Monday, 7 November 2011

தனிச் சிங்களச் ச���்டம் முதல் சிலை��ின் தலையுடைப்பு வரை: இதயச்சந்திர���்



பொது இடமொன்றில் சிலை திறப்பு விழா நிகழும் போது குறைந்தது ஆயிரம் பேராவது கூடி நிற்பதைக் காணலாம். ஆனால், மக்களால் போற்றப்படும் மனிதனின் சிலையை உடைக்கும் போது, அங்கு எவருமே பிரசன்னமாவதில்லை. இருட்டினில் நடக்கும் திருட்டு வேலை அது.

திருமலை சிவன் கோவிலடியில் நிறுவப்பட்ட தந்தை செல்வாவின் உருவச்சிலை உடைப்பு, கூட்டமைப்பினர் அமெரிக்காவுக்கு மேற் கொண்ட பயணத்திற்கான எதிர்வினையாகப் பார்க்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை அழிப்பது மே 2009 இற்குப் பின்னர், அதிகரித்துச் செல்வதைக் காணலாம்.

பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, ஏகப்பிரதிநிதியல்ல என்று வெளிநாட்டமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நிராகரிப்பது, தனித்துவமான இனமல்ல. தமிழ்த்தேசிய இனம் என்பதன் அடிப்படையில் கருத்து நிலையிலிருந்து கூறப்படுவது போலுள்ளது.

இவர்களைப் பொறுத்தவரை, ஏகப் பிரதிநிதித்துவம் என்பது, வெறும் தோற்றப்பாடாகும்.

இறுதி தீர்வொன்றைக் காண்பதற்கு அரசுடன் பேச வேண்டுமே தவிர, வெளியில் பேசிப் பயனில்லை என்பது தான் பேராசான் பீரிஸின் வாதம்.

ஆனாலும் 12 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டும், எந்தப் பலனுமில்லை என்பதுதான் கூட்டமைப்பினர் தரப்பு வாதம்.

அதேவேளை, கூட்டமைப்பானது, பேச்சுவார்த்தைகளில் அர்ப்பணிப்போடு செயலாற்றவில்லை என்று அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சலிப்புறுகிறார்.

ஐ.நா. சபைக்குச் செல்லு முன்பாக ஒரு பேச்சு, பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு பயணிக்கு முன்பாக ஒரு பேச்சென, சர்வதேசத்தை ஏமாற்றும் செயற்பாட்டினை முன்னெடுக்கும் போது, அரச தரப்பின் அர்ப்பணிப்பு எங்கே என்கிற கேள்வி எழுகிறது.

தமிழ் மக்கள், தமது அரசியல் பிறப்புரிமையை ஜனநாயக வழியில் உரத்துச் சொல்லும் போது, அடிவிழுந்த வரலாறுகளே அதிகம்.

1976 ஆம் ஆண்டு பண்ணாகத்தில் தமிழீழமே ஒரே தீர்வு என்கிற தீர்மானத்தை எடுத்த போது 77 இல் அடிவிழுந்தது. பின்னர் கலாநிதி கொல்வின் ஆர்.டி.சில்வா எழுதிய குடியரசு யாப்பு மாற்றியமைக்கப் பட்டு, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, தமிழீழம் கேட்ட தமிழ் அரசியல் தலைமைக்கு, 81 இல் மாவட்டசபையே தீர்வாக வழங்கப்பட்டது.

ஐம்பதிற்கு ஐம்பது சமஷ்டியாகி சமஷ்டிக் கோரிக்கை, தனியே பிரிந்து செல்லும் வெளியக சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையாகி, உயர்ந்து சென்று, மறுபடியும் மாவட்ட சபை என்கின்ற மிக அடிமட்ட அரசியல் தீர்விற்கு தாழ்ந்து சென்றது.

இத்தகைய ஏற்ற, இறக்கங்கள் எந்தவொரு நிரந்தரமான தீர்வையும் நோக்கி நகராது என்கின்ற இயங்கியல் யதார்த்தமானது, அதிகாரத்தைக் கைப்பற்றும் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது.

யாழ்.குடாவில் அடக்குமுறைகள் அதிகரித்த போது, திருநெல்வேலியில் புதிய பரிமாணமொன்றினை வெளிப்படுத்தியது ஆயுதப் போராட்டம்.

இதன் எதிரொலியாக, பேரினவாத சக்திகளின் கொடுங் கரங்கள் உயர்ந்து, இனக் கலவரம் என்கிற குறியீட்டுப் பெயருடன், தமிழர்கள் மீதான வன்முறை பாரியளவில் கட்டவிழ்த்து விடப்பட்டது.

சிறிய பாம்பென்றாலும், பெரிய தடியால் அடி என்கின்ற வகையில், தமிழர்களின் அரசியல் தீர்மானங்களாக இருந்தாலும் அல்லது சிறிய வன்முறையாக இருந்தாலும் அதனைப் பெரிய தடி கொண்டு அடக்கினார்கள் அன்றைய ஆட்சியாளர்கள்.

76இல் மிதவாதத் தமிழ் தலைமைகள் மேற் கொண்ட தமிழீழத் தீர்மானத்திற்கு, 1983 ஓகஸ்ட் 8 இல், அரசியலமைப்பு யாப்பினூடாக ஆறாவது திருத்தச் சட்டத்தினை இணைத்துப் பதிலளித்தது பொருபான்மையின அரசு.

அதன் சாராம்சம் இதுதான்.

சுதந்திரத்திற்கும், இறைமைக்கும், நில ஒருமைப்பாட்டிற்கும் சில தனிநபர்கள் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் அச்சுறுத்தலாக இருக்கின்றது. ஆகவே, இத்தகைய செயற்பாடுகளை தடைசெய்ய வேண்டிய அவசியம் இச்சட்டத்தினூடாக மேற்கொள்ளப்படுகிறதெனக் கூறப்பட்டது.

2002 இல் சந்திரிக்கா குமாரணதுங்க அதிபராக இருந்த போது, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு எதிராக, 6 ஆவது திருத்த சட்டத்தின் துணையோடு வழக்குத் தொடரப் போவதாக, மக்கள் முன்னணியின் (PA) பேச்சாளர் சரத் அமுனுகமவும், ஜே.வி.பி.யும் உறுதியாக நின்ற விடயத்தை நினைவுகூரலாம்.

இவைதவிர, மாவட்ட சபையிலிருந்து மாகாண சபைக்கு அரசியல் தீர்வு விவகாரம் மாறிய கதை பற்றியும் பார்க்க வேண்டும்.

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையின் வருகையோடு, தற்காலிகமாக இணக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணத்திற்கொரு மாகாண சபை உருவாக்கப்பட்டது.

ஆனாலும், தமிழர் தாயகத்தில் மட்டும், மாகாண சபை முறைமையினை அமைத்தால், முழு இலங்கைக்குமான சிங்களத்தின் இறைமைக்கு காலப்போக்கில் ஆபத்து ஏற்படும் சாத்தியப்பாடுகள் இருப்பதால், ஏனைய மாகாணங்களுக்கும் அதே ஆட்சி முறைமையை பிரயோகித்தார் அன்றைய அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தன.

அதாவது அவர்களுக்கு அது தேவையற்ற விடயமாக இருந்தாலும், தமிழ் மக்களுக்கு பிரத்தியேகமான அதிகாரப் பகிர்வினை தாம் வழங்கவில்லை என்பதனைச் சிங்கள மக்களுக்கு எடுத்துக் காட்ட, இம் மாகாண சபை முறைமை சகல மாகாணங்களிலும் அமைக்கப்பட்டது.

ஆயினும் அரசியலமைப்பில் மாகாண சபை குறித்தான அதிகாரங்கள், 13 ஆவது திருத்தச் சட்டமாக்குதல், அதன் பின்னிணைப்புகளை வெளிப்படுத்தப்பட்டாலும், நடைமுறைகளில் அவை பிரயோகிக்கப்படவில்லை என்பதனை கிழக்கு மாகாண செயற்பாடுகள் வெளிச்சமாகுகின்றன.

மாநகர சபைக்கும் மாகாண சபைக்குமிடையேயுள்ள வேறுபாடு, நிலப்பரப்பளவில் மட்டும் இருப்பது போல் தெரிகிறது.

அடுத்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் பல பரிமாணங்களைத் தொட்டு உச்ச நிலையை எய்திய போது, சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதைக் குறிப்பிடலாம்.

அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளில் விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் தொடர்ச்சியாக ஈடுபட்டன.

ஆனாலும், ஆழிப் பேரலை அழிவின் பின்னர் P.TOM என்கிற பொதுக்கட்டமைப்பொன்று உருவாக வேண்டுமென்கிற சூழ்நிலை ஏற்பட்ட போது, இலங்கை அரசு அதனை வேண்டுமென்று தவிர்த்தது.

அதாவது தமிழர் தரப்பை, ஒரு தனித்தரப்பாக ஏற்றுக் கொள்ள, பெருபான்மையின் ஆட்சியாளர் எப்போதும் விரும்பியதில்லை என்பதை இம் மறுப்பு எடுத்துக் காட்டியது.

ஏனெனில் முழு இலங்கையும் சிங்கள இறையாண்மைக்கு உட்பட்டதென்கிற கருத்தியலை, ஆண்டாண்டு காலமாக ஆண்டுவரும் எவரும் நிராகரிக்கவில்லை.

இன்று, அனர்த்த முகாமைத்துவத்திற்கான அமைச்சினை, அரசு வைத்திருக்கலாம் அதில் மகிந்த சமரசிங்காவும் அமைச்சராக இருக்கலாம்.

ஆனாலும், பேரனர்த்தத்தை சந்தித்த மக்களின் இயல்பு வாழ்வினை மீட்பதற்கு, குறைந்த பட்சமாக மனிதாபிமான அடிப்படையிலாவது அப் பொதுக்கட்டமைப்பிற்கு அரசு இணங்கியிருக்க வேண்டும்.

ஆகவே, இயற்கை அழிவில்கூட, இணையமாட்டோமென அடம்பிடிக்கும் பெரும்பான்மையின ஆட்சியாளர்கள், அதிகாரப் பகிர்வினை எவ்வாறு வழங்குவார்கள் என்பதோடு, அதற்கான மனநிலை அவர்களுக்கு இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுவதிலும் நியாயமுண்டு.

இதேவேளை, தமிழர் தாயகம் என்கிற கோட்பாடு இல்லாதொழிக்கப்பட வேண்டுமென்கிற வகையில், ஜே.வி.பி.யினால் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

தற்காலிகமாக இணைக்கப்பட்ட மாகாணங்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் துணையோடு நிரந்தரமாகப் பிரிக்கப்பட்டன.

விடுதலைப் புலிகளோடு அரசு நடாத்திய பேச்சுவார்த்தை இணைந்த தாயகத்தில் அரசியல் தீர்வொன்றினை உருவாக்கி விடுமோ என்கிற அச்சத்தால் அவ் வழக்குத் தொடரப்பட்டது.

சட்டத்தின் தீர்ப்பினை மறுதலிக்க முடியாது என்று பெரும்பான்மையினக் கட்சிகள் நியாயம் கற்பித்தன.

அதேவேளை, ஒரு பூர்வீக தேசிய இனத்தின் உயர்ந்தபட்ச பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை தமது இலட்சியமாகக் கொண்டு போராடிய விடுதலைப் புலிகளின் ஆயுதப் பலமும் முள்ளிவாய்க்காலில், பல வல்லரசாளர்களின் துணையோடு அழிக்கப்பட்டது.

கடந்த இரண்டாண்டுகளில் பல மாற்றங்கள், அதிலிருந்து மீண்டுவந்த மக்கள் இன்னமும் விளிம்பு நிலை மாந்தர்களாய் வாழ்கின்றார்கள்.

மறுபடியும் முருங்கை மரத்தின் ஏறும் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டினை 2013 இல் நடத்துவதென்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தால் அரசுக்கு மகிழ்ச்சி.

ஹிலாரி கிளிண்டனையும், பான் கீ மூனையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்திக்கவில்லை என்பதால் அரசிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

அதாவது போர்க்குற்ற மீறல் குறித்து சர்வதேசம் அழுத்தம் கொடுத்தாலும், இவர்கள் தம்மைக் கைவிட வில்லையே என்று சிறிய ஆறுதல்.

ஆனாலும், வெளிநாடு சென்றால் கட்சியின் தலைமைப் பதவிக்கு ஆபத்து ஏற்படுமென அச்சப்படும் ரணில் விக்ரமசிங்காவும் அரசியல் தீர்வு குறித்து தனது கருத்தை வெளியிட ஆரம்பித்துள்ளõர்.

அதாவது அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் அதிகாரப் பகிர்வுத் தீர்வினையே கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ள வேண்டுமென்கிறார்.

ஆகவே, தனிச் சிங்களம் சட்டத்திலிருந்து, தந்தை செல்வாவின் சிலை உடைப்பு வரை, பெரும்பான்மையின ஆட்சியாளர்களுக்கு சிந்தனை? போக்கு மாறவில்லை என்பதனை எடுத்துக் கூற புதிய சான்றுகள் தேவையில்லை.

ithayachandran@hotmail.co.uk

http://kannottam.blogspot.com



  • http://kannottam.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger