Saturday 10 September 2011

தமிழ்நாட்டுக்கு வயது 50



தமிழ்நாட்டுக்கு வயது 50. ஆமாம்... உலக வரைபடத்தில் இதுதான் தமிழ்நாடு என்று பிரிக்கப்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகின்றன.
இன்றைய ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக 'சென்னை ராஜதானி' என்று இருந்ததை, 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாகப் பிரித்தபோது, 'சென்னை மாகாணம்' என்று பிரிந்த நமது தமிழகம், பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக்காலத்தில் 'தமிழ்நாடு' என்று பெயரிடப்பட்டது.

சுதந்திரம் என்பது மாதிரியே, தமிழ்நாடும் நமக்குச் சும்மா ஒன்றும் கிடைத்துவிடவில்லை. பலர் போராடி, பலர் ரத்தம் சிந்தி, நமக்கென்று இருந்த சில பகுதிகளைப் பக்கத்து மாநிலங்களிடம் இழந்து, நமக்கென சிலவற்றைப் பெற்றிருக்கிறோம். முல்லைப்பெரியாறு, கண்ணகி கோயில் விவகாரங்களில் ஆரம்பித்து நெல்லை மாவட்டத்தில் அடவிநயினார், கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம் என நாம் இழந்த இடங்களில் எல்லாமே இன்று வரை பிரச்னைகள்! கர்நாடகத்தில் தொடர்ந்து தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள். காவிரியில் நம்முடைய நியாயமான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. கர்நாடகாவில் இருக்கும் கோலார் தங்கவயல் பகுதிகளில் இன்றும் தமிழர்களுக்குச் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

நமது நிலப் பரப்பையும் உரிமைகளையும் எடுத்துச்சொல்லும் விதமாக, 25 ஆண்டுகளுக்கு முன்பு, கலைவாணர் அரங்கத்தில், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். தமிழகத்தின் 25வது ஆண்டு நிறைவுவிழாவை அரசு சார்பில் வெகு விமரிசையாகக் கொண்டாடினார். அன்றைய விழாவில் ம.பொ.சி&யும் கலந்துகொண்டார். சென்னையில் விழா நடந்த அன்றே நாகர்கோவிலிலும் விழா நடந்தது. அங்கே பழ.நெடுமாறன், தியாகி பி.எஸ்.மணி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும் 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த 50வது ஆண்டு நிறைவு மிக முக்கியமானது!
கர்நாடகத்தில், 50வது ஆண்டு நிறைவு விழாவை, 'ஸ்வர்ண கர்நாடகா விழா' என்று கொண்டாட இருக்கி றார்கள். ஆந்திராவும், கேரளாவும்கூடக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றன. நாம்தான் அதைப் பற்றி யோசிக்காமல் இருக்கிறோம்! இது எவ்வளவு வேதனையான விஷயம்!
தெலுங்கு கங்கைத் திட்டத்துக்காக கோடிக்கணக்கில் தமிழகம் தனது பங்கை ஆந்திராவுக்குக் கொடுத்தும், சென்னைக்குத் தெலுங்கு கங்கை தண்ணீர்வரத்து இல்லை. இன்றைய ஆந்திர முதல்வர் ராஜசேகரரெட்டி பாலாற்றின் குறுக்கே கணேசபுரத்தில் அணை கட்டி, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்துவிட்டார்.

தமிழகத்தின் வட எல்லையான திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும் என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. நடத்திய போராட்டங்கள் இன்றைக்கும் வர லாற்றில் உள்ளன. தமிழக எல்லைப் பகுதி பிரச்னைக்காக காமராஜர் 'தமிழ்நாடு எல்லைக் குழு' என்ற பெயரில் ஒரு தனி அமைப்பை ஏற்படுத்தி, அதற்குத் தலைவராக சி.என்.முத்துரங்க முதலியாரை நியமித்தார். ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் சேர்ந்து, 'திருப்பதி மீது படையெடுப்பு' என்ற போராட் டத்தை நடத்தினார் ம.பொ.சி. மங்களம்கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று, வட எல்லைப் பகுதிக்குப் புகைவண்டி மூலமாக திருப்பதி வரை செல்லப் பயணப்பட்டார் ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தார்கள். கீழ்த் திருப்பதியில் உள்ள குளக்கரைக் கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்போது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினார்கள். இருப்பினும் ம.பொ.சி. அதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், 'வேங்கடத்தை விடமாட்டோம்' என்று துவங்கி ஒரு மணி நேரம் மேடையில் கர்ஜித்தார். ஆனாலும் சித்தூர், திருப்பதி இரண்டும் ஆந்திரத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதனால் ம.பொ.சி. பெரும் கவலை கொண்டு, அவை நியாயமாக தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டியவை என்று தகுந்த ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

1953&ம் ஆண்டு ஏப்ரல் மாதம், தமிழகத்தில் தொடர்ந்து 15 நாள்கள் கடை அடைப்பும், பொது வேலை நிறுத்தமும், மறியல் போராட்டங்களும் நடைபெற்றன. புத்தூர் கலவரத்தில் ம.பொ.சி.யைத் தீர்த்துக்கட்ட சதிகள் தீட்டப்பட்டன. நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றினார். 'நெல்லைத் தமிழன்' என்று அவரது பெயர் ம.பொ.சி.யின் போராட்ட வரலாற்றில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி, எல்லைத் தடையை மீறி மறியல் போராட்டம் நடத்தி, கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்றார் ம.பொ.சி.
அவரது தீவிரமான திருத்தணி எல்லைப் போராட்டத்தின் விளை வாகத்தான், திருப்பதி போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் சென்றுவிடாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல, நாஞ்சில் நாடான கன்னியாகுமரி மாவட்டத்தையும் மற்றும் செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளையும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தினார் ம.பொ.சி.

கன்னியாகுமரி, செங்கோட்டை இரண்டையும் தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி.
1954, ஜூன் மாதம் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்கள் நடத்தினார். சிறை சென்றார். நேசமணியின் கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். திரு விதாங்கூர் கல்குளத்தில் நேசமணியின் கைதைக் கண்டித்து, மக்களும் ஒரு பேரணி நடத்தினர்.

1950&ல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இது குறித்து கேரள முதல் அமைச்சரும், அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளை நேசமணி ஏற்றுக் கொள்ளாமல், கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும், எந்த சமரச திட் டத்துக்கும் தயார் இல்லை எனவும் தெரிவித்தார். அரசு அலுவலகங்கள் முன் பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீஸாரால் சுடப்பட்டு மாண்டனர். குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீ ஸா£ரின் குண்டாந்தடியால் அடித்து உதைக்கப்பட்டனர்.

இறுதியாக காமராஜரும், திரு விதாங்கூர் கொச்சி உள்ளடக்கிய கேரள முதலமைச்சர் பனபள்ளி கோவிந்தமேனனும் சந்தித்துப் பேசிய பின் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக் கொண்டது. இதற்குத் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்பு! கன்னியா குமரியும் செங்கோட்டையும் தமிழ கத்தில் இணைந்தன.

தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் இடையே உள்ள எல்லை கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை, கொல்லங்கோடு வரை நீண்டுள்ளது. இதில் 203 கி.மீ. அளவில்தான் எல்லை சரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிச்சமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கிறது. காரணம், இதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், கண்ணகி கோயில் தமிழகத்தில் இருந்தாலும், தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினால் அத்துமீறி தாக்கப்படுகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள தாளவாடியை கர்நாடகத்தில் சேர்க்க வாட்டாள் நாகராஜ் போராட்டம் நடத்தி வருகிறார். ஏற்கெனவே கொள்ளேகால், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்துள்ளோம்.
ஆக, பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகம், கேரளம் மூன்றும் தமிழகத்தோடு எதிலும் அனுசரித்துப் போக மறுக்கின்றன. தமிழ்நாடு என்னும் பெயரின் பின்னால் நமது முன்னோர் களின் தியாக வரலாறுகள் ஏராளம் இருக்க, நாம் இந்த 50 ஆண்டு நிறையும் தருணத்தில் மௌனமாக இருக்கலாமா? நம் சரித்திரத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் "தமிழ்நாடு 50" நிறைவைக் கொண்டாட வேண்டாமா? நமது உரிமை களை அடையாளம் கண்டுகொள்ள வேண்டாமா?

இதற்காகவே, வரும் நவம்பர் மாதம் 1ஆம் தேதி, ஒரு பெரிய விழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதில் வைகோ, பழ.நெடுமாறன், இரா.செழியன் எனப் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
தமிழன் என்று சொல்லவும் தலை நிமிர்ந்து நிற்கவும் இது இன்னுமொரு தருணம்!

- வழக்கறிஞர் கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

நன்றி : http://maposi.blogspot.com/2010/01/50.html


http://sirappupaarvai.blogspot.com



  • http://sirappupaarvai.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger