முருகேசன் பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தபோது மணி 8.அவன் போக வேண்டிய பேருந்து 9 மணிக்குத்தான்.அவன் எப்போதுமே இப்படித்தான்,குறிப்பிட்ட நேரத்துக்கு மிக முன்பாகவே தயாராகி விடுவான்.இதனாலேயே அவனை நண்பர்கள் முன்சாக்கிரதை முருகேசன் என்று அழைப்பார்கள்.
பேருந்து நிலையத்துக்கு வந்ததும் உட்கார இடம் இருக்கிறதா எனப்பார்த்தான்.எல்லா இருக்கைகளிலும் ஆட்கள் இருந்தனர்.ஒரு இருக்கை அருகில் சென்று,பையைத் தன் இரு கால்களுக்கிடையே வைத்துக் கொண்டு நின்றான்.அவன் பார்வை சுற்றி வந்தது.தெரிந்த முகங்கள் எதுவும் காணப்படவில்லை.சீட்டு முன் பதிவு எதுவும் செய்யாத நிலையில் தனக்குப் பேருந்தில் உட்கார இடம் கிடைக்குமா என்ற கவலையில் இருந்தான்.
சிறிது நேரம் சென்றது.
"முருகேசன் சார்" என்ற குரல் கேட்டு இது வந்த திசையில் பார்த்தான். அவன் பணி புரியும் தொழிற்சாலையில் வேறு பிரிவில் இருக்கும் சரவணன்,இரண்டு பெண்களுடன் வந்து கொண்டிருந்தான்
முருகேசன் அருகில் வந்த சரவணன்"எங்க சார்,சென்னைக்கா?"எனக் கேட்டான்.முருகேசன் ஆமாம் எனத்தலையாட்டியதும் "முன்பதிவு செய்து விட்டீர்களா?"எனக்கேட்டான்.
"இல்லை.பேருந்து வந்த பின்தான் பார்க்க வேண்டும்"
"ரொம்ப நல்லதாப்போச்சு"என்ற சரவணன் உடன் இருந்த பெண்களைக் காட்டிச் சொன்னான் "இது என் மனைவி.அது அவ தங்கச்சி ராணி.விடுமுறைக்காக வந்திருந்தா.இவளை இன்னைக்குச் சென்னையிலே கொண்டு போய் விடறதுக்காக பதிவு செய்திருந்தேன். திடீரென்று நாளைக்கு எனக்கு இங்கே முக்கியமான வேலை வந்துடுச்சு. என்னோட டிக்கட்டை என்ன செய்யலாம்,இங்க வந்ததும் யார் கிட்டயாவது வித்துடலாமான்னு யோசிச்சுக் கிட்டே இருந்தேன். மச்சினிச்சிக்கு வேறே ராத்திரி நேரத்திலேதுணை இல்லாம அனுப்பறோமேன்னு கவலை.
நல்ல வேளை நீங்க வந்தீங்க. என் டிக்கட்டை நீங்க எடுத்துக்குங்க. டிக்கட் பிரச்சினையும் தீர்ந்தது ;ஒரு நல்ல துணையும் கிடைத்தது."
இரண்டு டிக்கட்டுகளையும் எடுத்து முருகேசனிடம் கொடுத்து ''நீங்களே ரெண்டையும் வச்சுக்குங்க.அடுத்தடுத்த சீட்தான்" என்று சொன்னான் சரவணன். முருகேசன் வாங்கிக்கொண்டு தன் டிக்கட்டுக்கான பணத்தைக் கொடுத்தான்.
பேருந்து வந்தது .இருவரும் ஏறினர்.அந்தப்பெண் சன்னலோர இருக்கையில் அமர்ந்துகொண்டு,தன் அக்காவிடம் பேச ஆரம்பித்தாள். அவன் பக்கத்து இருக்கை
யில் மனமின்றி அமர்ந்தான்.
பேருந்து புறப்பட்டது.அவன் அவளிடம் தனக்குச் சன்னலோர இருக்கையில் அமராவிடில் பிரச்சினையாகும் என்று சொல்லி மாற்றிக் கொண்டான்.
இரவு 12 மணி அளவில் ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்ற போது, நடத்துனர்,"வண்டி 5 நிமிடம் நிற்கும் " என்று சொல்லி விட்டு இறங்கிச் சென்றார்.அவள் அவனிடம் தண்ணீர் இருக்கிறதா எனக்கேட்டாள் அவனிடம் இல்லை.
அவள் சொன்னாள்"போய் ஏதாவது குளிர்பானம் வாங்கி வாருங்களேன். ரொம்பத் தாகமாக இருக்கிறது"சொல்லியறே தன் கைப்பையிலிருந்து பணம் எடுத்தாள்.
முருகேசனுக்கு எப்போதுமே பேருந்திலிருந்து இறங்கினால்,அது அவனை விட்டு விட்டுப் போய்விடுமோ என்ற பயம் உண்டு.அவனது பாதிக் கனவுகள் அது போன்றவைதான்.
"இங்கெல்லாம் நல்ல பானங்கள் கிடைக்காதே.பஸ் புறப்பட்டு விட்டால் "என அவன் தயங்கியதைக் கண்ட அவள் தானே போய் வாங்கி வந்து அவனுக்கும் கொடுத்தாள்.அவனுக்கு வெட்கமாக இருந்தது.
நடத்துனர் வந்தார்;பேருந்து புறப்பட்டது,சிறிது நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டன.
(தொடரும்)
http://cmk-mobilesms.blogspot.com
http://oruwebsite-tamil.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?