Wednesday, 21 September 2011

ரயில் பயணங்களில�� - ஆபாயில் (அப்படியே சாப்பிடுங்க)



நான் சென்னை வந்த சில காலங்களுக்கு சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வர, தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகத்தையே பயன்படுத்தினேன்.

பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே அமையும் என் பேருந்து பயணங்கள் மிகவும் கொடுமையானது. ரூ 100 -க்குள்ளே தான் சாதாரண பஸ் டிக்கெட் விலை இருக்கும்.

பஸ்ஸில் போடப் படும் மொக்கை படங்களின் இம்சையை மீறி தூக்கம் வரும் போது, முன் சீட்டில் உள்ள கம்பி மீதோ அல்லது ஜன்னல் கம்பி மீதோ தலை வைத்து படுப்பேன். பஸ் குலுங்க குலுங்க கம்பியில் பட்டு அடுத்த நாள் காலையில் தொட்டு பார்க்கும் போது, என் தலை பஸ்சின் ஹாரனை போல வீங்கி காணப்படும். அந்த வீக்கம் குறைய மறுநாள் ஆகும்.




ரு முறை நண்பர்களோடு ரயிலில் ரிசர்வ் செய்து போன பிறகு, ரயில் பயணங்கள் அலாதியான சந்தோசத்தை எனக்கு தந்தன. பேருந்தை போல அதிகம் குலுங்காமல், தலை முதல் கால் வரை போர்த்தி கொண்டு படுத்து செல்வது சுகம்.

இது தவிர, அழகழகான பெண்கள் நமக்கு எதிரிலேயே படுத்து கொண்டு வருவதை பார்க்கின்ற சந்தர்ப்பம் ரயிலில் மட்டுமே கிடைக்க கூடியது. பெண்களின் உடையை போலவே, அவர்கள் போர்த்தும் போர்வையும் அழகான டிசைனில் கலர்புல்லாக இருக்கும். ஆனால் நம் (ஆண்களின்) போர்வை, நம் சட்டையின் டிசைனை போல வெகு சாதாரணமாக இருக்கும்.

முன்பு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நான், மாதத்திற்கு இரு முறை வீட்டிற்கு ரயிலில் புக் செய்து செல்வது, என் அம்மா அப்பாவிற்கு மட்டுமல்ல எங்கள் வீட்டு நாய் குட்டிக்கும் புதிதாகவே தென்பட்டது.

வீட்டிற்கு செல்லும் அந்த வெள்ளிக்கிழமை இரவு, எனக்கு விடிந்த காலைப் பொழுதாகவே தோன்றும். ரயில் வந்து நின்று, வெளியே பெயர் வரிசை ஒட்டியவுடனே ஓடி சென்று நம் பெர்த்துக்கு அருகில் எத்தனை பெண்கள் பெயர் வருகிறது என்று பார்த்து விடுவேன்.

எந்த பெண்ணும் வராத நாட்களில், இந்த ஆண்கள் முகத்தை பார்ப்பதை வெறுத்து, குப்புறப் படுத்து தூங்கி விடுவேன். என் ராசிக்கு என் பெர்த் பக்கத்தில் ஒரு பெண்ணுக்கு மேல் வருவதே அரிது.

அரிது அரிது பெண் வருவதே அரிது 
சுமாரான பிகராய் இருத்தல் அதனினும் அரிது. 

அப்படியிருக்க ஒரு வெள்ளிகிழமை, பெயர் வரிசையை பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி. வரிசையாய் நாலு பெண்களின் பெயர்.

கிருத்திகா 
அர்ச்சனா 
கயல்விழி 
பிரியதர்ஷினி 

ஆஹா! என் கண்களுக்கு அந்த எழுத்துக்கள் தங்க நிறத்தில் தக தகவென மின்னியது போல இருந்தது. சந்தோஷத்தில் இதயத்தில் லேசாய் ஒரு வலி. நான் சென்று என் சீட்டில் உட்கார்ந்து காத்திருந்தேன் அவர்களின் வருகைக்காக.

"எப்படியோ இன்று ஒரு பெண்ணிடமாவது பேசிடலாம்" என்று மனசுக்குள் கிளி பறந்தது. ரயில் கிளம்ப ஐந்து நிமிடம் தான் இருந்தது. ஒரு வித பரபரப்பு என்னுடன் ஒட்டி கொண்டது. கடைசியாய், ரயில் புறப்படும் சில நிமிடங்கள் முன்பு அவசர அவசரமாய் வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.

அவர்களை கண்டவுடன் என் கனவெல்லாம் விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டிகள் போல தண்டவாளத்தை விட்டு புரண்டு விழுந்தது.

வந்த அத்தனையும் ஐயர் வீட்டு கிழவிகள்.

அப்போது எனக்குள் அதிதீவிரமாய் சொல்லிக் கொண்டேன். இனி பெயர் பார்க்கும் போது, வயதையும் சேர்த்து பார்க்க வேண்டும். அப்போதிலிருந்து வயதை பார்த்த பின்னே பெயரைப் பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன்.



டவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று நம்மில் நிறைய பேருக்கு ஒரு குழப்பம் இருக்கலாம். எனக்கு அதை அறிய விருப்பம் இல்லை. ஆனால் நானாய் விரும்பி கோவில் பக்கம் செல்வதில்லை.

போன வாரம், எனக்கு ஜாதகத்தில் சனிபெயர்ச்சி நடக்கிறதென்று என் அப்பா, நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு கூட்டி சென்றார். ஆஞ்சநேயருக்கு வடமாலை (வடைமாலை) சாத்தி வழிபட்டால் நல்ல பரிகாரமாய் அமையும் என்பது மக்களின் நம்பிக்கை.

ஆஞ்சநேயர் சிலைக்கு வடையை கோர்த்து, நிறைய மாலைகளாய் செய்து போட்டிருந்தார்கள். புரட்டாசி மாதம் முதல் நாள் என்பதால் நல்ல கூட்டம் அலைமோதியது. நாங்களும் குடும்பத்தோடு கூட்டத்தை முட்டி உள்ளே சென்று, ஆஞ்சநேயரை வழிபட்டு விட்டு வெளியே வந்தோம்.

வெளியே எங்களைப் பார்த்து,

"சாமி", "நாராயணா" என்று கையேந்திய பிச்சைகாரர்களின் குரல்கள்.

அவர்கள் சிம்பாளிக்காக சொல்ல வருவது என்னவென்றால்,

"நீங்கள் தான் கடவுள். உங்கள் மனம் தான் கோவில்" 

இது நம்மில் நிறைய பேருக்கு புரிவதில்லை.

அலங்காரம், பூஜை எல்லாம் முடிந்தவுடன் அந்த வடைமாலையை பிரித்து, நமக்கே அந்த வடைகளை எல்லாம் கொடுத்து விடுகிறார்கள்.

கடவுள் உண்மையாக அந்த இடத்தில் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார்?

"வடை போச்சே!"

அந்த வடையை தொட்டால் பாறாங்கல்லை தொட்ட உணர்வு. பெவிகால் கலந்து சுட்டிருப்பார்கள் போல. ஒருவேளை நன்றாக மணமாய் சாப்பிடுகிற மாதிரி சுட்டு, மாலையாய் சாமிக்கு போட்டிருந்தால், பக்தர்களுக்கு எல்லாம் பக்தியுணர்வை விட பசியுணர்வே அதிகம் உண்டாகியிருக்கும்.

என் அப்பா என்னிடம் நூறு ரூபாய் கொடுத்து உண்டியலில் போட சொன்னார் . தேங்கா, பழம், வடையை போல, இதுவும் சாமிக்கு போகாது என்று தெரியும். அதனால் எனக்கு அந்த நூறு ரூபாயை உண்டியலுக்குள் போடுவதற்கு சுத்தமாய் மனம் வரவில்லை. என் அப்பா கூடவே இருந்ததால், போடாமல் இருக்கவும் முடியவில்லை. ரோட்டில் போட்டு விட்டு போவதை போன்ற ஒரு உணர்வுடனேயே உண்டியலில் போட்டேன்.

கோவிலின் உள்ளே கூட்டத்தில் சாமியை பார்ப்பதற்கு பயங்கர தள்ளு முள்ளு நடந்து கொண்டிருந்தது. அதில் ஒருவர் தன் குழந்தையை தோளில் தூக்கி வைத்து சாமியை காட்டி கொண்டிருக்க, பின்னால் இருந்து ஒருவர் 

"ஏய்! குழந்தையை கீழே இறக்கி விடுயா! நாங்கெல்லாம் எப்படி சாமிய பாக்கிறது?" 

என்று சண்டை போட்டு கொண்டிருந்தார். 

குழந்தையும் தெய்வமும் வேறு வேறோ?

 


http://newsmalar.blogspot.com



  • http://newsmalar.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger