Saturday, 10 September 2011

நட்சத்திரம்.




இந்த வார நட்சத்திரமாக விளங்க அழைத்து எனக்கும் ஒரு அங்கீகாரமும், கௌரவமும் அளித்த தமிழ்மணத்துக்கு மீண்டும் என் நன்றி!

நட்சத்திரம் என்பது என்ன?

தமிழ் விக்கிபீடியா சொல்கிறது----
"விண்மீன் (Star, நாள்மீன், நட்சத்திரம்) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது பூமியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினாலாகும். சூரியன் இதற்கு விதிவிலக்கு. ஏனெனில், வட்டமான தட்டுப்போல் தெரிவதற்கும், பகலில் வெளிச்சம் தருவதற்கும் ஏற்றவகையில் பூமிக்குப் போதிய அளவு அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் மட்டுமே.

விண்ணில் தெரியும் விண்மீன்களில் கணக்கற்றவை; அளவில் கதிரவனைப் போன்று பன்மடங்கு பெரியனவாய் உள்ள விண்மீன்களும் உள. விண்மீன்களில் உள்ள அணுக்கருக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து வேறு பொருள்களாய்த் திரிந்த வண்ணமாய் உள்ளன. இவ்வாறு அணுக்கரு இணைவு வினை நிகழும் பொழுது எராளமான ஆற்றல் வெளிவிடுகின்றது. வெளிவிடும் ஆற்றலின் ஒரு முகம்தான் கண்ணுக்குப் புலப்படும் ஒளி."

நண்பர் நாஞ்சில் மனோ தன் பதிவில் சொல்கிறார்"விண்ணில் சில விண்மீன்கள் ஒரே மாதிரியான அளவுடன் எப்போதும் ஒளிர்வதில்லை. சில விண்மீன்கள் மங்கலாகவும் பின்னர் அதிக பிரகாசத்துடனும் என மாறி மாறி தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன.
இது ஒரு சுற்று போல அவற்றில் நிகழ்கிறது. இப்படி ஒரே ஒழுங்கில் மாறுபட்டு ஒளிரும் விண்மீன்களை (cepheid Variables) அல்லது (Cepheids) என அழைக்கின்றனர். தமிழில் இதை சீபீட் மாறிகள் அல்லது சீபீட்கள் எனவழைக்கலாம்.
மேலும் இவற்றை மாறும் விண்மீன்கள் (Variable Stars) என்றும் அழைக்கின்றனர். இந்த சீபீட்கள் மங்கலாக மாறுவதில் இருந்து பின் பிரகாசமாகி இறுதியாக மங்கலாக மாறுவது வரை உள்ள காலத்தை அவற்றின் 'கால அளவு' என அழைக்கின்றனர் (Periods). சில சீபீட்களின் கால அளவு ஒரு நாளைக்கும் குறைவாக இருக்கிறது. சிலவற்றின் கால அளவு இரண்டு மாதங்கள் கூட நீள்கிறது."
நன்றி மனோ!

பொதுவாகவே இந்த நட்சத்திரம் என்ற சொல்லை நாம் சினிமா நடிகர்களுக் குத்தான் பயன் படுத்துகிறோம்!விண்மீன்கள் போல் ஒளி வீசுகிறார்கள்;ஆனால் அவை பகல் வந்தால் மறைவது போல் அவர்களும் மறைவார்கள் என்பதாலா?அவர்கள் மாறும் விண்மீன்களாக இருப்பதாலா? தெரியவில்லை.

சோதிட சாஸ்திரப்படி மொத்தம் 28 நட்சத்திரங்கள்(என்ன உளறுகிறான் என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது!)உண்மைதான் நண்பர்களே!இப்போது வழக்கில் இருக்கும் 27 நட்சத்திரங்களுடன்,வழக்கில் இல்லாமல் போய்விட்ட 'அபிஜித்' என்ற நட்சத்திரத்தையும் சேர்த்து மொத்தம் 28!

எனவேதான் நட்சத்திர சூக்தம் என்ற வேத மந்திரத்தில் அபிஜித்தும் சேர்க்கப் பட்டுள்ளது.

மிகவும் முக்கியமான ஒரு நட்சத்திரம் அபிஜித்துக்கு அடுத்த திருவோணம்.ஏன் தெரியுமா?

அது திருப்பதி பாலாஜியின் நட்சத்திரம்!

அது சூப்பர்ஸ்டாரின் நட்சத்திரம்!

கடைசியாக அது செ.பி.யின் நட்சத்திரம்!!(சிபி யின் நட்சத்திரம் என்ன?)

ஒருவர் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பல முறைகள் உள்ளன.

பிறந்த தேதியன்று கேக் வெட்டிக் கொண்டாடும் ஆங்கில முறை.

பிறந்த நட்சத்திரத்தன்று இறைவனை வழிபட்டுக் கொண்டாடும் பாரம்பரிய முறை.

ஆனால் ராமர்,கிருஷ்ணர் இவர்களது பிறந்த நாளை திதியை அடிப்படையாகவைத்துக் கொண்டாடுகிறார்கள்--ராம நவமி,ஜன்மாஷ்டமி என்று.

இது போலத்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர்,விவேகானந்தர் ஆகியோரது பிறந்த நாட்களும் அனுசரிக்கப் படுகின்றன.




நட்சத்திரங்களைப் பற்றிப்பேசும்போது,காலங்காலமாக தமிழ்த் திரையுலகில், எப்போதும் இரு நட்சத்திரங்களிடையே போட்டி இருந்து வந்திருப்பதைப் பார்க்கிறோம்.

எம்.கே.டி-பி.யு.சின்னப்பா
சிவாஜி-எம்.ஜி.ஆர்.
ஜெய்சங்கர்-ரவிச்சந்திரன்
ரஜினி-கமல்.
அஜித்-விஜய்.

இந்த இருமை என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம்.
இன்பம்-துன்பம்
இருள்-ஒளி
பிறப்பு-இறப்பு
சூடு-குளிர்ச்சி என்று.

சாதாரணமாகப் பெண்ணின் கண்களை மீனுக்கு ஒப்பிடுவார்கள்.நட்சத்திரங்களும் மீன்கள்தானே!—விண்மீன்கள்!

எனவேதான் ஷேக்ஸ்பியர் ஜுலியட்டின் கண்களையும், நட்சத்திரங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார்!

"Two of the fairest stars in all the heaven,
Having some business, do entreat her eyes
To twinkle in their spheres till they return.
What if her eyes were there, they in her head?
The brightness of her cheek would shame those stars
As daylight doth a lamp. Her eye in heaven
Would through the airy region stream so bright
That birds would sing and think it were not night."

"வானில் ஜொலிக்கும் இரு விண்மீன்களுக்கு வெறோதோ வேலையாம் ;
அவள் கண்களை தங்களுக்குப் பதிலாய் அங்கு வரச் சொல்கின்றன!
அவ்வாறு கண்கள் அங்கும்,விண்மீன்கள் அவள் முகத்திலும் இருந்தால்?
அவள் கன்னத்தின் ஒளியில் விண்மீன்கள் ஒளியற்றுப் போகும்,
பகலொளியில் விளக்கொளி பயனற்றுப்போவது போல்.
அவள் கண்களால் வான முழுவதும் ஒளி மயமாய்த் தகதகக்க
பறவைகள் குரலெழுப்பும் வானம் வெளுத்ததென்று!"

போதுமா நட்சத்திர புராணம்?!

சிலர்தினம் 2/3 பதிவெல்லாம் எப்படிதான் எழுதிகிறார்களோ?

தினம் ஒன்று எழுதுவதற்கே-வெட்டி ஆஃபீசரான எனக்கே-ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கிறது.

இந்த நட்சத்திர வாரத்தில் என் பதிவுக்கு வந்து ஆதரித்த அனைவருக்கும் ஸ்பெசல் நன்றி!

தமிழ்மணத்துக்கு மீண்டும் நன்றி!

டிஸ்கி: முக்கியப் பதிவு என்று ஏன் சொன்னேன்?
1) நட்சத்திர வாரத்தின் கடைசிப் பதிவு;அதனால் எனக்கு முக்கியம்!
2) அப்படிச் சொன்னால்தான் ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் ஒரு நாலு பேராவது படிக்க வருவாங்க!
3) முக்கி முக்கி தினம் ஒரு பதிவாவது ஒரு வாரம் எழுதி இன்று கடைசி!எனவே 'முக்கிய' பதிவு!









http://blackinspire.blogspot.com



  • http://blackinspire.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger