Monday, 7 November 2011

கலாநிதி மாறன் குடும்பத்தோடு பின்லாந்து போனதின் மர்மம் என்ன?

 
 
 
குடும்பத்தோடு சன் டிவி குழும தலைவர் கலாநிதி மாறன் திடீரென பின்லாந்து கிளம்பிப் போய் விட்டார். சிபிஐ விசாரணை வளையத்தின் கீழ் உள்ள நிலையில் அவர் குடும்பத்தோடு பின்லாந்து போயிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஏர்செல் நிறுவனம் சிவசங்கரன் வசம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திடம் அதை விற்று விடுமாறு கலாநிதி மாறனும், அப்போது தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த கலாநிதியின் தம்பி தயாநிதி மாறனும் நிர்ப்பந்தித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ஏர் செல் நிறுவனத்திற்கு 2ஜி உரிமங்களை வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்தார் என்பதும் சிபிஐ வைத்துள்ள குற்றச்சாட்டு. வேறு வழியில்லாமல் மலேசிய நிறுவனத்திடம் ஏர்செல்லை சிவசங்கரன் விற்ற பின்னர் படு வேகமாக அந்த நிறுவனத்திற்கு 2ஜி உரிமங்களை தயாநிதி மாறன் வழங்கினார். இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனம் சன் டைரக்டர் நிறுவனத்தில் ரூ. 629 கோடி அளவுக்கு முதலீடுகளைச் செய்தது.
 
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இதையடுத்து தயாநிதி மாறன் தனது பதவியை ராஜினாமா சதெய்தார். இந்த வழக்கில் தயாநிதி மாறன், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நிறுவனம், மேக்சிஸ் நிறுவனம் ஆகியவற்றின் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கலாநிதி மாறனும் குற்றம் சாட்டப்பட்டோரில் ஒருவர் ஆவார்.
 
இந்த வழக்கை படு தாமதமாக தாக்கல் செய்த சிபிஐ இன்னும் தாமதமாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் குடும்பத்தினரின் வீடுகள், அலுவலங்கள், சன் டிவி அலுவலகம் ஆகியவற்றில் ரெய்டுகளை நடத்தியது. இந்த நிலையில், கலாநிதி மாறன் தனது மனைவி காவேரி, மகள் காவியா ஆகியோருடன் திடீரென பின்லாந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். தனி விமானத்தில் சென்ற இவர்கள் தங்களுடன் பெருமளவில் லக்கேஜ்களையும் கொண்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
 
நேற்று அதிகாலையில் இந்த விமானம் சென்னையை விட்டுக் கிளம்பியுள்ளது. துபாய் போய் அங்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டு அங்கிருந்து பின்லாந்து போயுள்ளது.
 
திடீரென கலாநிதி மாறன் பின்லாந்து கிளம்பிப் போயிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை வளையத்தின் கீழ் உள்ள நிலையில், இன்னும் விசாரணைக்கு அழைக்கப்படாமல் உள்ள நிலையில் அவர் குடும்பத்தோடு பின்லாந்து போயிருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 
அவர் சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதால் வெளிநாடு போவதாக இருந்தால் சிபிஐயிடம் அனுமதி வாங்கிய பின்னர்தான் செல்ல முடியும். ஆனால் அவர் அனுமதி பெற்றாரா என்பது தெரியவில்லை. இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
 
விசாரணையிலிருந்து தப்புவதற்காகவே கலாநிதி மாறன் வெளிநாடு போய் விட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எப்படி ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் விசாரணைக்கு வராமல் லண்டனில் உட்கார்ந்தபடி லலித் மோடி டேக்கா கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ அதேபோல கலாநிதி மாறனும் செய்வாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
 
மேலும் பின்லாந்து நாட்டுடன் இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான எந்த ஒப்பந்தமும் இல்லை. எனவே ஒருவேளை பின்லாந்தில் கலாநிதி மாறன் தங்கி விட்டால் அவரை அங்கிருந்து கொண்டு வருவது மத்திய அரசுக்குப் பெரும் சவாலானதாக இருக்கும் என்று சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
 
கலாநிதி மாறன் ஓய்வுக்காக போயிருக்கிறாரா அல்லது ஒரேயடியாக அங்கு போய் விட்டாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger