பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை ராயப்பேட்டையில் மரண தண்டனைக்கு எதிரான பயணக் தொடக்கம் மற்றும் பொதுக்கூட்டம் என்ற பெயரில் நடந்த கூட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் செ.துரைசாமி, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தீரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு,
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி பெரியார் திராவிடர் கழகம் சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட ஊர்தி பிரச்சார பயண துவக்க விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இரண்டே இரண்டு செய்திகளை சொல்ல வேண்டும் என்பதால் தான், இங்கே வந்திருக்கிறேன். ஒன்று பாராட்டு, இன்னொன்று எச்சரிக்கை. தமிழகம் முழுவதும் மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழர்கள் கிளர்ந்து எழுந்தபோது, செங்கொடி தீக்கரையானபோதும், மக்களுடைய போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருந்த போது, புற அழுத்தங்கள் கிளம்ப கிளம்ப மக்கள் வீதியில் வந்து போராடிக்கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் நீதிமன்றத்தில் ஒரு போராட்டம் நடத்தியே ஆக வேண்டும் என்று நீதிமன்றத்தின் வாயிலாக இந்த தூக்கு தண்டனையை எட்டு வார காலத்திற்கு தடை வாங்கித் தந்த மரியாதைக்குரிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இந்த கூட்டத்தின் வாயிலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டியே ஆக வேண்டும்.
ஏனென்றால், புற அழுத்தங்களால் அந்த போராட்டங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், தமிழகம் முழுவதும் தெரிந்த ஒரு செய்தி, தோழர்கள் வடிவம்பாள், அங்கையர்கன்னி, சுஜாதா போன்றவர்கள் அன்றைக்கு உண்ணாவிரதம் இருந்தார்கள். நமக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி, எட்டு வார காலத்திற்கு தடை என்பது தான். அதற்கு முழு முதற் காரணம் 'வைகோ'வைத்தான் சேரும். ஆகையால்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பாராட்டுகிறோம் என்று சொன்னேன்.
மூன்று பேரின் தூக்கு தண்டனை தொடர்பாக பல்வேறு போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும், ஒரே ஒரு எச்சரிக்கையை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். இன்றைக்கு டக்ளஸ் தேவானந்தாவை ஒப்படைக்க முடியாது அல்லது கைது செய்ய முடியாது என்று உயர்நீதிமன்றத்துக்கு மத்திய அரசு ஒரு கருத்தை சொல்லியிருக்கிறது. அதாவது இலங்கை அரசுடன் நாங்கள் பகைக்கொள்ள முடியாது. ஆகவே நாங்கள் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது. அந்த திருநாவுக்கரசு கொலை மீது எங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மூவரின் தூக்கு தண்டனைக்காக காங்கிரஸ்காரர்கள் இங்கே போராடுகிறார்கள். ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட சிறைக்குள் புகுந்து அவர்களை கொன்றிருக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். வீரம் உள்ள தமிழர்கள் கூட்டம் இன்றைக்கு வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், செவிடன் காதில் விழுந்த சங்காக, எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போல, காங்கிரஸ் அரசு இந்த மத்திய அரசு, தொடர்ந்து அப்படியே காத்துக்கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக தமிழர்களுடைய குரல்களையும், உணர்வுகளையும் புறக்கணித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய உயிர், உயிர்கள் மட்டுமல்ல அது தமிழர்களின் இறையாண்மை. தமிழர்களின் இறையாண்மையை இந்திய அரசு காவு கொடுக்க நினைத்தால், தமிழர்கள் இந்திய இறையாண்மையையும் காவு கொடுக்க தயாராக இருப்பார்கள். தமிழ்நாடை புறக்கணிக்க நினைத்தால், நாங்கள் இந்தியாவை புறக்கணிக்க தயங்க மாட்டோம் என்றார்.
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?