ரஜினிகாந்த் உடல்நிலை தேறிய பிறகும், `ராணா' படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போவது ஏன்? என்பது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன.
ரஜினிகாந்த் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கும் படம், `ராணா.' இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார்.
படப்பிடிப்பு தொடக்க விழா, கடந்த ஏப்ரல் மாதம் 29-ந் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை இசபெல்லா ஆஸ்பத்திரியில் அவர் இரண்டு முறை அனுமதிக்கப்பட்டார். பின்னர் போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
அவருக்கு மேலும் நவீன சிகிச்சை தேவைப்பட்டதால், சிங்கப்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்குள்ள மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபின், அவர் குணம் அடைந்தார். அவர் உடல்நிலை தேறியபின், கடந்த மாதம் 13-ந் தேதி, சென்னை திரும்பினார்.
இப்போது ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ், பேரக்குழந்தைகள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார்.
ரஜினிகாந்த் குணம் அடைந்து அவர் உடல்நிலை தேறினாலும், சிங்கப்பூர் டாக்டர்கள் கொடுத்த மாத்திரை-மருந்துகளை அவர் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறார். இதன் காரணமாகவே `ராணா' படப்பிடிப்பு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.
`ராணா' படப்பிடிப்பு முதலில் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றார்கள். இப்போது, அக்டோபர் இறுதியில் தொடங்கும் என்கிறார்கள்.
ரஜினிகாந்த் உடல்நிலையை பரிசோதிக்க, சிங்கப்பூரில் இருந்து இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் சென்னை வந்தார்கள். டாக்டர்கள் எதிர்பார்த்ததை விட, ரஜினிகாந்த் புத்துணர்ச்சியுடனும், தெம்புடனும் இருப்பதால், மாத்திரைகளின் எண்ணிக்கையையும், மருந்துகளின் அளவையும் டாக்டர்கள் குறைத்து விட்டார்கள். என்றாலும், சிங்கப்பூர் டாக்டர்கள் மீண்டும் ஒருமுறை சென்னை வந்து அவர் உடல்நிலையை பரிசோதித்து, ``இனிமேல் நடிக்கலாம்'' என்று சொன்ன பிறகே `ராணா' படப்பிடிப்பு தொடங்கும் என்று ரஜினிகாந்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?