தமிழ் மக்கள் கேட்பது, தனி இனமாக எங்களது கலாசார, பண்பாடுகளுடன் மொழியையும் பாதுகாத்து வாழவிடுங்கள் என்பதேயாகும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப் பிரதிநிதிகள் அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக்கிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் நாம் எங்களது மக்களின் உரிமைக்காக அவர்களின் நலன்களுக்காக எதுவும் செய்ய முடியாமல் வாய் திறக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். ஜனநாயக ரீதியில் இங்கு எவரும் பேசமுடியாத நிலையே உள்ளது.
யாழ். மாவட்டத்துக்கு நேற்று விஜயம் செய்த பிளேக் மதியமளவில் அரச சார்பற்ற இணையங்களின் அலுவலகத்துக்கு விஜயம் செய்தார். அதன்போதே இன்றைய யாழ்ப்பாணத்தின் நிலைமை தமிழர்களின் நிலை குறித்து அவரிடம் எடுத்துக் கூறப்பட்டது.
அங்கு மேலும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் வருமாறு:
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையை இலங்கை அரசு செயற்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளைஞர்கள் பலர் இங்கு வேலைவாய்ப்புகள் இன்றி இருக்கின்றார்கள். அவர்களுக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் மற்றும் மீளக்குடியமர்ந்த மக்கள் உரிய வசதி வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
தற்போது யாழ். குடாநாட்டில் கிறீஸ் பூதம் என்ற அச்ச நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்தாலும் மக்களை உள ரீதியாக அச்சுறுத்தவே இவ்வாறான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாங்கள் இங்கிருந்து அரசியல் ரீதியாக எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். அத்துடன் எமது மக்களின் உரிமைக்காக எங்களால் எதுவும் செய்ய முடியாத துர்பாக்கிய நிலை இங்குள்ளது.
தமிழ் மக்கள் கேட்பது தனி இனமாக எங்களது கலாசார, பண்பாடுகளுடன் மொழியையும் பாதுகாத்து வாழ விடுங்கள் என்பதேயாகும்.
இந்த விடயங்கள் குறித்து பிளேக்கிடம் விரிவாக எடுத்துக் கூறப்பட்டன.
இதற்குப் பதிலளித்த பிளேக் தான் இங்குள்ள மக்களிடம் சில கருத்துக்களை கேட்டறிந்ததாகவும் நீங்கள் கூறிய கருத்துக்களை கவனத்தில் எடுப்பதுடன் உரிய மட்டங்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
http://galattasms.blogspot.com
http://galattasms.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?