Monday 7 November 2011

துணை-(நிறைவுப் பகுதி)



  தூங்கிக்கொண்டிருந்த ராணி திடீரென்று விழித்தாள்.அவள் காலில் ஏதோ ஊர்வது போல் இருந்தது.காலை உதறிக் கொண்டாள்.ஏதுவும் இல்லை.மீண்டும் இருக்கையில் சாய்ந்து  கொண்டாள். உடனே தூக்கம் வரவில்லை.சிறிது நேரம் கழித்து மீண்டும், காலில் ஏதோ உராய்வது தெரிந்தது.காலை முன்னே இழுத்துக் கொண்டாள்.சற்று நேரத்தில்  அவள் இடுப்பில்  கை படுவதை உணர்ந்தாள். திரும்பி முருகேசனைப் பார்த்தாள். தூங்கும் அவரை எழுப்ப வேண்டியதுதான்.
 

"சார்,சார்," அவன் காதருகில் வாய் வைத்துக் கூப்பிட்டாள்.முருகேசன் விழித்துக் கொண்டு அவளைப் பார்த்தான்.


"சார்,பின் சீட்டில இருக்கற ஆளு,காலை உரசரான்;இடுப்பில கை வைக்கிறான். கொஞ்சம் சத்தம் போடுங்க"


முருகேசன் திகைத்தான்.இது என்னடா வம்பாப் போச்சு என யோசித்தான்.அவனுக்குப் பொதுவாகவே இந்த மாதிரிச் சண்டை போடுவதென்றால் பயம்.இப்போது அவள் சொல்லி விட்டாள்  .என்ன செய்வது .எழுந்து பின்னால் பார்த்தான்.அந்த மங்கிய ஒளியில் பொன்னம்பலம் போன்று ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.அவன்
தோளில் தட்டவும் அவன் இவனைப் பார்த்தான்.


"சார், பொண்ணுமேலே கால் ,கையெல்லாம் படுதாம்.பார்த்து உக்காருங்க"
என்று அவன் மெல்லச் சொல்லவும் அந்த ஆள் "ஏதோ தெரியாம பட்டிருக்கும் இதைப்போய்ப் பெரிசாச் சொல்ல வந்துட்டீங்க?" என்றுகேட்டான். முருகேசன் பேசாமல் உட்கார்ந்து  அவளைப் பார்த்து "நீங்க வேணா என் சீட்டுக்கு வந்துடுங்க" என்று சொன்னான்.


"உங்களுக்கு அதெல்லாம் பிரச்சினையாச்சே?அதுவும் இவனுக்குப் பயந்து சீட்டை மாற்றுவதா?" எனச் சொல்லி விட்டு ஒரு முடிவுக்கு வந்தவளாக அமர்ந்தாள்.


சிறிது நேரம் கழித்து அவன் மீண்டும் தன் வேலையை ஆரம்பித்தான்.ராணி எழுந்தாள்.சீட்டிலிருந்து வெளியே வந்தாள்;பின்னால் சென்று அவன் கன்னத்தில் ஒரு அறை விட்ட படியே"கண்டக்டர்.லைட்டைப் போடுங்க!"எனச் சத்தம் போட்டுச்  சொன்னாள்.

நடத்துனர் என்னவோ எனப் பயந்து விளக்கைப் போட்டார்.இவளைப் பார்த்ததும் அருகில் வந்தார்.

ராணி சொன்னாள்"இந்த ஆள் என் கிட்டே வம்பு பண்ணிக்கிட்டே வரான். அடுத்த ஊர் வந்ததும் போலிஸ்  ஸ்டேசனுக்குப் போங்க.ஒரு புகார் குடுக்கணும்."


இதையெல்லாம் எதிர்பார்க்காத அவன் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான். மற்றப் பயணிகளும் எழுந்து வந்து விட்டனர்.பலருக்கு நேரம் ஆகிவிடுமே என்ற கவலை வந்து விட்டது.இந்த மாதிரி நேரத்தில் வீரம் காட்டும் ஓரிருவர்,தர்ம அடி போட்டனர். பின் அவளிடம் விடும்மா. போலிஸுக் கெல்லாம் போனாப் பிரச்சினை பெரிசாயிடும்  எனச் சொல்லி விட்டு,கண்டக்டரிடம் அவனை இடம் மாற்றி அமர்த்தும் படிசொல்லி விட்டு,அவளையும் சமாதானப் படுத்தினர்.


பின் பயணம் தொடர்ந்தது.


அந்த முழு நிகழ்வின் போதும் முருகேசன் பிரமித்துப் போய்
உட்கார்ந்திருந்தான்.


மீதிப் பயணம் வேறு எதுவும் நிகழ்வின்றிக் கழிந்தது.பேருந்து காலை நிலையத்தை அடைந்தது.தாம்பரத்திலேயே அந்த ஆள் இறங்கி விட்டான்.நிலையத்தில் முருகேசனும். ராணியும் கீழே இறங்கினர்.அவர்கள் இறங்கியவுடன் அருகில் வந்த பெரியவரைப் பார்த்து 'அப்பா' எனக் கூப்பிட்ட ராணி,முருகேசனிடம்,"என் அப்பா "என அறிமுகம் செய்து வைத்தாள்.



 பின் தன் அப்பாவிடம் சொன்னாள்"அத்தான் என்னைத் தனியா அனுப்பணுமேன்னு கவலைப்பட்டுக் கிட்டேஇருந்தாங்க.நல்ல வேளையா சார் வந்தார். சார் பேர் முருகேசன்.அத்தானோடுதான் வேலை பார்க்கிறார். அத்தான் சொன்ன படி எனக்கு ஒரு நல்ல வழித்துணையாக இருந்தார்.பயமே இல்லாமல் இருந்தது" என்றாள்.


அவர் முருகேசனிடம்"ரொம்ப நன்றி சார்.வீட்டுக்கு அவசியம் வாங்க" எனச் சொல்லிப் புறப்பட்டார்.


ராணியும்" ரொம்பத் தாங்க்ஸ் சார்" என புன்முறுவலோடு சொல்லி விட்டு அப்பாவுடன் சென்றாள்.


முருகேசன் அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டு நின்றான்.
                    ----------------------------------------------------

கதை முடிந்தது.பலரது எதிர் பார்ப்புகள் பொய்த்துப் போயிருந்தால் நான்   பொறுப்பல்ல! :)).இது ஒரு "இருத்தலியல்" வகையைச் சேர்ந்த சிறுகதை எனச்    சொல்லிக் கொள்ளத்தான் ஆசை.இதில் வாழ்க்கையின் முரண்களின் மீதான ஒரு எள்ளல் இருக்கிறது அவ்வளவே.உங்கள் கருத்தை, எதுவாயிருப்பினும். கூறுங்கள்.





http://cmk-mobilesms.blogspot.com



  • http://oruwebsite-tamil.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger