்களது அன்பினையும், நன்றியினையும் காணிக்கையாக்குகின்றனர். பேரறிஞர் அண்ணா தமிழ் மொழிக்காக, தமிழ் மண்ணிற்காக, தமிழ் மக்களுக்காக ஆற்றிய சாதனைகளை, எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மக்கள் மனதில் பதியும் வண்ணம் ஆழமான கருத்துகளைத் தந்து, தூங்கிக் கிடந்த மக்களை தட்டி எழுப்பியவர் பேரறிஞர் அண்ணா. இவரின் கருத்துகள் அனைவரையும் வசீகரிக்கும் விதமாகவும், வாழ்வில் வளம் சேர்க்கும் விதமாகவும் அமைந்தன.
தன்னுடைய பேச்சாற்றலின் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த பேரறிஞர் அண்ணாவுடைய பேச்சில், மெல்லிய பூங்காற்று போன்ற இனிய நடையுண்டு; ஆற்றொழுக்கு போன்ற அழகிய நடையுண்டு; கோடையிடி போன்ற ஓசையுண்டு; கொண்டல் என பொழியும் சொல்மாரி உண்டு; ஆழம் மிக்க கருத்துகள் உண்டு. இலக்கிய தமிழும், அடுக்கு நடையும், எதுகை, மோனை நயங்களும் அவரது பேச்சில் துள்ளி விளையாடும். பேரறிஞர் அண்ணாவின் கவிதைகள் கற்பவரின் நெஞ்சை கவர்பவையாக இருந்தன.
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கு ஏற்ப, தன்னுடைய நாவன்மையால் நாட்டு மக்களை, தமிழ்நாட்டு மக்களை தன் வசப்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா.
சுயமாக சிந்திக்கச் சொல்லி, பயனற்ற பழமைகளைச் சாடி, லட்சிய தீபத்தை ஏற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை தன்னுடைய சிந்தனை மிகுந்த, கம்பீரமான பேச்சுக்களின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பரப்பி, தமிழக மக்கள் நெஞ்சில் நிரந்தர இடம் பிடித்தவர் பேரறிஞர் அண்ணா.
நலிந்து, மெலிந்து, சோர்ந்து, குழைந்துபோன பரிதாபத்திற்குரிய தமிழ்ச் சமுதாயம் இளைப்பாறிக் களைப்பாற, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியை உருவாக்கி, அந்தக் கட்சியை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.
தன்னுடைய நேர்மை திறத்தாலும், நெஞ்சுறுதியாலும், கொள்கை உரத்தாலும் தென்னாட்டு காந்தி எனும் சிறப்பினைப் பெற்று, தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்டிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.
தமிழ்நாடு என்று பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கைச் சட்டம், சுயமரியாதை திருமணச் சட்டம், உலகத் தமிழ் மாநாடு என குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா. எந்தச் சூழ்நிலையிலும், தமிழ் நாட்டிற்காக, தமிழக மக்களுக்காக, தமிழ் மொழிக்காக தனது உரிமைக் குரலை ஓங்கி ஒலிக்கவும், தமிழர்களின் தனித் தன்மையை நிலைநாட்டவும் பேரறிஞர் அண்ணா தவறியதே இல்லை.
"தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல், யாருக்கும் எசமானனாக இல்லாமல், உலகில் எவர்க்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும்' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
தமிழினப் பாதுகாவலராக விளங்கியதோடு மட்டுமல்லாமல் தமிழினத்தை தலை நிமிரச் செய்தவர் பேரறிஞர் அண்ணா.''
http://galattasms.blogspot.com
http://galattasms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?