தமிழ்நாடு அரசு கேபிள் டி.வியில் விஜய் டிவி போன்றவை சேர்க்கப்பட்டாலும் பெரும்பான்மையான மக்களால் பார்க்கப்படும் சன் டிவி, ராஜ் டிவி சேனல்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
இந்த சேனல்கள் எப்போது சேர்க்கப்படும் என்பதில் தமிழக அரசிடம் உரிய பதிலும் இல்லை.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம், சென்னை தவிர்த்த, 31 மாவட்டங்களிலும் 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்த சேவையை கடந்த 2ம் தேதி தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
ஆனால், இதில் மக்கள் விரும்பிப் பார்க்கும் பொழுதுபோக்கு, விளையாட்டு, செய்தி, குழந்தைகளுக்கான சேனல்கள் இல்லாததால் அரசு கேபிள் டிவி பெரும் தோல்வியடையும் நிலை நிலவுகிறது.
இதையடுத்து பிரபலமான கட்டணச் சேனல்களையும் பெற்று இதில் ஒளிபரபப்ப குழு அமைக்கப்பட்டது. இதில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், தமிழக அரசின் நிதித்துறைச் செயலாளர் (செலவினங்கள்), தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்தக் குழு கட்டணச் சேனல்களின் நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து விஜய் டி.வி. உள்பட ஸ்டார் குழுமத்தின் அனைத்துச் சேனல்களும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
மேலும் ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏ.எக்ஸ்.என், எச்.பீ.ஓ, நேஷனல் ஜியோகிராபிக், என்.டி.டி.வி., சி.என்.என்-ஐபிஎன், டைம்ஸ் நௌவ், ஈ.எஸ்.பி.என், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்டச் சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால், பெரும்பாலான மக்கள் பார்க்கும் சன் டிவி சேனல்களும், ராஜ் டிவி சேனல்களும் இதில் இன்னும் இடம் பெறவில்லை. இவை எப்போது அரசு கேபிளில் சேர்க்கப்படும் என்பதற்கும் அரசிடம் சரியான பதிலில்லை.
இந்தச் சேனல்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மட்டும் அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?