Monday, 15 August 2011

ஜெயலலிதா கைது பட���மும்-சசிகலாவின் வலிப்பு நாடகமும���..!




13-08-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மீண்டும் காப்பி பேஸ்ட்டா என்று அயர்ச்சியடையாதீர்கள்..! இன்றைய இணையத்தள வரலாற்றில் எவையெல்லாம் அவசியம் பதிந்து வைக்கப்பட வேண்டுமோ அவைகள் இன்னமும் சரிவரச் செய்யப்படவில்லை என்றே கருதுகிறேன்.

ஒரு மாதத்திற்கு முன்பாக ஜெயலலிதா கைது செய்யப்பட்ட தேதியை தெரிந்து கொள்வதற்காக இணையத்தில் துழாவியபோது பெரும் ஏமாற்றமே கிடைத்தது..! தமிழில் 'ஜெயலலிதா கைது', 'கைது செய்யப்பட்டார்' என்றெல்லாம்  வேறு விதமாகவெல்லாம் தட்டச்சு செய்தும் கூகிளாண்டார் உண்மைத் தேதியை கண்ணில் காட்டவில்லை.

ஆனால் ஆங்கிலத்தில் 'Jayalalitha Arrested' என்று தட்டச்சு செய்தவுடன் வந்து கொட்டியது தகவல்கள்...! ஆங்கில பத்திரிகைககள்கூட பல தகவல்களை இணையத்தில் சேகரித்து வைத்திருக்கும்போது தமிழ்ப் பத்திரிகைகள் ஏன் இப்படி கஞ்சத்தனம் செய்கின்றன என்று தெரியவில்லை..!

நல்லவேளையாக சென்ற 4 இதழ்களுக்கு முன்பாக ஜூனியர்விகடனில் ஜெயலலிதா கைது பற்றிய பழைய செய்தியை, மீண்டும் பதிவு செய்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டார்கள். வாழ்க விகடனார்கள்..!

இந்தச் செய்தியைப் பதிவு செய்வதற்காகவும் கூடுதலாக சில தகவல்களைச் சொல்வதற்காகவுமே இந்தப் பதிவு..!

இனி ஜூனியர்விகடன்

தமிழக வரலாற்றில் முதல் முறையாக ஊழல் குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்​பட்ட முதல் - முன்னாள் முதல்வர் இவர்தான்!

தான் கைது ஆவதைத் தடுத்து நிறுத்த, ஏழு விதமான முன் ஜாமீன் மனுக்களை அவர் கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்​தார். அவை நிராகரிக்கப்பட்ட மறு நாள், 1996 டிசம்பர் 7-ம் தேதி சனிக்கிழமை காலை 8.05 மணிக்கு, போயஸ் தோட்டத்தில் அவரைக் கைது செய்ய போலீஸ் நுழைந்தது. டி.ஐ.ஜி. ராதாகிருஷ்ணன் தலைமையில் எட்டு போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அது.

அங்கே பி.ஹெச்.பாண்டியன் இருந்தார். கைது செய்வதற்கான சம்மன் அவரிடம் போலீஸாரால் தரப்பட்டது. பஞ்சாயத்து யூனியன்களுக்கு கலர் டி.வி-க்கள் வாங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக ஊழல் குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்படுகிறார் என்பதை அறிந்தவுடன் பி.ஹெச்.பாண்டியன், போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார். ''முன் ஜாமீன் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்கிறோம்... அதற்குள் கைது செய்வதா?'' என்று அவர் எதிர்த்ததை, போலீஸ் ஏற்கவில்லை. காலை 9.05-க்கு ஜெயலலிதா கைது செய்யப்பட்டார்.

போயஸ் தோட்ட வாசலில் ஏராளமான நிருபர்கள் அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு. ''அரசியலில் பழிவாங்கும் நடவடிக்கை இது!'' என்று நிருபர்களிடம் ஜெயலலிதா சொன்னபோது, அவர் கண்களில் நீர் திரையிட்டது. அப்போது அவர் மிகவும் சோகத்துடன் காணப்​பட்டார்.

போலீஸ் வண்டியான டயோட்டா வேனில், காலை 9.10 மணிக்கு கமிஷனர் ஆபீஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு - உளவுப் பிரிவு டெபுடி கமிஷனர் அறையில் அமரவைக்கப்பட்டார். பிறகு, கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீதிபதி ராமமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட்டபோது, மணி 11.05. அவரை டிசம்பர் 21-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

கமிஷனர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பிரமுகர் என்கிற அளவில் சுலோசனா சம்பத் மட்டுமே தென்பட்டார். ஜெயலலிதா மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது நேரம்... காலை 11.45.

சிறைச்சாலை வாசலில் அ.தி.மு.க. தொண்டர்கள் பெருவாரியாகக் குழுமி இருந்தனர். அவர்களைப் பார்த்த ஜெயலலிதா உணர்ச்சிவயப்பட்டு, ''தி.மு.க. ஆட்சியின் இந்த அராஜகத்தைப்பற்றி மக்களிடம் போய் விளக்கிச் சொல்லுங்கள்...'' என்று பேசினார்.

ஆங்காங்கே தாங்கள் பார்த்த காட்சிகளை இதோ நிருபர்கள் தருகிறார்கள்...

ஜெயலலிதாவைக் கைது செய்யப் போவது எந்த போலீஸ், எந்த வழக்கில் என்பது பற்றி ஒரு போட்டியே இருந்தது. சி.பி.ஐ. 'நாங்கள்தான் கைது செய்யப் போகிறோம்' என்று சொன்னது. கடைசியில் மாநிலக் குற்றப் புலனாய்வு போலீஸ் கைது செய்தது. கைது செய்தவர் - இதன் டி.ஐ.ஜி-யான ராதாகிருஷ்ணன். ஒரு விசேஷம் என்னவென்றால், இதே ராதாகிருஷ்ணன், எம்.ஜி.ஆர். காலத்தில் ஒரு வழக்கில் கலைஞரையும் கைது செய்தவர்!

ஜெயலலிதாவின் தலைமுடி மிகவும் நரைத்து இருந்தது. காபி கலரில், பூப்போட்ட புடவையும் அதே கலர் கோட்டும் அணிந்து இருந்தார். போலீஸ் தன்னை மறுநாள் கைது செய்யப் போகும் தகவல் வெள்ளி இரவு 11 மணிக்கே ஜெயலலிதாவுக்குத் தெரியும். காலையில் 5 மணிக்கே எழுந்து, குளித்துத் தயாராகக் காத்திருந்தார். அதிகாரிகள் வரும்வரையில் பூஜை செய்து இருக்கிறார். 'பூஜை முடியட்டும்' என்று போலீஸார் சிறிது நேரம் காத்திருந்தனர். பிறகு வந்த ஜெயலலிதாவிடம் அதிகாரிகள் அவரைக் கைது செய்யப் போவதாகத் தெரிவித்தனர். எந்த வழக்கில் என்று கேட்டுத் தெரிந்து கொண்டவர், 'பத்து நிமிடங்கள் பொறுங்கள்' என்று உள்ளே சென்று, தான் அணிந்திருந்த வைரக் கம்மல் உட்பட நகைகளைக் கழற்றி வைத்துவிட்டு வந்தார். வரும்போது வெறும் ஜூஸ் மட்டும் சாப்பிட்டுவிட்டு வந்தாராம்.

ஜெயலலிதாவை போலீஸ் வேனில் ஏற்றியபோது, சமையல்காரி ராஜம்மாள் கதறி அழுதார். ராஜம்மாளை போயஸ் தோட்டத்தில் வேலைக்குச் சேர்த்தவர், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்!

ஜெயலலிதா போலீஸ் வண்டியில் ஏறிய​போது, தோட்டத்தில் இருந்த அத்தனை நாய்களும் பயங்கரமாகக் கத்தித் தீர்த்தன!

போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்​தவுடன், ஜெயலலிதா சுதாரித்துக்​கொண்டு​விட்டார். புகைப்படக்காரர்களைப் பார்த்து முகத்தில் புன்னகை தவழவிட்டார். போலீஸ் டி.எஸ்.பி-யான சென்ராய பெருமாள் விசாரணை நடத்தினார்.

போலீஸ் கமிஷனர் ஆபீஸில் இருந்து ஜெயலலிதா அழைத்து வரப்பட்டபோது, நிருபர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னே வர - ஒரே கூச்சல், குழப்பம். ஒரு தனியார் டி.வி-யின் பெண் நிருபர் தடுமாறிக் கீழே விழ, 'தடதட'வென மற்ற நிருபர்களும் சரிந்து விழுந்தனர். அதைப் பார்த்த ஜெயலலிதா பதறிப்போய், அந்தப் பெண் நிருபரைத் தூக்கிவிட்டு, 'என்ன? அடி எதுவும் பட்டதா?' என்று டென்ஷனுடன் விசாரித்துவிட்டு நகர்ந்தார்.

ஜெயலலிதா கைது படலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் வி.ஐ.பி. மரியாதை கொடுத்து போலீஸ் அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டார்கள் - சன் டிவி-க்காரர்கள்!
நீதிபதி வீட்டில்...

மிகச் சரியாக 11.05-க்குக் கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள 'டவர் பிளாக்' முன்பு ஜெயலலிதாவைக் கொண்டு வந்து இறக்கினார்கள் போலீஸார். எல்லோரும் இறங்கிய பின் இரண்டு மூன்று பெண் போலீஸ் புடைசூழ வேனைவிட்டு இறங்கினார் ஜெயலலிதா.

ஐந்தாறு நபர்களை மட்டும் ஜெயலலிதா உடன் செல்ல அனுமதித்தனர்.

கொஞ்ச நேரத்தில் கறுப்பு கவுன் சகிதம் பி.ஹெச்.பாண்டியன் வர, அவரை நீதிபதி வீட்டுக்குச் செல்ல அனுமதித்தனர். அவர் பின்னாலேயே சஃபாரியில் வந்த ஜீனசேனன், ''என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க? ரூல்ஸ் தெரியாதவன்கிட்ட உங்க வேலையைக் காட்டுங்க!'' என்று டென்ஷனுடன் கத்த... அவரையும் உள்ளே அனுப்பியது போலீஸ்.

நீதிபதி ராமமூர்த்தி முன்பு, ஜெயலலிதா சிலையாக நின்று இருந்தார். நீதிபதி சோபாவில் அமர்ந்திருந்தார். பி.ஹெச்.பாண்டியன்தான் வாதிட்டார். ஜெயலலிதா அவரிடம் சில பாயின்ட்டுகளை எடுத்துத் தந்தார். ''டி.வி. வாங்கியது முறையாக நடந்த ஒன்று. கேபினெட் கூட்ட முடிவுதான் அது. இந்தக் கைது, அரசியல் நோக்கம் உடையது!'' என்றார் பாண்டியன். ''அரசியல் பற்றி இங்கே பேச வேண்டாம். வழக்கு பற்றி பேசலாம்...'' என்றார் நீதிபதி. ஜெயலலிதா, 'ஊழல் எதுவும் நடக்கவில்லை' என்று விளக்கினார். 'ஜெயிலில் தனக்குத் தகுந்த பாதுகாப்பு வேண்டும்' என்றார் ஜெயலலிதா. 'அதற்கு ஏற்பாடு செய்யப்படும்' என்றார் நீதிபதி!

ஏறத்தாழ 35 நிமிடங்கள் கழிந்த பின், எட்டாவது மாடியில் உள்ள நீதிபதி ராமமூர்த்​தியின் வீட்டில் இருந்து லிஃப்ட் மூலம் ஜெயலலிதாவைக் கீழே இறக்கிக் கொண்டு வந்து, போலீஸ் வேனுக்குள் ஏற்றினார்கள்.

கிராமங்களுக்கு 45,000 கலர் டி.வி. வாங்கியதில் எட்டரைக் கோடி ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டில் ஜெயலலிதா கைது செய்யப்பட்டுள்ளார் (இது பற்றி ஜூ.வி. 14.8.96 இதழில் முன்பே செய்தி வந்துள்ளது).

இந்த டி.வி-க்கள் முறையாக வாங்கப்படவில்லை​யாம். அப்போதைய நிதித் துறைச் செயலாளர் ஆட்சேபனை தெரிவித்திருந்தும், முதல்வராக இருந்த ஜெயலலிதா வலுக்கட்டாயமாக வாங்க உத்தரவு போட்டார் என்று குற்றச்சாட்டு.

டெய்ல் பீஸ்...

ஜெயலலிதாவைக் கைது செய்வது பற்றி தமிழக அரசு முதலில் எந்த முடிவுக்கும் வரவில்லை. கைது திடீரென்று நடந்தது.

மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி, மகன் ஆகியோரைத் திரும்பத் திரும்பத் தாக்கி ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கைதான் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தி, உடனே கைது செய்யக் காரணமாயிற்று என்கிறார்கள். இந்தக் கைது படலத்துக்குப் பிறகு போயஸ் கார்டனில் இரவுவரை ரெய்டும் நடந்தது.

- நமது நிருபர்கள்

சசிகலாவுக்கு வலிப்பு!      11.12.1996

ஜெ.ஜெ. டி.வி. மூலம் சசிகலா, அந்நியச் செலாவணி மோசடி செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயிலில் இருந்த அவரிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியபோது, ரத்த அழுத்தமும் வலிப்பும் வந்து, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார், சசிகலா. இதன் பிறகு, புதியதொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட, கடந்த 3-ம் தேதியன்று ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கோர்ட்டுக்கும் கொண்டுவரப்பட்டார்.

ஆனால், சசிகலாவின் உடல்நலக் கோளாறை, 'ஒரு புரியாத புதிர்' என்றே வர்ணிக்கிறார்கள் டாக்டர்களும் மற்ற மருத்துவ ஊழியர்களும்!

அரசு பொது மருத்துவமனையில் உள்ள 'இன்டென்ஸிவ் கேர்' யூனிட்டில் சசிகலா அனுமதிக்கப்பட்டு இருந்தார். ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு இருந்த இந்த அறையில் சசிகலாவின் படுக்கை தனியாகவே இருந்தது. சசிகலாவுக்கு அருகில் பெண் வார்டன்கள் நான்கு பேர் நிறுத்தப்பட்டு இருந்தனர், வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர்கள்! இவர்களுக்கிடையே சசிகலாவின் உறவினர்கள் ஏராளமான பேர் மருத்துவமனையில் வலம் வந்தபடி இருந்தனர். பெரும்பாலானோர் கைகளில் செல்​போன்!

சசிகலாவுக்காகவே ஐந்து ஹவுஸ் சர்ஜன்கள் தயாராக இருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சசிகலாவுக்குப் பரிசோதனை நடந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று ஓரளவு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது. அதற்கான மருந்தைக் கொடுத்தவுடன் சசிகலா குணமாகி​விட்டார். ஆனால், அதன் பிறகு உணவு அருந்த மறுப்பதும், உட்காராமல் பிடிவாதம் செய்வதுமாக இருந்துள்ளார்.

அதனால் வேறு வழி இன்றி அவருக்கு குளு​கோஸ் ஏற்றியுள்ளனர். இருப்பினும், அவ்வப்​போது சசிகலாவுக்குக் கை - கால்கள் இழுத்தபடி இருக்க... அதற்கான காரணத்தைத் தேடினார்கள்.

முதலில் ரத்தப் பரிசோதனைகள். அதில் எதுவும் பிடிபட​வில்லை என்று தெரிந்ததும், 'மூளையில் ஏதாவது பிரச்னை இருந்தால்தான், இப்படி வரும்' என்று நினைத்து, இ.இ.ஜி பரி​சோதனை செய்யப்பட்டது. அதிலும், 'எந்தக் கோளாறும் இல்லை' என்று தெரியவந்தது.

சி.டி. ஸ்கேன் மூலம் 'மூளையில் ரத்தக் கட்டி இருக்குமா...?' என்றும் சோதனை செய்ய... 'அப்படி எந்தக் கட்டியும் இல்லை' எனத் தெரிந்தது. மனநல ரீதியாக உடல் பாதித்து இருந்தால், அதையும் கண்டறிய முடியும். ஆனால், அந்தச் சோதனை செய்யப் பொது மருத்துவமனையில் வசதி இல்லை. இதனால் அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, எம்.ஆர்.ஐ. சோதனை செய்து பார்த்தனர். பிறகு, 'உடலில் ஏதாவது ரசாயன மாற்றம் ஏற்பட்டு இருக்குமோ..?' என்று 'Knee Hammer' என்ற பரிசோதனையையும் செய்தனர். பிறகு இதயம், லிவர், கிட்னியைப் பரிசோதனை செய்ய, எல்லாமே நன்றாகவே இருந்துள்ளன!

இப்படி எல்லாமே சரியாக இருக்க, சசிகலாவுக்கு வலிப்பு வந்தது எப்படி என்று டாக்டர்கள் ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். மற்றொரு சோதனைதான் ஹைலைட். நோயாளியின் கால் பாதத்தில் 'ரிஸீமீமீ பிணீனீனீமீக்ஷீ' என்ற கருவியைக் கொண்டு இழுக்கும்போது, காலின் பெருவிரல் விறைத்து நீட்டிக்கொண்டால், நோயாளிக்கு மூளையின் பாதிப்பால் வலிப்பு நோய் வந்து இருக்கிறது என்று அர்த்தமாம். ஆனால், இ.இ..ஜி. மூலம் மூளையில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெளிவான பிறகு, இந்தச் சோதனையின்போது மட்டும் சசிகலாவின் கால் பெருவிரலில் விறைப்பு ஏற்பட்டது கண்டு டாக்டர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள்.

'ஏன் இப்படி இருக்கிறது? முரண்பட்ட வலிப்பு நோயாக இருக்கிறதே என்று டாக்டர்கள் மத்தியில் பேச்சு! இருந்தாலும், 'ஹார்லிக்ஸ் வேண்டுமா..? போர்ன்விட்டா வேண்டுமா..?' என்று சசிகலாவுக்கு கொடுத்த உபசரணைகள், ஜெயலலிதாவின் ஆட்சிதான் வந்துவிட்டதோ என்ற சந்தேகத்தையே ஏற்படுத்தியது!

சென்னை மனநல மருத்துவமனை டாக்டர்கள் பாஷ்யம் உட்பட நான்கு பேர் வந்து சசிகலாவை பார்த்தனர் அப்போது சசிகலா தனக்கு 12 வயதிலும் பிறகு 18 மாதங்​களுக்கு முன்பும் இதே போன்று வலிப்பு வந்ததாகக் கூறியுள்ளார். பிறகு உயர் மட்ட கமிட்டி முடிவின்படி, கடந்த 5-ம் தேதி மாலை 4 மணிக்கு மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டார் சசிகலா.

- கண்பத்

நன்றி : ஜூனியர்விகடன்

இனி நான்..

ஜெயலலிதா கைதினைவிடவும் சசிகலாவின் கைது விஷயமும், அவர் மருத்துவமனையில் நோயாளி போல் டிராமா போட்டு தப்பித்ததுதாம்தான் அன்றைய பத்திரிகையுலகில் ஹாட் டாபிக்..!

சசிகலா மீது முதலில் அன்னியச் செலாவணி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதற்காக சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இருந்த அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் அவரை ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினார்கள் அதிகாரிகள்.

இந்த நோட்டீஸை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்வரைக்கும் சென்றார் சசிகலா. ஆனால் பலனில்லை. நேரில்  ஆஜராகத்தான் வேண்டும் என்று தீர்ப்பளித்தது சுப்ரீம் கோர்ட். ஒரு நாள் ஆஜராவதற்காக சாஸ்திரி பவனுக்குள் காலடி எடுத்து வைத்தார் சசிகலா. அவரோடு தடி, தடியான எருமை மாடு மாதிரியான வாட்ட சாட்டமான அடியாட்களும் வந்திருந்தார்கள். இவர்களுக்கு கேப்டன் தினகரன், சுதாகரன், பாஸ்கரன்களின் தங்கை கணவரான ரிசர்வ் வங்கி பாஸ்கரன்..!

இவர்களது முக்கியப் பணி சசிகலாவை புகைப்படம் எடுக்கவிடாமல் தடுக்க வேண்டும் என்பதுதான். இதற்காக இவர்கள் என்ன செய்தார்கள் என்றால், சசிகலாவைச் சுற்றி வட்டமாக நின்று கொண்டு வேண்டுமென்றே சுற்றி சுற்றி நடந்தபடியே ஹாலுக்குள் வந்தார்கள். அவர்களை மீறி புகைப்படம் எடுக்க முயன்ற புகைப்படக்காரர்களைத் தடுக்கும்பொருட்டு வேண்டுமென்றே அவர்கள் மீது விழுந்து எழுந்தார்கள். பின்னர் தங்களது இரண்டு கைகளை விரித்து மறைத்துக் கொண்டார்கள். தங்களது பூட்ஸ் கால்களால் வேண்டுமென்றே புகைப்படக்காரர்களை உதைத்தார்கள். மிதித்தார்கள். இவர்களது இந்தக் கொடூரத்தையும் தாண்டித்தான் அன்றைய தினம் பத்திரிகையாளர்கள் சசிகலாவை புகைப்படம் எடுக்க முடிந்தது..!

அப்போது நான் வேலை பார்த்த தமிழன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அலுவலகம் சாஸ்திரி பவன் அருகிலேயே இருந்ததாலும், அப்போது அந்தப் பத்திரிகையில் வேலை பார்த்ததால், ஒரு ஆர்வக் கோளாறில் இதையெல்லாம் பார்க்கப் போய்தான் சசிகலா அண்ட் கோ- எந்த அளவுக்குக் கொடூரமானவர்கள் என்பதை நேரிலேயே காண முடிந்தது.

சசிகலா தொடர்ச்சியாக 2 அல்லது 3 நாட்கள் அங்கு வந்தார் என்று நினைக்கிறேன். அதற்குப் பின்புதான் அவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் உடனேயே மயக்கம் வருவதைப் போல் விழுந்துவிட ஸ்ட்ரெச்சரில் அலுங்காமல், குலுங்காமல் அவரை கொண்டு சென்றவிதத்தையும், செத்த பொணம் போல் அவர் படுத்திருந்து ஆக்ட்டிங் கொடுத்ததையும் பார்த்து அப்போதைய பத்திரிகையுலகம் நடிப்பில் சாவித்திரியை மிஞ்சிவிட்டார் சசிகலா என்றே எழுதினார்கள்.. இது உண்மையும்கூட..!




http://worldnews24by2.blogspot.com




  • http://worldnews24by2.blogspot.com


  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger