Friday, 23 September 2011

அணு மின் நிலையங்���ள் மக்கள் உயிரி��ும் முக்கியமான​���ல்ல: நாம் தமிழர் கட்சி (படங்கள்)



கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுவரும் அணு மின் நிலையங்களை மூடக்கோரி இடிந்தகரையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும், அணு மின் நிலையங்களை விட, மக்கள் உயிர் வாழ்விற்குத்தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கை:

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், இரஷ்ய நாட்டு உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் அணு மின் நிலையங்களை அகற்றக்கோரி, இடிந்தகரையில் அப்பகுதி தமிழ் மக்கள் நடத்திவரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று 7வது நாளாக தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. உண்ணாவிரதமிருந்த பலரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்கிற செய்தி வருத்தத்தை அளித்தாலும், போராட்டத்தின் நியாயத்தை உணர்த்த வேறு வழியில்லாத நிலையில் அப்போராட்டம் தொடர்வது அவசியமாகிறது. தமிழர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போராடிவரும் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி தனது ஆதரவைத் தெரிவித்துககொள்கிறது. கடந்த வாரம் நாம் நேரில் சென்று போராடும் தமிழர்களோடு என்னை இணைத்துக்கொண்டு என் ஆதரவை தெரிவித்து வந்தேன்.

நமது நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, எனவே அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டம் நாட்டிற்கு அவசியமானது என்பது மத்தியில் ஆள்வோரின் வாதமாய் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இது சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத ஒரு தொழில்நுட்பம் என்று கூறித்தான் மத்திய அரசு அமெரிக்க அரசுடன் அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்திய அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்குப் பின்னர், பல நாடுகளுடன் இதேபோன்று ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ள மத்திய அரசு, முதல் கட்டமாக, மராட்டிய மாநிலம், இரத்தினகிரியில் 1,650 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 6 அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை பிரான்ஸ் நாட்டின் அரேவா நிறுவனத்திற்கு அளித்தது. அதற்கு அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து இன்று வரை போராடி வருகின்றனர். இவர்களுக்கு மராட்டிய மாநிலத்தின் பல்வேறு மனித உரிமை, பொது நல அமைப்புகளும் துணை நின்று போராடி வருகின்றன. எந்த அடிப்படையில் மராட்டிய மாநில மக்கள் அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரோ, அதே அடிப்படையில்தான் கூடங்குளத்தைச் சுற்றி வாழும் தமிழர்களும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். தமிழர்களின் எந்த ஒரு நியாயமான கோரிக்கையையும் பொருட்படுத்தாத மத்திய காங்கிரஸ் அரசு இந்த அறப்போராட்டதையும் கண்டும் காணாமல் இருக்கிறது.

அணு உலைகளில் இருந்து வெளியேரும் சாதாரண கதிர்வீச்சால் சுற்றுச் சூழலிற்கும், உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பும், அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அதனால் ஏற்படும் உயிர்ப் பேரழிவு குறித்த அச்சமே, கூடங்குளம் மக்கள் இந்த அளவிற்கு கடுமையாக எதிர்ப்பதற்குக் காரணங்களாகும். அணுத் தொழில் நுட்பம் என்பது ஒருபோதும் பாதுகாப்பானதல்ல என்பதுதான் உலக அளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும். அதனை நிரூபிப்பதுபோன்று நடந்ததுதான், கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி ஜப்பான் நாட்டை உலுக்கிய கடுமையாக பூகம்பத்தினால் உருவான ஆழிப்பேரலைத் தாக்குதலில், புகுஷிமா மாகாணத்தில் இயங்கிவந்த டாய்ச்சி அணு உலைகளில் ஏற்பட்ட பாதிப்பும், அதன் விளைவாக உருவான கதிர் வீச்சுப் பரவலுமாகும். பூகம்பத்தால் பாதிக்கப்படாதது, எப்படிப்பட்ட விபத்து ஏற்பட்டாலும், சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட நவீன அணு உலைகள் என்றுதான் ஜப்பான் அரசு உறுதியளித்தது. ஆனால், பூகம்பத்தால் அல்ல, அது உருவாக்கிய ஆழிப்பேரலையால் அணு உலைகளின் குளிரூட்டிகளுக்குச் செல்லும் மின்சாரம் தடைபட்டதால், அணு உலை செயலிழக்கச்செய்யப்பட்ட பின்பும், அணு உலையில் இருந்து கதிர் வீச்சு வெளிப்பட்டது. அதன் தாக்கம் 8,600 கி.மீ. தூரத்திலுள்ள அமெரிக்காவை எட்டியது.

அயோடின், சீசியம் போன்ற கதிர் வீச்சுத் துகள்கள் காற்றில் கலந்தன. இப்படிப்பட்ட கதிர் வீச்சுகள் உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு என்பது மிகப் பயங்கரமானது. அது திசுக்களின் உற்பத்தியில் ஏற்படுத்தும் பாதிப்பு எதிர்கால தலைமுறைகளை முடமாக்கக் கூடியவையாகும். எனவேதான், புகுஷிமா அணு உலைகள் ஜப்பானுக்கு மட்டுமின்றி, உலகிற்கே மிகப் பெரிய அச்சுறுத்தலை உருவாக்கின. இன்றைக்கு அந்த அணு உலைகளின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அணு உலைகள் தேவையா? என்ற கேள்வி அந்நாட்டில் பலமாக விவாதிக்கப்படுகிறது.

ஜப்பான் போன்ற உலகின் தலைசிறந்த தொழில் நுட்ப முன்னேற்றம் கண்ட நாட்டிலேயே அணு உலை விபத்து நடந்தால் இந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுமென்றால், நெருக்கமாக மக்கள் வாழும் நமது நாட்டில் ஏற்பட்டால் என்ன ஆகும்? ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்டதுபோல், நமது நாட்டில் அந்த அளவிற்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்படாது, எனவே அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், இந்தோனிசியாவை ஒட்டிய கடற்பகுதியில் 2004ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிகக் கடுமையான பூகம்பமும், அதன் காரணமாக ஏற்பட்ட ஆழிப்பேரலைத் தாக்குதலில் தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும் மறந்துவிடக் கூடியதா?

எதிர்காலத்தில் இதேபோன்றதொரு கடுமையான பூகம்பம் (அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதென புவியாளர்கள் கூறுகின்றனர்) ஏற்பட்டு, அதனால் உருவாகும் ஆழிப்பேரலைத் தாக்குதலுக்கு கூடங்குளம் அணு மின் நிலையங்கள் உள்ளாகும்போது அது எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பார்க்க வேண்டும். ஏனெனில் கூடங்குளத்தில் இருந்து 28 சதுர கி.மீ. சுற்றளவில் – நாகர்கோயில் நகரத்தையும் உள்ளடக்கி – இரண்டரை இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.

அணு சக்தியினால் பெறும் மின்சாரத்தை அதிக அளவிற்கு பயன்படுத்தும் நாடான பிரான்சில் சில நாட்களுக்கு முன்னர், அணுக் கழிவுகள் உருக்குக் கூடத்தில் நடந்த வெடி விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது உலக அளவில் அணு உலைகள் தொடர்பான அச்சத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, உலகின் மிகவும் முன்னேறிய நாடான ஜெர்மனி, புகுஷிமா விபத்திற்குப் பிறகு, தனது அணு உலைகள் அனைத்தையும் அடுத்த 22 ஆண்டுகளுக்குள் படிப்படியாய் மூடிவிட முடிவு செய்துள்ளது.

அணு உலை மறுப்பு இயக்கம் உலக அளவில் வலுப்பெற்று வருகிறது.இப்படிப்பட்ட பின்னணியில், இன்று நாம் பதில் காண வேண்டிய வினா யாதெனில், மக்கள் உயிர் முக்கியமா? அல்லது நாட்டின் மின் தேவை நிறைவு செய்ய அணு உலைகள் முக்கியமா? அணு உலைகளைத் தவிர்த்து மின்சாரம் தயாரிக்க அனல் மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலைகள், மரபு சாரா எரிசக்திகள் ஆகியன மட்டுமின்றி, என்றென்றும் கிடைக்கும் சூரிய சக்தி பெரும் அளவு மின் தயாரிப்பிற்கு ஆதாரமானதாகும். ஆகவே, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அணு மின் உலைகளுக்கு மறுப்பு தெரிவிப்போம், மக்களின் உயிர் காக்கும் தொழில் நுட்பங்களுக்கு கதவைத் திறப்போம்.




http://dinasarinews.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger